கதைகள்

நடுகைக்காரி!… தொடர் 4 …. ( குறு நாவல் )….. ஏலையா க.முருகதாசன்.

                 

தொடர் 4.

சைக்கிளை உருட்டியபடி ஞானசெல்வம் பார்வதியுடன் அருகே நடந்து சந்தைவரை வந்தவன்,இனி எந்த ஒழுங்iயாலை போக வேண்டுமென்று கேட்க,இந்தப் பாலத்து ஒழுங்கையாலும் போகலாம் இல்லாட்டில் யூனியன் கொலிஜ்ஜின் மேற்குப் பக்கத்து மதிலுக்கும் யூனியன் கொலிஜின் இரண்டாவது மைதானத்துக்கும் இடையில் உள்ள ஒழுங்கையாலும் போகலாம் என்கிறாள்.

ஆனால் மழை காலத்திலை இந்தப் பாலத்து ஒழுங்கையாலைதான் போய்வருவம்.மழை காலத்திலையும் அந்த ஒழுங்கையாலை போக முடியுந்தான் ஆனால் வெள்ளவாய்க்காலிலை முழங்காலுக்கு மேலாக வெள்ளம் நிற்கும்,அந்த வெள்ளத்திற்குள் நடந்துதான் போக வேணும்.ஒழுங்கையும் சேறும் சகதியுமாக இருக்கும் என்பதால் ஒழுங்கையாலை போறதை நான் விரும்பிறேலை என்று பார்வதி சொல்லிக் கொண்டே ஞானசெல்வத்துடன் பாலத்தில் ஏறி நடந்து கொண்டிருந்தாள்.

பாலத்தின் முடிவில் ஒழுங்கையின் ஆரம்ப மேற்குப்புறத்தில் வைத்திலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின்; வீடு இருக்கின்றது. அதே நேருக்கு ஒழுங்கைக்கு கிழக்குப் பக்கத்தில் இராஜலிங்கம் மோகனாதேவி தம்பதிகளின் வீடு இருக்கின்றது.

வைத்திலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகள் கிழக்குப் பக்கத்து அடுப்படி வெளிக் கதவடியிலிருந்து போவோர் வருவோரை புதினம் பார்ப்பதும் சில வேளைகளில் ஒழுங்கைக்கு கிழக்குப் பக்கத்திலிருக்கும் இராஜலிங்கம் மோகனாதேவி அவர்கள் கேற்றடியில் நிற்பார்களாயின் அவர்களுடன் நாட்டு நடப்புகள் கதைப்பதுமுண்டு.

பாலத்தைக் கடந்து பார்வதியும் ஞானசெல்வமும் ஒழுங்கையில் நடந்து சிறிது தூரம் போனதும், இராஜலிங்கத்தின் மனைவி மோகனாதேவி’ உதிலை போற பெட்டை யாரென்று தெரியுமோ என்று பரமேஸ்வரியைக் கேட்க, „தெரியேலை ஆர் „ என்று பரமேஸ்வரி கேட்க, „உதுதூன் உந்த தவசி செல்லாச்சியின்ரை பெட்டை, அதுகளுக்கு வந்த காலத்தைப் பாரன் காலிலை சிலிப்பரும் அவாவும், பார்க்கிறது புல்லுப் புடுங்கிற வேலை எண்ணமோ பெரிசு என்று மேகனாதேவி’ சொல்ல, அது சரி பக்கத்திலை உரஞ்சிக் கொண்டு போற பொடியன் சொந்தக்காரப் பொடியனோ’ என்று பரமேஸ்வரி கேட்க,’நான் நினைக்கேலை, பொடியனைப் பார்க்க அவையின்ரை பொடியன் மாதிரித் தெரியேலை,அம்பனைத் தோட்டக்காரர் யாற்றையேனும் பொடியனாக இருக்கலாம் அவள் புளியங் கொம்பாய் பிடிக்க நினைக்கிறாள் போல’ என அவர்களிருவரும் கதைச்;சது ஞானசெல்வத்தின் காதிலும் பார்வதியின் காதிலும் விழத்தான் செய்தது.

பார்வதியின் முகம் மாறிப் போனதைக் கண்ட ஞானசெல்வம்,மெதுவாக அவளின் தோளை அணைத்து „இதுக்கெல்லாம் கவலைப்படாதீர்கள், இப்படி மட்டுமல்ல இதைவிட மோசமாகவும் எங்கள் இரண்டு பேரைப் பற்றியும் கதை வரத்தான் போகுது.அவை சொல்லுவினம் இவை சொல்லுவினம் என்று பயந்தால் நாங்கள் இரண்டு பேரும் காதலில் வென்று புருசன் பெண்சாதியாக முடியாது என்றவனை கனிவுடன் பார்க்கிறாள் பார்வதி.

