இந்திய–இலங்கை உறவும் வெளியுறவுக்கொள்கைகளும்!… சட்டத்தரணி செ.ரவீந்திரன் – ஆஸ்திரேலியா

கரப்பருந்த நாடுங் கடன்.
இந்திய–இலங்கை உறவும்
வெளியுறவுக்கொள்கைகளும்…. ![]()
தனது விடுதலைப் போராட்டத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இந்தியாவின் நிலைப்பாட்டை பற்றி சரியாகக் கணித்தவர் பிரபாகரன்.
இந்தியா ஒருபோதும் ஒரு சுதந்திரத் தமிழ் ஈழம் உருவாக அனுமதிக்காது. அதற்காகத் தமிழ் மக்கள் இந்தியாவுடன் போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாதுதான். இந்தியாவோடு ஒரு நாள் மோதவே வேண்டும் என்று கணக்கெடுத்தவர் அவர்.
இந்திராகாந்தியின் நேர்முகச் சந்திப்பை தவிர்த்ததிற்கும், எம். ஜி.ஆரிடம் எவ்வளவோ சலுகைகளைப் பெற்றாலும், ஒடும் புளியம்பழமும் போலவே உறவை வைத்துக் கொண்டமைக்கும், பின்னர் கருணாநிதியுடன் புலிகள் வளர்த்துக் கொண்ட நட்புக்கும் இவையே காரணம்.
பிரபாகரனை முதன்முதலில் ஒரு விரிவான நேர்முகப்பேட்டியினால் ஒரு விடுதலை நாயகனாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அனிதா பிரதாப் என்ற இந்திய நிருபர்.
பின்னர் அடிக்கடி அனிதா பிரதாப்பிற்கு பிரபாகரன் பேட்டிகள் கொடுப்பது வழக்கம். இவை புலிகளின் முக்கிய கேந்திர நகர்வுகளை உணர்த்தும் என்று மற்றோரால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன.
தனது பின்னடைவு, இந்தியாவின் இந்த நிலைப்பாட்டினால்தான் நடைபெறும், அதை அறிந்தே செயல்படுகிறேன் என்று தம்மிடம் கூறியவற்றை அனிதாபிரதாப் ஓர் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.
காந்தி முன்னெடுத்துச் சென்ற சுதந்திரப் போராட்டத்தில் இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லோரும் ஒருங்கிணைந்தனர். அதில் இந்தியா என்ற உணர்வு கட்டி எழுப்பப்பட்டது. சுதந்திரத்துக்கு சில காலங்களுக்கு முன் ஜின்னாவைத் தூண்டி, மத ரீதியாக அந்த இந்தியாவை துண்டாடி, ஆங்கில அரசு பாகிஸ்தானை அமைத்தது. அதேபோல் ஹைதராபாத்
நிஜாம், திருவிதாங்கூர் மன்னார் போன்று தெற்கிலும் சிலரை பாவித்து மேலும் துண்டாட வழிமுறைகள் தேடப்பட்டன. அவை தடுக்கப்பட்டன.
என்றாலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் எவ்வளவோ கருத்து வேற்றுமைகள் இருந்தன. இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் என வடக்கு அடம்பிடிக்க, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முக்கியமாக தமிழ் நாட்டில் ஓங்கியது.
அந்த ஆதிக்கம் ஈ.வே.ரா. பெரியார், அண்ணா காலத்திலிருந்து தனிநாட்டுக் கோரிக்கையாக வளர்ந்து பின்னாளில் கைவிடப்பட்டது. ஆனால், அதை உள்ளார்ந்த உணர்வாக டெல்லி கருதவில்லை. அந்த உணர்வு இன்னும் சில கட்சிகளினால் பேசப்படுகிறது.
ஆகவே, தனித் தமிழீழம் என்ற கோரிக்கை வரும்போது, இந்தியா அது உருவானால் தனது இறைமைக்கு இது தூண்டுகோலாகும் என்று கருதுகிறது.
பங்களாதேசத்தை அமைக்கும்போது இந்தியாவுடன் இணைந்த வங்காளம் அதனோடு சேர்ந்து அகண்ட வங்காளம் இந்தியாவின் இறைமைக்கு எதிராக உருவாகும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கவில்லை.
ஆனால், சுதந்திரமான தமிழீழத்தால் இந்தியாவின் தென்பகுதியில் ஹிந்தியின் திணிப்புக்கு இடைஞ்சல்கள் இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறது புதுடில்லி.
