நடுகைக்காரி!… தொடர் 3 …. ( குறு நாவல் )….. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 3…
தலையிடியாயிருக்குது என்று உங்களோடு வந்தவர்களுக்கும் மானிக்கத்திற்கும் பொய் சொல்லிவிட்டு வா, உங்களுக்காக லிங்கம் கபேக்கு மேற்குப்புறத்தில் ஒழுங்கை தொடங்கும்
இடத்து மதகில் காத்திருப்பேன் என்று சொன்ன ஞானசெல்வம் சைக்கிளில் வேகமாக லிங்கம் கபேயடிக்குப் போனவன்,நான்கு கடலை வடைகளையும் இரண்டு கப்பல் வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு மதவடிக்கு வந்து சைக்கிளில் இருந்தபடியே ஒரு காலை நிலத்திலும் இன்னொரு காலை மதகிலும் வைத்தபடி பார்வதி வரும் திக்கையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
மிக உயரத்தில் பறக்கும் பருந்து தனக்குரிய இரையை தரையில் கண்டதும் எவ்வளவு மிக வேகமாக தரையை நோக்கி வருமோ அதைப் போல தனது காதல் பசியைத் தீர்க்கும் பார்வதியின் நிழலாடும் உருவத்தை வெள்ளவாய்க்காலின் தெற்குப் பக்க வரம்பினில் கண்டதுமே சைக்களில் அந்த இடத்திற்கு வேகமாகப் போகிறன்.
ஞானசெல்வம் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் பார்வதி வெள்ளவாய்க்காலில் இறங்கி ஏறிய இடத்திலேயே நின்றுவிடுகிறாள்.
அவளுக்கு அருகில் சென்ற ஞானசெல்வம் „சைக்கிளில் ஏறுங்கள்’ எனச் சொல்ல, „ வேண்டாம் யாராவது பார்த்துவிட்டால் உங்கடை வீடும் குழம்பி எங்கடை வீடும் குழம்பிப் போயிடும் வேண்டாம் நடந்து போவம் நீங்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு வாருங்கள் என்று அவள் சொல்ல, „ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம் ஏறுங்கள் எங்களுடைய காதல் சுலபமாக கல்யாணத்தில் போய் முடியாது. இரண்டு பேரும் நிறைய பிரச்சினைகளைச்
சந்திக்கத்தான் போறம்… பிரச்சினைகளைப் பார்த்து பயந்தால் அடியெடுத்து நடக்கிறதுகூட கஸ்டமாகத்தான் தோன்றும்…சரி முதலிலை சைக்கிளிலை ஏறுங்கள் நான் ஆறுதலாக ஓடுறன் கதைச்சுக் கொண்டே போவம் என்று சொல்ல அவள் பயந்தபடி ஏறி சைக்கிள் பாரில் உட்காருகிறாள்.
ஏறி உட்கார்ந்தவள் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்து மெதுவாக நம்பிக்கையுடன் சிரித்தவள் சைக்கிள் காண்டிலில் கையைப் பிடிக்க அவள் கைகள் மேல் தனது கை விரல்களை அவன் வைக்க அவள் தனது கைகளை எடுக்காது மீண்டும் ஒருமுறை திரும்பி காதலோடு அவனைப் பார்க்கிறாள்.
ஏறியவளின் கையில் வடைகள் சுற்றிய பார்சலையும் வாழைப்பழங்களையும் கொடுத்தவன் சைக்கிள் பெடலை மிதிக்க முன்பு அம்பனைச் சந்தியைத் திரும்பிப் பார்க்க,மதகில் இருந்த மூவர் எழும்பி நின்று பார்ப்பதும் அவர்கள் மூவரும் இவனுக்குக் கைகாட்ட இவனும் கைகாட்டி விட்டி சைக்கிளை விளக்கத் தொடங்குகிறான்.