எல்லா வெற்றிக்கும் சாதனைக்கும் துணிவும் பயமின்மையும் தயக்கமின்மையுந்தான் முக்கியம் காதலர்களுக்கும் அது தேவை அதிலும் உங்களுக்கும் எனக்கும் இன்னும் அதிகம் தேவை என்றவன் அவளுடைய மனநிலையை மாற்றுவதற்காக அவளின் தலைமயிரை வருடிக் கொடுத்துக் கொண்டே மீண்டும் ஒழுங்கையைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினான்.

ஒவ்வொருவரும் தான் நடந்து போற ஒழுங்கை, தங்களுடைய பாதை என சிந்தித்தால் இப்படியெல்லாம் நடக்காது.தனக்கென்ன யாற்றையோ ஒழுங்கை பாதை என நினைக்கிறவையாலைதான் ஒழுங்கைகள் குப்பையும் கஞ்சலுமாக இருக்கின்றன.

வீட்டையும் வீட்டு முற்றத்தையும் எப்படிச் சுத்தமாக வைச்சிருக்கிறோமோ அப்படித்தான் ஒழுங்கைகளையும் சுத்தமாக வைச்சிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும்.வீட்டை, வீட்டு முற்றத்தை இரசிப்பது போல ஒழுங்கைகளின் அழகை இரசிக்க வேண்டும்….

ஒழுங்கைகள் பாதைகள் என்பன அது மனிதர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவர்களின் பாதங்களோடும் தாங்கி வைச்சிருப்பவை.

ஒழுங்கைகள் மீது எத்தனை சைக்கிள்கள்,எத்தனை வண்டிகள்,எத்தனை மனிதர்கள் சென்றிருப்பார்கள்.

வண்டில்களில் பூட்டிய மாடுகளின் மணிச் சத்தங்களையும்,சைக்கிளின் மணிச் சத்தங்களையும்,குடிச்சுப் போட்டு வெறி தலைக்கேற எது பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவர்களின் வாயிலிருந்து குழறிக் குழறி வரும் தூசண வார்த்தைகளையும்,ஞானோதயம் வந்துவிட்டது போல அவர்கள் உதிர்க்கும் தத்துவங்களையும், எங்களைப் போன்ற காதலன் காதலிகள் தம்மை மறந்து கதைக்கும் வார்த்தைகளையும்,இருட்டாகும் நேரத்தில் யாருமே பார்க்கமாட்டார்கள் என நினைச்சுக் கொண்டு ஒருவருக்கொருவர் இறுக்கமாக உடல்களை அணைத்துக் கொண்டு பரிமாறும் இதழ் முத்தங்களையும் இப்படி எத்தனையோ காட்சிகளை ஒழுங்கைகள் உள்வாங்கி இரசித்திருக்கின்றன.இயற்கை எம்மை இரசிக்கவும் செய்யும் எம்மீது கோபப்படவும் செய்யும்.

 

ஒழுங்கைகள் வீதிகள் பாதைகள் என்பவைதான் வியாபாரத்திற்கான ஊடகமாகவும் போக்குவரத்தக்கும் உதவி செய்கின்றன.வளர்ச்சியடைந்த நாடுகளில் வீதிகள் அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஞானசெல்வத்தை பார்வதி கூர்ந்து பார்க்கிறாள்.மதகில் இருந்து அரட்டை அடிக்கும் ஞானசெல்வம் வேறு.ஒரு சிந்தனையாளனாக தன்னுடன் கதைச்சுக் கொண்டு வரும் ஞானசெல்வம் வேறு என அவள் யோசித்து தன்னுடைய வாழ்க்கையைச் சரியான ஒருவரிடந்தான் ஒப்படைச்சிருக்கிறன் எனப் பரவசமடைஞ்சு அவனின் கையை இறுக்கிப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள்;.

அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் ஒழுங்கையின் இருமருங்கையும் பார்த்த ஞானசெல்வம் ஒழுங்கையின் இருமருங்கிலும் புல்பூண்டுகளும் கஞ்சலும் குப்பையுமாக இருப்பதைக் கண்ட அவன் இந்த ஒழுங்கையை நீங்கள் ஆட்களைச் சேர்த்து கூட்டலாந்தானே என்றவன்….