சர்வதேச சூழலில் இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியே எங்களது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலிமையாக வெளிப்படுத்தியவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் (ரெலோ) சிறி சபாரத்தினம்.
ஆனால், அவரும் அவரது இயக்கமும் அழிக்கப்பட்டன.
இந்தப் பின்னணியில் பிரபாகரன் எடுத்த கணிப்புக்கள் சரியானதாலும் இடைப்பட்ட காலங்களில், புலிகளின் ஏகோபித்த அதிகாரங்களுக்காக எடுக்கப்பட்ட வியூகங்கள்தான் தமிழ் மக்களுக்கு இந்த நீண்ட போராட்டத்தால் பயன் கொடுக்கவில்லை.
இந்தியாவுடன் நேருக்குநேர், ஆயுதப் போராட்டம் என்றெடுக்கப்பட்ட வியூகம் தன் வலியும் பிறன் வலியும் மாற்றான் வலியும் உணராத, அன்றில் உணர்ந்தும் அதனால் வரக்கூடிய சேதங்களைப் பற்றி
அக்கறையின்றி தம்மை நிலை நிறுத்துவதற்காக எடுக்கப்பட்டது. அது உதவிகளுக்காக இலங்கை அரசிடம் போக வைத்தது.
பிரேமதாசா அவர்களை பாவித்து தாங்களே நேரே மோத விரும்பாத இந்தியாவை தமிழர்களிடம் இருந்து பிரித்து அனுப்பியது.
இந்த இயக்கப் போராட்டங்களும், ஒவ்வொரு இயக்கமும் தங்களை வளர்த்துக் கொள்ள, மற்றவர்களுக்கு குழி பறித்தும் கடைசியில் எல்லோருமே, தங்களை தாங்கள் அழித்து கொண்டதும் தற்போதைய இந்திய வெளிநாட்டு அமைச்சருக்கு அத்துப்படி. அதுமட்டுல்ல, இலங்கை – இந்திய ஒப்பந்த ஏற்பாட்டு காலங்களில் அவர் இலங்கையில் இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர். இந்தியாவுடனான பிரபாகரனின் போரை அவதானித்தவர். இந்தியப் படைகள் திரும்புவதை மேற்பார்வையிட்டவர்.![]()
ஆகவே, அந்தக்கால கட்டங்களில் தமிழர்களின் அவலங்களை, வேதனைகளை அவர் மட்டுமல்ல அவரின் மனைவியும் நேரடியாகவே அறிந்தவர்கள். தமிழ் மக்களின் அரசியல் இழப்புக்களை ஒட்டி அறிவுரைகள் தந்தவர். ஆயினும் அப்பொழுதும் நாங்கள் கேட்கத் தயாரில்லை.
இம்முறை தனது விஜயத்திலும் மிக அதிகாரமான பதவியிலிருந்து, தனது நேரடியான அனுபவத்தினூடாக தமிழர்கள் முதன் முதலில் தங்களுக்கு இருப்பதென்னவோ அதைத் தக்க வைத்துக்கொண்டு, பின் சர்வதேசச் சூழலை அனுசரித்து அதனை மேம்படுத்த வேண்டுமென்கிறார்.
தனது ஒற்றை புத்தியினாலும் எங்களை மிஞ்ச முடியாது என்ற மனோபாவத்திலும் பிரபாகரன் தமிழர்களுக்கு சுயாட்சியாக கிளிநொச்சியில் உருவாக்கிய கட்டமைப்பை இழந்தார். நோர்வே சமாதானப் பேச்சுக்களின்போது, இது எவ்வளவு இடித்துரைக்கப்பட்டபோதும் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.
அந்தப் பேச்சுக்கள் முறிந்து சில மாதங்களில் எனக்கு நன்கு அறிமுகமான நிருபர், தமிழ்செல்வனுடன் அது பற்றிக் கேட்டபோது அவர் ‘‘அண்ணை அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். நாங்கள் இவங்களுக்கு போட்ட அடியால்தான் இங்க கிளிநொச்சிக்கு வந்து நோர்வேக்கு கூட்டி போனவை. இனி நாங்கள் இன்னும் கொஞ்ச கூட அடி போட, திரும்பி வருவினம். அடிதான் மருந்து’’ என்று கூறினார். என்று சொன்னார்.