இவன் கைகாட்டியதைக் கண்ட பார்வதி „இப்ப யாருக்கு கைகாட்டினனீங்கள்’ என்று கேட்க சந்தி மதகிலை இருந்து என்னோடு கதைக்கிறவைக்கு என்று சொல்ல, „ நல்லது நடுகைக்காரியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போறன் „ என்றதை எல்லாருக்கும் சொல்லச் சொல்லி கைகாட்டிப் போட்டு வாறியள், நீங்கள் இழுத்த இழுவைக்கு நானும் வந்து கொண்டிருக்கிறன் என்ன நடக்கப் போகுதோ தெரியாது முருகா’ என்று அவள் சொல்ல அவன் பலமாகச் சிரிக்க „நான் பயந்து கொண்டிருக்கிறன் நீங்கள் சிரிக்கிறியள் என அவள் சொல்ல, எனக்கு ஏன் சிரிப்பு வந்தது என்றால் கடைசியாக முருகனைக் கூப்பிட்டு முறையிட்டீர்களே அதுக்குத்தான் சிரிச்சனான் முதலிலை வடையைச் சாப்பிட்டு வாழைப்பழத்தைச் சாப்பிடுங்கள் என்கிறான் அவன்.
வடையையும் வாழைப்பழத்தையும் பார்வதி சாப்பிட்டபடியே முருகா என்று நான் சொன்னதைக் கேட்டு ஏன் சிரிச்சனீங்கள் என்று அவள் கேட்க நீங்கள் சரியான கடவுளைத்தான் தெரிவு செய்திருக்கிறீர்கள்.
முருகன் எப்பொழுதுமே காதலுக்குச் சப்போர்ட் பண்றவர். அவர் வலப்பக்கம் ஒன்று இடப்பக்கம் ஒன்று என்று இரண்டு மனுசிமாரை வைச்சிருக்கிறவர்.
கிழவன் வேசம் போட்டு சாமிமாக்குழையல் சாப்பிட்டு வேண்டுமென்றே விக்கல் வந்தது போல நடிச்சு , விக்கலுக்குத் தண்ணீர் குடுக்கப் போன வள்ளியின் கையைப் பிடிச்சு இழுத்து தனது காதலை வள்ளிக்குச் சொல்லி பிறகு தெய்வானையோடு பிணக்குப்பட்டு வள்ளியைச் சக்களத்தியாக கொண்டு வந்த நம்முடைய முருகன்,காதல் கடிதத்தை என்னுடைய நெஞ்சு பார்த்து எறிந்த உங்களுக்கு சப்போர்ட் பண்ணாமலா விடப் போகிறார் என்று அவன் சொல்ல, புத்தகத்தில் என்னுடைய பெயர் கேட்டு எழுதிய உங்களுக்கும் அவர் சப்போர்ட் பண்ணுவர் என்று சொல்லிவிட்டு அவள் வாய்விட்டுச் சிரிக்க அதே நேரம் அவர்களிருவரும் லிங்கம் கபேயைக் சைக்கிளில் கடக்க, லிங்கம் கபேக்கு பக்கத்தில் லோண்ட்ரி வைத்திருந்த சின்னக்கண்டு உடுப்பை மினுக்கிக் கொண்டே பார்வதி சிரித்ததைத் தலையை நிமிர்த்திப் பார்த்தவர்; அயேன் பெட்டியை நிமிர்த்தி வைத்துவிட்டு வேகமாக கடையை விட்டு வந்து பாலத்தில் நின்று கடையைக் கடந்து போகும் ஞானசெல்வத்தையும் நடுகைக்காரியையும் பார்த்து, புதினம் கிடைச்ச புழுகத்தில் அப்படியே தலையைத் திருப்பி லிங்கத்திற்கு கைகாட்டி கூப்பிட லிங்கமும் பாலத்திற்கு வந்து ஞானசெல்வத்தையும் அவனால் மறைக்கப்பட்டிருக்கும் பார்வதியையும் பார்த்து இந்தப் பொடியன் யார் தெரியுமோ என்று சின்னக் கண்டுவைக் கேட்க, „சுப்பையற்றை மகன்தானே உன்ரை கடைக்கு வாறவன் மதகிலை இருக்கிறவன்தானே’ என்று சின்னக்கண்டு பதில் சொல்ல,அவன் குடுத்து வைச்சவன் மச்சக்காரன், இஞ்சை
நானுந்தான் இருக்கிறன் காய்ஞ்சு போய்க் கிடக்கிறன்…..ஏதாவது தட்டுப்படுதா என்றால் ஒன்றுமில்லை என்று பக்கத்தில் வீடு இருக்குதே என்று எதற்குமே கவலைப்படாமல் வக்கிரமாகச் சொல்லிக் கொண்டே லிங்கம் கடைக்குள் போக, தான் ஒரு சிஜடியாக ஒரு விஞ்ஞானியாக ஏதோ ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தது போல தனது கடைக்குள் நுழைஞ்ச சின்னக்கண்டு
நிமிர்த்தி வைச்ச அயேன் பெட்டியை தொட்டுப் பார்க்கிறார்;; சூடு குறைஞ்சிருப்பதைக் கண்டு, வெளியே அதை எடுத்துக் கொண்டு போய் கீழே வைச்சு கரி போட்டு நெருப்பைப் பற்ற வைக்கிறார்.