நானும் வந்து உதவி செய்கிறன் என்று சொல்ல, அது முடியிற காரியமா என அவள் கேட்க,முடியும் முதலிலை நீங்கள் விளக்குமாற்றை எடுத்துக் கூட்டத் தொடங்குங்கள்.ஒழுங்கைக்கு அருகில் உள்ளவர்கள் மட்டுமல்ல அடுத்தடுத்த வீட்டுக்காரர்களும் தானாக உங்களுடன் வந்து சேர்வார்கள்…..

ஒழுங்கையை கூட்டித் துப்பரவாக்கிவிட்டு,துப்பரவாக்கிய நிலத்தைப் பாருங்கள் அதில் ஒரு அழகும் கலையும் இருக்கும்.கண்ணுக்குச் சுகமாகவும் இருக்கும்.

அழகு என்பது சுத்தத்திலும் துப்பரவிலும்; இருந்துதான் பிறக்கும் என்று அவன் சொன்னதை இரசிச்சுக் கேட்டவாறு நடந்து கொண்டிருக்கும் போது,அவளுக்கு முன்னால் ஒழுங்கைக்கு மேற்குப்புறத்திலிருந்த விளாத்தி

மரத்திலிருந்து ஒழுங்கைமேல் கிளை பரப்பியிருந்த கிளையிலிருந்து விளாம் பழமொன்று விழ அதை எடுத்தவள் „உடைச்சுச் சாப்பிடுவமா’ என்று ஞானசெல்வத்தைக் கேட்டவள், அவனின் பதிலுக்குக் காத்திராமல்,சைக்கிளை உருட்டாமல் நில்லுங்கள் என்று சொல்லி;,விலத்தி நில்லுங்கள் என்றவள் விளாம்பழத்தை சைக்கிள் பாரில் மெதுவாகத் தட்டி உடைச்சு பாதியாக உடைச்ச விளாம்பழ ஒடுகளுக்குள் விளாம்பழச் சதையை பிரிச்சு வைச்சுக்; கொண்டே பொறுங்கள் என்றவள் ஒழுங்கையருகில் இருந்த வீட்டு படலையைத் திறந்து,இராமாச்சி சக்கரை இருந்தால் கொஞ்சம் தாருங்கள் என்று அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த இராமாச்சியிடம் கேட்க,இராமாச்சி „ ஏன் பிள்ளை சக்கரை என்று கேட்டபடி அடுப்படிக்குள் போக,விளாம்பழத்துக்கு போட்டு குழைச்சுச் சாப்பிடத்தான் என்று பார்வதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இராமாச்சி சர்க்கரை போட்டு வைச்சிருந்த கொர்லிக்ஸ் போத்தலைக் கொண்டுவர இராமாச்சி இந்த இரண்டு ஒடுகளுக்குள்ளும் சக்கரையைப் போட்டு குழைச்சு தாருங்கள் என்று கேட்க,இராமாச்சி சக்கரையைப் போட்டு குழைச்சபடியே படலைக்குள்ளாலை ஒழுங்கையில் நின்ற ஞானசெல்வத்தைக் கண்டவள் „ ஆர் பிள்ளை அதிலை நிற்கிறது „ என்று கேட்க, பார்வதி வேகமாக இராமாச்சிக்கு விளங்கியும் விளங்காத மாதிரி „ அவரா அவர் என்னுடைய ஆள்’ என்று சொன்னவள் இராமாச்சியிடமிருந்து விளாம்பழ பாதிகளை வாங்கிக் கொண்டு வந்து ஒரு பாதியை ஞானசெல்வத்திடம் கொடுக்க,சைக்கிளை உருட்டிக் கொண்டு எப்படிச் சாப்பிடுவது என்று கேட்டவன் அந்த இலுப்பையடியிலை போய் நின்று சாப்பிடுவம் என்று சொல்ல இருவரும் ஒழுங்கை வேலியோடு இருக்கும் இலுப்பையடிக்குப் போகிறார்கள்.