சர்வதேச சூழல்களை கணக்கெடுக்காது எடுக்கப்பட்ட இந்த வியூகம்தான், பின்னர் அடிகள் விழுந்தபொழுது சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பெற்ற அடி எல்லோர்மேல் பட்டது போல எல்லோருமே அனுபவப்பட்டோம்.![]()
இந்திய வெளியுறவு அமைச்சர், தற்சமயம் வருகை தந்தபோது, மிக அதிகாரமான பதவியிலிருந்து தனது நேரடியான அனுபவத்தினால் தமிழர்கள், முதன் முதலில் தங்களுக்கு இருப்பதென்னவோ, அதை தக்க வைத்துக்கொண்டு பின் சர்வதேச சூழலை அனுசரித்து அதனை மேம்படுத்த வேண்டும் என்கிறார்.
அது இந்திய ஒப்பந்தத்தினூடாக, இலங்கை ஏற்படுத்திய 13ஆம் சரத்து.
தற்சமயம் வரப்போகும் புதிய குடியரசு யாப்பில் 13ஆம் சரத்து நீக்கப்பட்டு மாகாண சபை அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் பலமாக எழுந்துள்ளன. அந்த யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம், பழையபடி குட்டையை குழப்பி அதில் ஒவ்வொரு கட்சியும், ஆயுதப் போராளிகள் போல ஆதாயம் தேட விழைகின்றன.
ஜெய்சங்கர் சொல்கிற அறிவுரை அரசியல் உரிமைகள் பற்றியது. அது இலங்கைக்கெதிரான மனித உரிமை மீறல் பற்றிய தீர்மானம் தொடர்பானதல்ல. அரசியல் தீர்வை, இந்தியாவின் உதவியுடன் பெற வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கான விமோசனங்களை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக பெறவேண்டும் என்ற பட்டறிவு எங்கள் தலைவர்களுக்கு வேண்டும். அது உண்டு. ஆனால், கட்சியின் வளர்ச்சியும் இருப்பும் மஞ்சள் காமாலை போல கண்களை மறைக்கின்றன.![]()
‘‘கரப்பருந்த நாடுங் கடன்’’ என்று திருவருட்பயனில் ஒரு விளக்கம் உண்டு. உறியிலிருந்த தயிர்சட்டியிலே ஏதோ ஒரு வழியாக ஏறி, அதனை சாப்பிட தயாராக இருந்த பூனை, குறுக்கே பறந்த ஒரு கரப்பான் பூச்சியின் மீதுகொண்ட ஆசையில் அதைப் பிடிக்க எம்பி, தயிர் சட்டியையும் கீழே விழுத்தி உடைத்து தானும் விழுந்து அடி வாங்கியதாம்.’’
தங்களைத் தங்கவைத்துக் கொண்டு இருக்கும் புலம்பெயர் தேச சமூக தலைவர்கள் காட்டும் கரப்பான் பூச்சிகளுக்கு பின்னால் ஓடி இருப்பில் இருக்கும் தயிரை கொட்டி விட்டு, 2021 இற்குப் பின், அரசியல் யாப்பில் எங்களை உள்வாங்கவில்லை என்று கோஷம் போடுவதிலோ, நாடு குட்டிச் சுவராகி விடும் என்று திட்டுவதிலோ அர்த்தமில்லை.
நாங்கள் தற்பொழுது தமிழரின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள தமிழ்த் தேசியம், தமிழரின் இணக்க அரசியல் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து அதற்குரியதான வழிவகைகளை உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும்.
அதில் காலங்கடத்தி, இருக்கின்ற சந்தர்ப்பங்களையும் தவறவிடுவதால், தமிழ் மக்களைத் தங்கள் சுயநலங்களுக்காக நட்டாற்றில் விட்ட சாதனைகளையே எங்கள் தலைவர்கள் செய்வார்கள்.
கூட்டமைப்பினருக்கு இது விளங்காததல்ல நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் புரியாததல்ல அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு விளங்காததல்ல. அதேபோல் டக்ளஸோ, பிள்ளையான், கருணா போன்றோரோ தாம் ஆயுதப் போராட்டங்கள் நடத்தியது எதற்கு என்று தெரியாதவர்களுமல்லர்.
எல்லோருக்கும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்ற உணர்வுகளுண்டு. அதனை சேமித்து, அரிசியாக்குவது தான் எல்லோருடைய கடமையும். அதற்கு நெம்புகோலை யார் எடுப்பது?
( நன்றி: யாழ். காலைக்கதிர் )
![]()