சின்னக்கண்டுவுக்கு இன்றைக்கு வருமானம் வருகுதோ இல்லையோ அவருக்கு ஒரு ஒரு புதினம் கிடைச்சுவிட்டது. அது போதும் அவருக்கு.தன்னையறியாமலே வாயெல்லாம் பல்லுத் தெரிய சிரிச்சுபடி மெய்சிலிர்த்து புளகாங்கிதம் அடைகிறார்.
தனது செய்திச் சேவைக்கு நல்ல செய்தி கிடைத்துவிட்டதே என்று மகிழ்ச்சி அவருக்கு.லிங்கத்தார் இத்தனை வயதாகியும் அவருக்கு கல்யாணம் இன்னும் நடக்கவில்லை.அவரோடு படிச்சவர்கள் அவரைவிட வயது குறைஞ்சவர்கள் எல்லாரும் கல்யாணம் செய்து பிள்ளைகளோடு இருக்க இவர் தனிமரமாக நிக்கிறார்.
அது அவருக்கு ஒரு கொதிப்பு நிலையை உருவாக்கிவிட்டது. இந்தக் கொதிப்பு நாளடைவில் அவர் மனதில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
இந்தக் காழ்ப்புணர்ச்சி நாளடைவில் அவர் மனதை இருளாக படர, இரவு எட்டுமணிக்கு கடையைப் பூட்டிப் போட்டு சாராயம் குடிச்சிட்டு பாலத்தில் நின்றபடி மிக மிக வக்கிரமாக கதைப்பதும்,குடும்பங்களைப் பற்றிக் கதைகட்டுவதும்,தூசண வார்த்தைகளை பக்கத்தில் ஒரு வீடு இருக்குதே என்று எந்தவிதமான நாக்கூச்சம் இல்லாமல்
கதைதச்சதால் அவரோடு நின்று கதைச்சவர்களே அவருக்கு கல்யாணம் பேசி வரும் போது, அவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தால் „ அந்த யோசனையை விடுங்கள் என்று கல்யாணம் பேசி வருபவர்களுக்கு சொல்வதுடன் நின்றுவிடாது, இரகசியமாக அவரைப் பற்றிச் சொல்லவும் செய்தார்கள்.
தங்களைப் பற்றி ஊர் உலகம் என்ன நினைக்கும் என்பது பற்றியோ, வீதியால் போகிறவர்கள் வருகிறவர்கள் தங்கள் இருவரையும் உற்றுப் பார்க்கிறார்களே என்ற எந்தவிதமான பயமும் இல்லாமல் ஞானசெல்வமும் பார்வதியும் போய்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் வடை சாப்பிடேலையா என்று பார்வதி கேட்க வடையைப் பிச்சுத் தாருங்கள் சாப்பிடுகிறன் என்கிறான் ஞானசெல்வம்.
ஏன் முழுவடைiயாகச் சாப்பிட மாட்டியளா என்று பார்வதி கேட்க, சாப்பிட முடியும் ஆனால் நீங்கள் வடையையும் வாழைப்பழத்தையும் பிய்சு;சுப் பிய்ச்சுத் தரும்போது உங்கள் கைப்பட்டால் தனிச் சுவையாக இருக்கும் என்று அவன் சொல்ல, ஓகோ…அப்படியோ’ என்று குறும்பாகச் சொல்லியவள் அவனைத் திரும்பி புன்னகைத்தபடியே காதலுடன் பார்க்கிறாள்.
எனக்கு இந்தக் காதல் பார்வையும் புன்னகையும் போதும் நாங்கள் புருசன் பெண்சாதியாவதைத் தடுக்கும் எந்த தடையையும் உடைக்க என்றவனுக்கு வடையையும் வாழைப்பழத்தையும் பிய்ச்சுப் பிச்சுக் கொடுக்கிறாள் பார்வதி.
சைக்கிள் பாரில் இருந்து போய்க் கொண்டிருந்தவள் நான் இறங்கி நடந்து வாறன் துடையிரண்டும் நோவுது என்று சொல்ல அவன் சைக்கிளை நிறுத்த அவள் இறங்க, அவன் சைக்கிளை உருட்டிக் கொண்டு போக அவனுடன் சேர்ந்து
இருவரும் தோளோடு தோள் உரசியும் உரசாமலும் நடந்து கொண்டிருந்தனர்.
அவளின் உடல் வியர்த்து போட்டிருந்த சட்டை வியர்வையுடன் ஒட்டி இப்பொழுது காய்ந்து போய்விட்டது என்றாலும் வியர்வை மணம் அவளை நிம்மதியிழக்கச் செய்தது.
„வீட்டை போய் குளிச்சால்தான் நிம்மதியே வரும்’ என்று சொன்னவள் கொஞ்ச நேரம் அமைதியாக வந்தாள்.’எனக்கு ஒரே பயமாயிருக்கு,நாங்கள் வேறை நீங்கள் வேறை நாங்கள் இரண்டு பேரும் புருசன் பெண்சாதியாக முடியுமா, உங்கடை அப்பா அம்மா மற்றது உங்கடை சொந்தக்காரர் உங்களுக்கு வேறை கல்யாணம் பேசினால் என்னை மறந்திட்டு பேசின கல்யாணத்தைச் செய்வீர்களா’ என்று அவல் கவலையுடன் கேட்க அவளின் கண்கள் குளமாகி நிற்பதைக் கண்ட ஞானசெல்வத்துக்கு கவலை வரவில்லை,அவள் மீது கோபமே வந்தது.
„கோபத்துடன் உங்களுக்கு என்ன விசரா, அதுதான் காலமை உங்கடை கையைப் பிடிச்சு நீங்கள்தான் எதிர்கால மனைவி என்று சொன்னேனே நம்பவில்லையா „ முதலிலை கண்ணைத் துடையுங்கள் றோட்டிலை போறவை வாறவை நீங்கள் அழுகிறதைப் பார்த்துக் கொண்டே போகினம் என்று அவன் சொல்ல , „நம்புறன் முழுமையாக நம்புறன்,ஆனால் உங்கடை அப்பா அம்மா சொந்தக்காரரை உங்களாலை எதிர்க்க முடியுமா’ என்றவளுக்கு, எமது காதல் வெற்றி பெற்று கல்யாணத்தில் முடிய வேண்டுமென்றால் அதற்குத் துணிவு வேண்டும், ஒரு விசயத்தைச் செய்ய முன் பலமுறை யோசிக்க வேண்டும், முடிவெடுத்தால் ஒருமுறைகூட யோசிக்கக்கூடாது.தன்னம்பிக்கையும் நேர்மையான துணிச்சலுந்தான் எல்லா வெற்றிக்கும் காரணம் என்கிறான் ஞானசெல்வம்.
நான் எனது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்பதை எப்போதோ முடிவெடுத்துவிட்டன்.எனது வாழ்க்கைக்கு ஒரு அற்புதமானவளாக நீங்கள் எனக்கு கிடைத்துவிட்டீர்கள்.
திருவள்ளுவர்கூட முடிவெடுக்கும் துணிச்சலுக்கென்று ஒரு குறளையே எழுதியிருக்கிறார் தெரியுமா என்று அவன் கேட்க அவள் தெரியும் „எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்-எண்ணுவ மென்ப திழுக்கு „ என்று சொல்லி முடித்தவள், இது நாற்பத்தி ஏழாவது அதிகாரத்தில் நானூற்றி அறுபத்தி ஏழாவது குறள் என்றவள் இதற்கு அவரவர் பார்வையில் உரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் மு.வரதராசனார்,பரிமேலழகர்,தேநேயப் பாராயணர், கலைஞர் கருணாநிதி என்று சொல்லி முடித்ததும் மகிழ்ச்சியுடன் சைக்கிளை நிறுத்தியவன் வீதியென்றும் பார்க்காமல் போவோர் வருவோர் பார்ப்பார்களே என்று யாரைப் பற்றியும் நினைக்காமல் அவளின் இடுப்பைச் சுற்றி கைகளால் இறுக்கி தன்னோடு அணைக்க அவள் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாதலால் அவள் „ஐயோ என்ன செய்கிறீர்கள் யாராவது பார்க்கப் போயினம் கையை எடுங்கள் „ என்று சொல்ல அவன், „கையை எடுக்கிறன் முதலிலை நீங்கள் சொல்றதை எல்லாம் நான் கேட்பன் என்று எனக்கு சத்தியம் செய்து தர வேண்டும் என்று அவன் கையை நீட்ட,தங்களுடைய காதல் நிறைவேற வேண்டும் என்றால் துணிவோடும் அறிவுபூர்வமாகவும் தனது காதலனுடன் சேர்ந்து கைகோர்த்து பயணிக்க வேண்டுமென்று தீர்மானித்தவளாக அவனுடைய கையை இறுகப் பற்றி நெஞ்சோடு வைத்தவள் „நீங்கள் எது சொன்னாலும் எனது நல்லதுக்கே சொல்லுவியள் நீங்கள் சொல்வதைக் கேட்பன் என்கிறாள்.
„எனக்கு இது போதும்’ என்றவன் நீங்கள் எஸ்.எஸ்.சி ரெஸ்ற்றுக்கு பிறைவேற்றாக எட்டுப்பாடத்துக்கு விண்ணப்பம்; செய்ய வேணும் ,எட்டுப்பாடங்களிலும் பாஸ் பண்றியள் என்று அவன் சொல்ல,’ முடியுமா என்று அவள் கேட்க, முடியும் தன்னம்பிக்கையும் துணிவும் பயமின்மையும்
இருந்தால் நீங்கள் பாஸ் பண்றது மட்டுமல்ல எங்களுடைய காதலுக்க எதிராக எவராலுமே தடுக்க முடியாமல் செய்யிறதும் எங்களுடைய வேலை என்று சொன்னதும் அவள் பூரித்துப் போய் அவனின் இடுப்பை தன்னையறியாமலே அணைத்து அவனைப் கனிவோடு பார்க்கிறாள்.
தனது நாளைய மனைவியை அனைத்தாலும் உயரத்திற்கு கொண்டுவர வேண்டுமென்ற திடமான எண்ணத்துடன் அவளோடு நடந்து வந்தவனுக்கு அவள் வடையையும் வாழைப்பழத்தையும் பிய்ச்சுக் கொடுத்துக் கொண்டே வர, அவனும் மகிழ்ச்சியாக வாழைப்பழத்துக்கும் வடைக்கும் கொம்பினேசன் நீங்களும் நானும் போல என்றவன்,நானும் நீங்களும் சேர்ந்து ஒரு கிராமத்தையே உருவாக்கிவிடலாம் என்று அவன் தொடர, எப்படி என்று அவள் கேட்க அவளுடைய காதுக்குள் அவன் குனிந்து ஏதோ சொல்ல அவள் வெட்கப்பட்டு பேசாமல் வாருங்கள் சைக்கிளோடை உங்களை முள்ளுக் கம்பி வேலிக்குள் தள்ளிவிழுத்திப் போடுவன்.
இப்பவே அவற்றை எண்ணத்தைப் பாருங்கள் என்றவளுக்கு, எதிர்காலத் திட்டத்தைச் சொன்னனான், எதுவாக இருந்தாலும் மனத்திரையிலை ஒரு காட்சி வேணும் என்றவனுக்கு,எதிர்கால திட்டம் வேணுந்தான் அதுக்கு ஒரு கிராமமே எங்கடை சந்ததியாக இருக்க வேண்டுமென்பதற்கு எனது உடம்பு தாங்கவே தாங்காது, முருகக் கடவுளைப் போல இரண்டு பெண்சாதிமார் இருந்தாலும் முடியாது.
ஆனால் நான் ஒருத்தி மட்டுமேதான் உங்களுக்கு அதை நல்லாய் ஞாபகத்தில் வைச்சுக் கொள்ளுங்கள் என்று அவள் கலகலவென சிரிக்க அவன் அதை இரசித்துக் கொண்டே நடக்கையில் வடைகளை சாப்பிட்டு முடிச்சதற்குப் பிறகு வடைகள் சுற்றித் தந்து பத்திரிகைத் தாளை அவள் கசக்கி எறியப் போக,’றோட்டுக்கரையிலை எறிய வேண்டாம் நான் கொண்டு போகிறன் „என்று வாங்குகிறான்.
(தொடரும்)
![]()