„இவள் என்ன என்னுடைய ஆள் „ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்.அது யாராக இருக்கும் என்ற ஆவலில் இராமாச்சி சக்கரைப் போத்தலுடன் படலையடிக்கு வந்து இலுப்பை மரத்தடியில் நின்று விளாம்பழம் சாப்பிட்டுக்

கொண்டிருக்கும் பார்வதியையும் ஞானசெல்வத்தையும் பார்த்தவள் இந்தப் பொடியன் யாராக இருக்கும் என யோசிக்கிறாள்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஞானசெல்வம் விளாம்பழச் சதையை விரல்களால் எடுத்து பார்வதியின் வாய்க்குள் வைக்க, பார்வதியும் விளாம்பழச் சதையை எடுத்து ஞானசெல்வத்தின் வாய்க்குள் வைப்பதை இராமாச்சி பார்த்து விடுகிறாள்.

அவர்கள் நிற்கும் இடத்திலிருந்து நூறு மீற்றர் நடந்து வலப்பக்க ஒழுங்கையில் நூறு மீற்றர் நடந்து போனால் வடக்குப் பக்கத்தில்தான் பார்வதியின் வீடு இருக்கின்றது.

வலம் இடமாக இருக்கும் ஒழுங்கை வரையும் நடந்து வந்தவர்கள்,அதில் நின்றபடியே கதைச்சுக் கொண்டிருக்கையில் ஞானசெல்வம் உங்கடை வீடு எங்கையிருக்கு என்று கேட்க அங்கை தெரியுதே சீட் வீடு அதுதான் என்னுடைய வீடு என்று பார்வதி சொல்ல, சரி வாருங்கள் வீடு வரையும் கொண்டுவந்து விடுகிறன் என்று அவன் சொல்லி முடிக்குமுன்,..ஐயையோ இண்டைக்கு வேண்டாம் இன்னொரு நாளைக்கு வாருங்கள் என்கிறாள்.

ஞானசெல்வத்தை இரு கைகளாலும் அணைத்தபடி „என்னைவிட இந்த ஒழுங்கையிலை உங்களுக்கு அப்படி என்ன அக்கறை’ என்று பார்வதி கேட்க,அவன் என்னுடைய அன்பான காதலியின் பூப்பாதங்களை தாங்கி நிற்கும் ஒழுங்கையல்லவா இது என்று நகைச்சுவையாகச் சொல்கிறான்.

நான் நேரத்தோட வந்தது எப்படி என்று அம்மாவும் அப்பாவும் கேட்பினம்,மெதுவாக நீங்கள்தான் கூட்டிக் கொண்டு வந்து விட்டனீங்கள் என்று சொல்லிச் சமாளிக்க வேணும்.

எல்லாம் படிப்படியாகத்தான் சொல்ல வேண்டும்.நினைச்சால் கொஞ்சம் மனம் படபடக்கத்தான் செய்கிறது.

நீங்கள் கவனமாகப் போங்கள் என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் காதல் தழும்பி நிற்பதைக் கண்ட ஞானசெல்வம் அவளின் இடுப்பை கைகளால் அணைக்க அதை விரும்பிய அவள் சில விநாடிகள் அந்தச் சுகத்தை அனுபவிச்சவள்’ வீட்டுக்குப் பக்கத்திலை நிற்கிறம்,யாராவது பார்த்திடுவினம் என்று சொல்லிக் கொண்டே ;,ஞானசெல்வத்தின் மார்பில் திடீரென்று சாய்ந்துவிட்டு தலையை எடுத்தவள், „சரி நான் வாறன் நாளைக்கு மாணிக்கத்தாற்றை தோட்த்திலை சந்திப்பம்’ என்றவள் , பிரிய மனமில்லாது தனது வீட்டை நோக்கி நடந்தவள், திரும்பி திரும்பிப் பார்த்தபடி நடக்கிறாள்.

வீட்டடிக்குப் போனவள்,படலையில் நின்று கையைக் காட்டிவிட்டு படலையைத் தாண்டிப் போக ஞானசெல்வமும் கையைக் காட்டிவிட்டு சைக்கிளில் வீடு நோக்கிப் போகிறான்.

தங்களுடைய வீட்டுக் கேற்றைத் தாண்டி போன ஞானசெல்வம் சைக்கிளை நிற்பாட்டிவிட்டு முற்றத்தில் இருந்த வாளித் தண்ணீரில்: கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு விறாந்தையில் கால் வைக்க,’இவ்வளவு நேரமும் எங்கை நின்றிட்டு வாறாய்,இராஜலிங்கம் மோகனாதேவி இருக்கிற சந்தையடி ஒழுங்கையாலை போனாயாமே…அந்த ஒழுங்கையாலை எங்கை போனனி’ என்று தாய்; கேட்க,தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவாறு அறையை நோக்கி நடக்கிறான் ஞானசெல்வம்…

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *