கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 14…. (உண்மைக் கதை) ஏலையா க.முருகதாசன்

ஜிஇயில் மாலைநேர செக்கண்ட் சிப்ட் வேலைக்குப் போவதும்,அந்த வேலை முடிய யோகமலரின் „என்னங்க இந்த வேலைக்குப் போய் உடம்பைக் கெடுக்கணுமா’ என்ற கவலையுடன் கூடிய சிணுங்களைச் சமாளித்து மொலக்சுக்கு போவதும் காலையில் வேலை முடிய வீட்டுக்குப் போய் முழிப்புக்கும் நித்திரைக்கும் நடுவில் படுக்கையில் கிடப்பதும் அலுப்பும் சோம்பலும் மிகுந்த உடம்புடன் மீண்டும் மாலை நேர வேலைக்கு வருவதும்,யோகமலர் ஆசையாசையாக விதம் விதமாக சமைத்துக் கொண்டு வரும் சாப்பாட்டை சாப்பாட்டு இடைவேளையின் போது சாப்பிடுவதும் அவளின் தோளில் சாய்ந்து நித்திரை கொள்ள அவள் தனது விரல்களை எனது தலைமயிருக்குள் விட்டு மெதுவாக நீவிவிட்டபடியே அவளும் சுவரில் சாய்ந்து கண்களை மூடியபடி இருப்பதும்,இடைவேளை முடியும் நேரம் பார்த்து கம்பாயம் தைத்து தந்த மலாய்ப் பெண் „யோகி’…என்று குரல் கொடுத்து எழுப்புவதும்,யோகமலரின் தோழிகள், போதும் எழுப்புங்க என்று கிண்டலடித்து எங்கள் இருவரையும் எழுப்புவதும் தினசரி நடக்கும் விடயங்களே.

அவள் தோள்மீது படுத்து எழுந்த எனது சோர்வான முகத்தைப் பார்க்கும் அவள் „சொன்னா கேட்கவா போறீங்க, இந்த வாரத்தோட இரவு வேலைக்குப் போறத நிறுத்திடனும், உங்கள பார்க்க ரொம்பக் கஸ்டமா இருக்குதுங்க என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள்.

எனக்கும் அவளுக்குமாக உணவை ஒரே பெட்டியில் கொண்டு வந்து நாமிருவரும் பகிர்ந்து சாப்பிடுவதை சிறீலங்காப் பிள்ளைகள் தலையை நிமிர்த்தியும் தலையைச் சாய்த்தும் பார்ப்பதும்,நடக்கிற கூத்தைப் பாருங்க இது என்ன பக்ரறியா இல்லாட்டி பார்க்கா சகிக்க முடியேலை, அந்தாளுக்கு ஊரிலை பெண்சாதி பிள்ளைகள் இருக்குது அவளிலை

மயங்கிப் போய் கிடக்கிறார் என்று ஒருத்தி சொல்ல இன்னொருத்தி „நான் இவர் செய்யிற கூத்தை ஊருக்குக் கடிதமாக எழுதிப் போடுவன், எனக்கேன் தேவையில்லாத வேலை என்று பேசாமல் இருக்கிறன் அற நனைச்சவனுக்கு குளிரென்ன கூதல் என்ன „ என்று அந்தாள் நடக்குது என்று அவர்கள் தாழ்ந்த குரலில் கதைப்பது எனக்குத் துல்லியமாகக் கேட்கும்.

யோகமலரும் „ என்னங்க அவங்க நம்மைப்பற்றித்தானே ஏதோ பேசுறாங்க போல இருக்குங்க, உங்களுக்கு புரியுதா, எனக்கு கொஞ்சம் புரியுதுங்க „ என்று சுவரோடு சாய்ந்து தலையை வைச்சிருந்தவள், சுவரிலிருந்து தலையை எடுத்து குனிந்து தலையைச் சரித்து அவர்களைப் பார்க்க’இஞ்சை பார்க்கிறாள் அவளின்ரை முகம் இப்ப நல்ல வெளிச்சமாயும் அழகு பெயர்ந்து போயும் கிடக்குது,வேறை அது நடக்குதோ தெரியாது’ என்று எனது ஊர்ப்பிள்ளை சொல்வது எனக்கும் கேட்டது அவளுக்கும் கேட்டது.

„அவை என்னண்டாலும் சொல்லட்டும் விடுங்கோ’ என்று அவளை சமாதானப்படுத்தினன்.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சாப்பாடும் சுடுதண்ணிப் போத்தலில் சுக்குக் கோப்பியும் கொண்டு வந்து தரும் அவள் இரண்டு சுடுதண்ணிப் போத்தல்களை வாங்கி வைத்துத்தான் மாறி மாறி இப்படிச் செய்கிறாள் என்பது அவளை நினைக்கும் போது,ஏன் இப்படி எல்லாம் என்மீது அன்பு காட்டுகிறாள் என வியந்து போயிருக்கிறன்.

இதை எழுதும் போது அவளோடு வாழ்ந்து கிட்டத்தட்ட 39 வருடங்களாகிவிட்டன.ஆனால் அவள் என்மீது காட்டிய பரிவும் பாசமும் மனைவி என்று உரிமையுடன் வாழ்ந்த காலமும் இன்னும் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன.

காதலிக்கும் போது காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலனோ காதலியோ விரும்பும் உணவுகளை கடைகளில் வாங்கியோ அல்லது அவரவர் வீடுகளில் அதனைச் சமைக்கும் போது தாய் தகப்பனுக்குத் தெரியாமல் களவாக எடுத்து வந்து கொடுக்கும் காதல் சம்பவங்கள் உண்டுதான்.

ஆனால் யோகமலர் தாலிகட்டாத மனைவியாக எனக்காக அவள் தினம் தினம் வாழ்வதை, மொலக்ஸ் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போய் படுத்திருக்கும் போது „ஏன் இவ்வளவு அக்கறை என் மீது அவள் காட்டுகிறாள், என் மீது அதீதமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவளால் இப்படியெல்லாம் நடக்க முடியும்,இதுதான் விதியோ என்ரை அம்மாள் ஆச்சியும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இவளை என்னிடம் காட்டியிருக்கிறார் என நினைத்துக் கொள்வன்.

மொலக்ஸ் வேலைக்கென அவள் அன்று உப்புமா கொண்டு வந்திருந்தாள்.நான் அவளின் தோள்மீது சாய்ந்து தலையை வைத்தபடியே’ உங்களிட்டை கன நாளாய் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று நினைச்சனான் கேட்கட்டுமா „ என்றன்,’கேளுங்க „ என்றாள் அவள்.என்னை உங்களுக்கு ஏன் பிடிச்சது என்று கேட்க,அவள் முகத்தைத் திருப்பி எனது காதடிக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு’சொல்றன் „ என்றவள், „நீங்க எனது மிசினைக் கவனிக்க வந்த முதல் நாள் எனது கண்களையும் நெற்றியையும் மட்டுமே பார்த்து என்ன பிழை என்று கேட்டீர்கள்.

அன்றைக்கு நான் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் போட்டிருந்தன்.ஆனா உங்க கண்கள் என் கண்களையும் நெற்றியையும் விட்டு விலகாமல், என் முகத்தில இருந்து உங்க கண் அங்க இங்க அசையாமல் இருந்ததுங்க.நீங்க என்னை மட்டுமில்லீங்க என்னோட தோழிங்களையும் அப்படித்தான் பார்த்தீங்க.செற்றப்மென்னா இருக்கும் மலாய்க்காரனும் சைனீசும் எங்க உடம்பை அங்க இங்க பார்த்துக் கொண்டும் வலிந்து பேசிக் கொண்டும் மிசினைத் திருத்துவாங்க.அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல கோபமும் வெறுப்பும் வந்தது.

எனக்கு பெண்களிடம் வலிந்து வந்து பேசும் ஆண்களையும், பெண்களிடம் அசடு வழியப் பேசும் ஆண்களையும், பெண்களிடம் பேச வேண்டும் என்பதற்காக நீங்க அழகா இருக்கீங்க என்று சொல்லியே பேச நினைக்கும் ஆண்களைக் கண்டாலே சுத்தமாகப் பிடிக்காது அவங்க மீது எனக்கு வெறுப்பும் அருவருப்புதாங்க வரும்.

நான் ஸ்கூல்ல படிக்கிற காலத்திலேருந்து என்ன ஆணவக்காரி, திமிர்க்காரி,கோபக்காரி இவள யாருமே கட்டமாட்டாங்க என்று என்னப்பற்றி பேசுவத நான் கேட்டிருக்கேங்கங்க.ஆனா நான் அதப்பற்றி கவலப்படல.

ஆனா நீங்க பெண்களின் முகத்தை அதுவும் கண்களை மட்டுமே பார்த்துப் பேசுறதை கவனித்தேனுங்க அதுமட்டுமல்லீங்க உங்க பார்வையில ஒரு கம்பீரம் இருந்துதங்க,அப்பவே நான் தேடிக் கொண்டிருந்தவர் நீங்கதான்னு என்னோட மனம் தீர்மானிச்சுட்டுதங்க, நீங்க சிறீலங்காவிலிருந்து வந்தவரு என்றோ, உங்களுக்கு மனைவி பிள்ளைகள் இருங்காங்க என்றதற்கு பிறகும்கூட நீங்க சிங்கப்பூரை விட்டுப் போகமுன்பு உங்க மனைவியாக வாழ வேண்டும் என்று நான் உறுதியாக முடிவெடுத்தேனுங்க.

நான் உங்ககூட வாழும் மாதங்களோ நாட்களோ குறைவாக இருந்தாலும்,ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருடமாக நினைத்து வாழ வேண்டும் என்ற மன உறுதிதான் என்னை உங்க பக்கத்தில உங்க மனைவியாக உட்கார வைச்சிருக்குங்க’ என்றுவள் நெக்குருகி நீங்க இல்லாம நான் உயிரோடு வாழ மாட்டேங்க செத்திடுவன் என்றவள், நானும் நீங்களும் ஒரே வீட்டில் இரவு பகல் ஒன்னாக இருக்க வேண்டும் என்பதற்காக நாட்களை எண்ணிட்டே வருகிறேனுங்க என்றவள்’ஆமாங்க இப்படித்தான் பெண்களைப் பார்க்கணும்னு யாருங்க உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாங்கனு’ அவள் கேட்டதும் „அம்மாதான்’ என்று நான்

பதில் சொன்னதும் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து „உங்க அம்மாவா’ என்றாள்.

அம்மாதான் எனக்குச் சொல்லித் தந்தவா என்ற நான், எங்கடை அயல் வீடுகளில் நிறையப் பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.

நான் சிறுவனாகவும் அவர்கள் சிறுமிகளாகவும் இருந்த போது அவர்களும் நானும் ஒன்றாக விளையாடுவோம்.அவர்களுக்கும் எனக்கும் வயது ஏற ஏற அவர்கள் பெரியபிள்ளையாகி குமர்ப்பிள்ளையாக எனக்கும் மீசை அரும்பத் தொடங்கி முகமெல்லாம் பருக்கள் போட்டு நானும் இளைஞனாகத் தொடங்கினன்.

அப்பொழுதும் பெண்பிள்ளைகள்; வீட்டுக்கு வருவதும், பாதையில் நின்று கதைப்பதுமாக இருந்த போது அம்மா இதையெல்லாம் கவனிச்சுவிட்டு ஒரு நாள் „நீ அயல் வீட்டுப் பெண்பிள்ளைகளுடன் கதைப்பது பிழையில்லை, ஆனால் அவையின்ரை முகத்தையும் கண்ணையுமே பார்த்துக் கதை,அவர்களுடைய உடம்பின் எந்தப் பகுதியையும் உன்னுடைய கண்கள் பார்க்காமல் பார்த்துக் கொள் என்றார்.

அவையின்ரை உடம்பை நீ பார்ப்பதை அவர்கள் கவனிச்சால் கூச்சப்படுவார்கள்.கூச்சம் வெட்கமாக மாறும்.வெட்கம் விருப்பமாக மாறும்.விருப்பம் காதலாக மாறும்.

அயல் வீட்டுப் பெண் பிள்ளைகள் மீதான காதல் எவர் உனக்கு விருப்பமானவள் என்று ஒருவருக்கு மேலாகி எவர் என்று அறிய முடியாதவாறு பெரும் பிரச்சினையில் முடியும்.என்னுடைய தம்பியின்ரை மகள் அதுதான் உன்ரை தாய்மாமனின்ரை மகள் உனக்குத்தான் என நாங்கள் எப்பவோ முடிவெடுத்துவிட்டோம்.

உன்ரை மாமாவை நான் ஏமாற்றமாட்டன்.கவனமாக இரு என்று சொன்னார் என்றன்.யோகமலரால் நம்ப

முடியவில்லை.அம்மாதான் இப்படிச் சொன்னாரா என்று கேட்டவளுக்கு, அம்மா மட்டுமல்ல அக்காவும் எவ்வளவோ சொல்லியிருக்கிறார். அம்மா அக்கா என எல்லாருமே நிறைய புத்தகங்கள் வாசிப்பவர்கள்.அதனால்தான் அவர்களால் இப்படித் துணிவாக வெளிப்படையாகச் சொல்ல முடிஞ்சது என்றன்.

அதற்கு அவள் என்னுடைய மாமியின் புத்திமதி உங்களை காதலிக்க வைச்சிட்டுதே என்று சிரிச்சவள், அடுத்த வாரத்திலேயிருந்து உங்களைப் பற்றி எனக்குச் சொல்லனும் என்றவள், என்னோட மாமி நல்ல மகனைத்தான் எனக்குத் தந்திருக்கிறார் என்று தனது கைவிரல்களுடன் எனது கைவிரல்களை இணைச்சுக் கொண்டு வெட்கத்துடன் சிரித்தாள்.

வேலை முடிஞ்சு போறப்போ நான் நிம்மதியா இல்லேங்க.இரவு வேல செய்திட்டுப் போய் நீங்க சரியா தூங்கினீங்களா இல்லையான்னு யோசிச்சிட்டே இருப்பேனுங்க.

உங்களுக்கும் எனக்கும் இங்க சாப்பிடுற சாப்பாட்டையும்,நீங்க இரவு வேலைக்குப் போறப்பே உங்களுக்கு கொடுக்கிற சாப்பாட்டையும் நான்தானுங்க சமைப்பேனுங்க, அம்மா கேட்பா உதவி செய்யவான்னு,அதுக்கு நான் என் புருசனுக்கு நான்தான் சமைச்சு எடுத்திட்டுப் போவன் நீங்க ஒன்னும் செய்யவேணாம்னு சொல்வேனுங்க.

முன்பு இருந்த யோகமலர் வேறுங்க, உங்க பெண்டாட்டி யோகமலர் வேறுங்க,அப்பா அம்மா அண்ணாக்கள், அண்ணீக்கள் எல்லாருNமு திகைச்சிட்டாங்க நான் தலகீழா மாறிட்டேன்னு’ என்று சொன்னவள் எனது கைக்குள் தனது கையைச் செருகி எனது தோளில் சாய்ந்து உணர்ச்சிவசப்பட்டு முகம் சிவந்து விம்மினாள்.

அவளை இறுக அணைத்து ஆறுதல்படுத்தினேன்.தோளில் சாய்ந்தவள் மெதுவாக தலையை நமிர்த்தி எனது காதை கடிச்சவள் செல்லமாக வலிக்குதா என்றாள்.இப்படி ஒருத்தியை விதி எனக்கு காட்டியிருக்கிறதே என மகிழ்ந்த நான் அவளின் தலைமயிருக்குள் கைவிரல்களைக் கொடுத்து கழுத்தின் பின்புறத்தை வருடியபடி என்னோடு சேர்த்து அணைத்தேன்.

அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம்.இடைவேளை முடிஞ்சு எல்லாரும் எழுந்து போக தாமதித்து அவளுக்கானதைக் கொடுத்து உள்ளே நுழைந்தோம்.வேலைமுடிய வழமை போல அவளை ஜோகூர்பாரு போகும் பஸ்ஸில் ஏற்றிட்டு அவளும் நானும் ஒருவருக்கொருவர் கையசைத்துவிட்டு அவளின் பஸ் புறப்பட நான் மொலக்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினன்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *