கதைகள்

நடுகைக்காரி!…தொடர் 2 …. ( குறு நாவல் )….. ஏலையா க.முருகதாசன்.

(ஒரு பெண்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்து அவளின் கையில் சஞ்சிகையைத் திணிப்பதை சமூகப் பெரியவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் காவாலித்தனமானது, விடுகாலித்தனமானது பெத்ததுகளின் பெயரைக் கெடுக்க வந்த தறுதலைகள் என்று பெயர்களைத்தான் சூட்டுவார்கள்.)

 தொடர் 2

காதல் வசப்படும் மனம் ஒரு நிலம் போன்றது.காதல் வசப்படும் மனத்தை பண்படுத்தி பாதுகாக்க வேண்டியது காதலன் காதலியின் தலையாய பணி.

தனது காதலியையோ காதலனையோ தன்வசமே வைத்திருந்து காதலனோ காதலியோ கணவனாகவோ மனைவியாகவோ அதுவே வாழ்வாக வேண்டுமென்றால் நிலத்தைச் சுற்றி வேலி போடுவது போல காதலன் இதயத்தைச் சுற்றியோ காதலியின் இதயத்தைச் சுற்றியோ தீராத காதல், தணியாத பாசம்,அதீதமான அக்கறை என்ற அனைத்தையும் கலந்து அரணாக காதல் வேலி போட வேண்டும்.

இவள் தனக்குரியவள், இவன் தனக்குரியவன் என்ற காதல் இரும்பினால் அரண் அமைக்க வேண்டும்.

சிலரின் காதல் ஒரு எல்லையை அல்லது இலக்கைத் தொட வருடக் கணக்குக்கூட எடுக்கும்.அதற்குக் காரணம் பயம், துணிவின்மை, நம்பிக்கையின்மை,தெரிவில் ஏற்படும் தடுமாற்றங்ககளுடன்;,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் ஏற்படும் புரிதலின்மையுமே ஆகும்.

ஆனால் பார்வதியும் ஞானசெல்வமும் ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே பல நாட்கள் பார்த்துப் பழகிக்

காதலித்தவர்கள் போல அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கத் தொடங்கிவிட்டனர்.

உங்களுடைய பெயர் என்ன என்று கேட்டு எழுதிய சஞ்சிகையை மதகில் இருந்தபடியே கையை இழுத்து ஞானசெல்வம் திணித்த போது இழுத்த இழுவையில் நிலைதடுமாறி விழுவது போல நடித்து காலில் நோ ஏற்பட்டது போல மெதுவாக அணுங்கி மதகில் அவனருகில் உட்கார்ந்து தான் கசக்கி அவனின் மார்பைக் குறி வைத்து எறிந்த தாளைப் படித்துவிட்டு பின்னேரம் பதில் வேணும் என்று அவள் அழுத்திச் சொல்லிவிட்டு எழுந்த துணிச்சல் அவளின் காதல் கனதியானதுதான் என்பதைக் கூறி நின்றது.

மடித்துக் கொடுத்த சஞ்சிகையில் எழுதிக் கொடுத்ததற்கு என்ன பதில் வருமோ என்று தயங்கியவனுக்கு பின்னேரம் பதில் வேணும் என்ற பார்வதியின் காதல்கட்டளை அவனுக்கு இனிப்பாகவும் சுகமாகவும் இருந்தது.

ஞானசெல்வம் பின்னேரத்தில் எப்பொழுதும் அம்பனைச் சந்தியிலுள்ள சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் சுண்டல் சாப்பிட்டு நன்னாரித் தேத்தண்ணியும் குடிச்சிட்டு மதகிலை போயிருப்பான்.

அவனின் வயதொத்தவரிலிருந்து அனைத்து வயதுடையவர்களுடனும் அவரவருக்குத் தக்கதாக அவனால் கதைக்க முடியும்.அது அவனிடமிருந்த தனித்திறமையாகும்.

அவனுடன் கதைப்பதற்க யாருமே இல்லையென்றால் சைக்கிள் காண்டிலில் மடிச்சுக் கொழுவி வைத்திருக்கும் பத்திரிகையையோ அல்லது சஞ்சிகையையோ எடுத்து வாசிப்பான்.

சில நாட்களில் சீனியம்மானின் கடைக்குள் இருந்து தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருக்கும் போதோ அல்லது தோசை வடை சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ கையால் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே

கண்களால் வாசித்துக் கொண்டிருப்பான்.அவனையறியாமலே தேத்தண்ணியைக் குடிச்சு முடிப்பவன் இன்னொரு தேத்தண்ணியையும் வாங்கிக் குடிப்பான்.

பார்வதி பின்னேரம் பதில் வேணும் என்று கட்டளையிட்டதால் அன்று அவன் மதகில் இருக்கவில்லை.வீட்டிலிருந்து வரும்போது டெயிலி நியூஸ் பத்திரிகைiயும் ஒரு சஞ்சிகையையும் எடுத்து சைக்கிள் காண்டிலில் செருகியவன் அங்கிருந்து அம்பனைச் சந்திக்கு வந்தவன் சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் நன்னாரித் தேத்தண்ணியைக் குடிச்சவன்,ஐஞ்சு உழுந்து வடைகளைக் கட்டித் தரச்சொல்லி வாங்கிக் கொண்டு மாணிக்கத்தின்ரை தோட்டத்தை நோக்கி சைக்கிளில் போகத் தொடங்கினான்.அவளுக்கான பதிலாக உங்களுடைய பெயர் என்ன என்று கேட்டு எழுதியதை அவள் புரிந்து கொள்ளுவாள் எனத் தீர்மானித்தான்.

அம்பனை வயல் பண்டத்தரிப்பு வீதியின் தெற்குப்புறத்திலிருக்கிறது.வீதிக்கும் வயலுக்குமிடையில் வெள்ளவாய்க்கால் இருக்கின்றது. இந்த வெள்ளவாய்க்காலின் ஆரம்பம் மயிலிட்டி.மழை காலங்களில் அங்கிருந்தும்வரும் வழிகளிலும் தண்ணீரைச் சேகரித்துக் கொண்டு நெடுந்தூரம் பயணம் செய்து அளவெட்டி வயலுக்குள் இருக்கும் பெரிய தம்பிரான் கோவிலடிக் குளத்தை வெள்ளம் நிரவிநிற்கும்

பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்திலேயே இந்த நெடுந்தூர வாய்க்கால் வெட்டப்பட்டும் மதகுகள் அவர்களாலேயே கட்டப்பட்டதுமாகும்.ஆனால் இப்பொழுது அவை தூர்ந்தும் மேடாகியும் விட்டன.சீராக வெள்ளம் போகும் வாய்க்காலக அது இல்லை.

கழனி ஒழுங்கையிலிருந்து வரும் வெள்ளம் அம்பனைச் சந்திவரை சென்று பண்டத்தரிப்பு வீதியருகு

வெள்ளவாய்க்காலில் ஒன்றிணைந்து மேற்கு நோக்கிச் சென்று பின் இடது பக்கமாக பனங்கூடலுக்குள்ளால் பயணினக்கிறது.

வயலுக்குப் போவதற்கென்று ஒரேயொரு பாலமே இருக்கிறது. ஆனால் தோட்டக்காரர்கள் வெள்ளவாய்க்காலை குறுக்காக கடந்துதான் அவரவர் தோட்டத்திற்குப் போய்வருவார்கள்

ஞானசெல்வம் சைக்கிளைவிட்டு இறங்காமலே வெள்ளவாய்க்காலுக்குள் சைக்கிளில் ஓடி இறக்கி அப்படியே மேலே வந்து வரம்பில் இலவாகமாக ஓடித் தங்களுடைய தோட்டத்திற்குப் போகிறவன்.

எருவையோ குப்பையையோ கடகத்தில் அள்ளிக் கொண்டு தலையில் வைத்து ஒரு கையால் அதைப் பிடித்துக் கொண்டு ஒற்றைக் கையால் காண்டிலைப் பிடித்தபடி சைக்கிளில் வரும் அவன் வெள்ளவாய்க்காலிலும் ஒற்றைக் கையால் காண்டிலைப் பிடித்தபடி எந்தத் தளம்பலும் இல்லாமல் இறக்கி மறுபக்கம் உயரச் சென்று வரம்பில் சைக்கிளில் ஓடியபடியே தனது தோட்டத்திற்குச் செல்பவன்.

அன்றும் அப்படித்தான் வரம்பினில் சைக்கிளில் போனவன் மாணிக்கத்தின்ரை தோட்டத்தையடைந்ததும் கிணற்று ஆடுகாலோடு சைக்கிளை நிறுத்திவிட்டுப் மாணிக்கத்தை தேடிப் போனான்.

மாணிக்கம் ஞானசெல்வத்தைக் கண்டதும்,என்ன செல்வம் இந்தப்பக்கம் „என்று கேட்க வெங்காயத் தோட்டத்திற்குள் தனியாக ஒரு நிரையில் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்த பார்வதி திரும்பிப் பார்க்கிறாள்.

அவளுடன் இன்னும் இரண்டு பெண்கள் அருகருகே புல்லுப்பிடுங்கிக் கொண்டிருக்க அதில் ஒருத்தி „என்ன நாம்பன் பசுவைத் தேடியே வந்திட்டுப் போல அங்கை பார்

பாருவின்ரை முகத்தை செல்வத்தையே திரும்பித் திரும்பிப் பார்க்கிறாள்’ என்கிறாள்.

மெய்யே செல்வம் அண்டைக்கு உங்கடை தோட்டத்தாலை பேகேக்கில பார்த்தன் வெங்காயத் தோட்டத்திற்குள்ளை தொயில் கீரையும் புல்லும் அடர்ந்து போய்க் கிடந்தது.கீரை பிடுங்கேக்கிலை தொயிலையும் பிடுங்கி எடுத்து சமச்சிருக்கலாந்தானே என்று மாணிக்கம் சொல்ல……

உண்மைதான் அம்மா கீரை பிடுங்;கேக்கிலை தொயில் கீரையையும் பிடுங்கிச் சமைச்சவதான் .நானும் அம்மாவும் சேர்ந்து கீரை பிடுங்கி அடுத்த நாள் சுண்ணாகச் சந்தையிலை விற்கக் கொண்டு போகேக்கில கொஞ்சத் தொயிலையும் கொண்டு போனனான்.

கீரைப் பிடியளை விற்கேக்கிலை தொயில் கீரையை விற்கலாம் என்றால் ஒருத்தரும் வாங்கேலை கீரைப் பிடியோடை அதைச் சேர்த்து விற்றுப் போட்டு வந்திட்டன் சிலருக்கு தொயில் என்ற திறமான கீரை இருப்பது தெரியாது என்றவன், தான் பார்வவதியைத்தான் பார்க்க வந்ததைக் காட்டிக் கொள்ளாமல் , அதே நேரம் தாயும் தகப்பனும் வருகிற சனிக்கிழமை காரைநகருக்கு கல்யாண வீடொன்றுக்கு போறதெண்டும் என்னையும் வரச் சொன்னவை இதுதான் நல்ல சந்தர்ப்பம் அன்றைக்கு எங்கடை தோட்டத்திற்குள்ளை புல்லுப் பிடுங்க இவர்களை ஒழுங்கு படுத்தினால் இவர்களோடு பார்வதியும் வருவாள் என்ற முடிவுக்கு வந்தவன், வெங்காயத்துக்குள்ளை புல்லுப்பிடுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அருகே இருந்த பெருவாய்க்காலில் நின்றபடி „வாற சனிக்கிழமை எங்கடை தோட்டத்திலை,வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்க வேணும் நீங்கள் மூன்று பேரும் வரவேணும் என்று அவன் சொன்ன விதம் உங்களில் எவர் வந்தியளோ வரேலையோ பார்வதி வரவேணும் என்பது போல பார்வதி அதை உணரவே, அவைக்கு நேரமில்லாட்டிலும் நான் வாறன் என்று சொல்ல, புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்த ஒருத்தி கண்ணாலை

சைகை செய்து அவள் கோடு போட்டிட்டாள் இவர் றோட்டுப் போடப் போகிறார் என ஞானசெல்வத்துக்கும் பார்வதிக்கும் கேட்காது என்று நினைத்துக் கொண்டு சொல்ல அது இருவருக்குமே கேட்கிறது.

அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள் என நினைத்து தனக்குள் மகிழ்கிறான் ஞானசெல்வம்.பார்வதி அவனை நிமிர்ந்து பார்க்க,கிணத்தடிக்கு வரச்சொல்லி கண்களால் காட்டிவிட்டு அவன் மாணிக்கத்திடம் சொல்லிவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்குகிறான்.

செல்வம் இந்த நேரம் மதகிலை இருந்து சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கிறவன் என்ன திடீரென்று என்னுடைய தோட்டத்துக்கு வந்திருக்கிறான் என்னவாக இருக்கும், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதைப் போல காரணமில்லாமல் வரமாட்டானே, சில வேளை என்னுடைய தோட்டத்திலை என்னென்ன நட்டிருக்கிறன் என்ற பார்க்க வந்திருப்பானோ….ச்சாய்ச்சா …..அப்படி இருக்காது அப்படிப்பட்ட பொடியனும் அல்ல….ஒரு வேளை இந்தப் பதுப் பெட்டையைப் பார்க்க வந்திருப்பானோ….அவன் ஒரு நாளும் அதைச் செய்ய மாட்டான்…. அவரின் சிந்தனை தொடர… பிறகு வேலைக்குப் போற நேரம் போகட்டும் ….இப்ப பேசி வைப்பம் என்று தொல்புரத்திலையிருந்து ஒரு சம்பந்தம் பேசி வர…இவன்ரை தேப்பன் சுப்பையா அதை மறுத்து முதலிலை அவன் வேலையொன்றுக்குப் போகட்டும்..பிறகு யோசிப்பம் என்று சொல்லிவிட்டார்……இதைவிட கார்த்திகேசின்ரை இளையவள் இவனுக்கு கடுதாசி எழுதிக் கொடுத்ததாயும் ..அதை இவன் பொருட்படுத்தவேயில்லை…என்று பன்னாலைப் பக்கம் கதைக்கிறது கொஞ்ச நாளாய் நடக்குது….ஆனால் ஒரு வேளை…..இந்தப் புதுப்பெட்டையை…..எதோ சைட்டடிக்கிறது என்று சொல்றவை அதுக்குத்தான் சைட் அடிக்க வந்தானோ…சைட் அடிச்சால் பரவாயில்லை….சேறு கண்ட இடத்திலை விளக்கி தண்ணி கண்ட இடத்திலை கழுவிப் போட்டு போகலாம்….வேற மாதிரி ஏதேன் நடந்தால்…நல்லாயிருக்கு

நடக்க விட்டிடுவமே…எங்கடை மானம் என்ன மரியாதை என்ன என்று யோசித்தவாறு வாய்க்காலுக்குள் படர்ந்த அறுகம்புற்களை புல்லுச்;சதத்தால் செதுக்கியும் அறுத்துக் கொண்டிருக்க…தண்ணி உடாய்க்குது தண்ணி குடிச்சுட்டு வாறன் என்று பார்வதி தன்னோடு புல்லுப்பிடுங்கிறவைக்;குச் சொல்லிவிட்டு ஞானசெல்வத்திற்குப் பின்னாலை…ஐஞ்சு மீற்றர் தூரத்திலை பார்வதி கிணத்தடியை நோக்கி நடக்க …இவளுக்கு வேறை உடாய் தொடங்கவிட்டுது கடைசியிலை வெட்டுக் கொத்திலைதான் முடியப் போகுது என்று புல்லுப்புடுங்கிறவளில் ஒருத்தி சொல்கிறாள்.

மாணிக்கம் புல்லுச்சதத்திலிருந்த மண்ணைப் பெருவிரலால் துடைத்தபடி எழுந்து பார்க்க ஞானசெல்வம் முன்னால் போக அவனின் பின்னால் பார்வதி போய்க் கொண்டிருப்பதைப் காண்கிறார்.

கிணத்தடிக்கு வந்து சேர்ந்த ஞானசெல்வம் பார்வதி வரும் வரை காத்து நிற்கிறான்.அவனருகில் அவள் வந்தவுடனேயே பதில் என்ன என்று கேட்கிறாள்.அவர்கள் கதைப்பதை தூரத்திலிருந்து துல்லியமாகப் பார்க்க முடியாது.

அவர்களை இரண்டு வாழை மரங்கள் குட்டிகளோடு மறைத்துக் கொண்டு நின்றன.பதில் என்ன என்று அவள் கேட்ட துணிச்சலை அவன் வியந்தபடியே.மெதுவாக அவளின் கைகளைப் பிடித்து என்னுடைய எதிர்கால மனைவி நீதான் என்கிறான்.இதுதான் எனது பதில் என்கிறான்.

பார்வதியோ தான் கனவில் மிதப்பாக உணருகிறாள்.ஞானசெல்வம் பார்வதியின் கையைப் பிடித்து நீதான் எனது எதிர்கால மனைவி என்று சொன்னது சாதாரண வார்த்தைகள் அல்ல.

ஏதோ பொழுதுபோக்கிற்காக முசுப்பாத்தியாக சொன்ன வார்த்தைகள் என்றும் எடுத்துவிட முடியாது.பார்வதி யார் அவளின் பெற்றோர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்

என்பது மட்டுமல்ல தெல்லிப்பழை என்ற தனது கிராமத்தில் உள்ள மக்களைப் பற்றியும் ஏற்ற தாழ்வுகள் பற்றியும் அவன் தெளிவாக அறிந்து வைத்திருந்தபடியால் மட்டுமல்ல சமூகத் தவறுகளை ஆயந்தறிந்து அவனுக்குள் அவன் தனது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து வைத்திருந்ததனாலேயே அவனால் பார்வதியின் கையைப் பிடித்து நீதான் எனது எதிர்கால மனைவி என்று சொல்லக்கூடிய துணிசசல் அவனுக்குள் ஏற்பட்டுவிட்டது.

இரண்டு நாட்கள் மட்டுமே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து காதல் வருமா என்று கேட்டால் அத்தகு காதல்கள்களால்; தூக்கிக் கொண்டு போய் கல்யாணம் செய்த கதைகள் நிறையவே தமிழர் சமூகத்துக்குள் உண்டு.

பள்ளிக்கூடத்திற்கு ஏற்றிக் கொண்டு போன கார்ச்சாரதியைக் காதலிச்ச மாணவி பெற்றோரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அவனுடன் சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்து பின்னர் வெளிப்பட்ட கதைகளைக் கொண்டதுந்தான் எமது சமுதாயம்.

ஞானசெல்வம் பார்வதி காதல் வெறும் காதல் மட்டுந்தான் என்று சொல்ல முடியாது.அதில் காமமும் கலந்துதான் இருந்தது.இவர்களின் காதல் மட்டுமல்ல எல்லாருடைய காதல்களிலும் காமமும் கலந்துதான் இருக்கும்.

பார்வதிக்கு அவனுடைய நடை உடை பாவனை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுக் காதலாக மாறியது போலத்தான் ஞானசெல்வத்திற்கும் எல்லா நடுகைக்காரிகளுக்கும் மத்தியில் இவள் வித்தியாசமாக இருக்கிறாளே இவளை அறிய வேண்டும் என்ற ஆர்வந்தான் உங்களுடைய பெயர் என்ன என்று எழுதிய சஞ்சிகையை அவளின் கையை இழுத்து அவள் கையில் திணித்தது.

அவளும் அவனால் ஈர்க்கப்பட்டு எதிர்கால நிலவரம் எதுவாக இருக்கப் போகிறது என்ற எந்தவிதமான அஞ்ச உணர்வுமே

இல்லாமல் என்னுடைய பெயர் பார்வதி உங்களுடைய பெயர் என்ன என்றும் நான் உங்களை விரும்புகிறேன் என்பதை நான் என்பதுடன் நிறுத்தி எழுதிய தாளை கசக்கி அவனுடைய மார்புக்கு நேர விட்டெறிவதற்கும் ஒரு துணிவு வேண்டும்.

ஒரு பெண்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்து அவளின் கையில் சஞ்சிகையைத் திணிப்பதை சமூகப் பெரியவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் காவாலித்தனமானது, விடுகாலித்தனமானது பெத்ததுகளின் பெயரைக் கெடுக்க வந்த தறுதலைகள் என்று பெயர்களைத்தான் சூட்டுவார்கள்.

ஆனால் காதலிப்பவர்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைப் பற்றி எள்ளளவும் கவலைப்படுவதே இல்லை.கவலைபு;பட வேண்டிய அவசியமும் இல்லை.

தயங்கிய காதலும் தடுமாற்றமான காதல்களும் தடைபட்டு காதலனும் காதலியும் இது எமது தலைவிதியென நினைத்துக் கொண்டு வேறொருவரையோ வேறொருத்தியையோ கல்யாணம் செய்து கொண்டு,எப்பவாவது பழைய காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது மனதுக்குள் முன்னாள் காதலன் முன்னாள் காதலி என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டு கடந்து செல்வதும் உண்டு.

தனது கையைப் பிடித்து ஞானசெல்வம் நீதான் எனது எதிர்கால மனைவி என்று சொன்னதற்கு அவன் ஏதோ தீர்மானத்தை உறுதியாக எடுத்து காதல் பாதையை சரியாக செப்பனிட்டு வைத்திருக்கிறான் என பார்வதி ஊகித்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக சிரித்து பிறகு மெது மெதுவாகப் பேசி காதலை வெளிப்படுத்தும் அந்த நறுமணங்கள் மிக்க பூக்கள் கொண்ட காதல் பூங்காவில் உலவிவரும் காலத்தை எதிர்நோக்கி அவள் நிற்க, அவனோ உலகில் உள்ள அத்தனை

நறுமணம் மிக்க பூக்களையும் அவள் மீது சொரிந்தது போல அவள் சிலிர்த்து நின்றாள்.

பிடித்த கைகளை விடுவித்துக் கொள்ள மனமில்லாமல் இருந்த அவள் திடீரென அவனைக் கட்டிப் பிடித்து அவனின் தோளில் தலைவைத்த போது, அவனின் தோளில் அவளின் சிலிர்ப்புக் கண்ணீர் சுட்டதை அவன் உணர்ந்தான்.

நடுகைக்காரிகள் அவர்களை மறைத்து நின்ற வாழைமரங்களின் இடைவெளிக்கூடாக பார்க்கையில் அவள் அவனின் தோளின் மீதிருந்து தலையை எடுத்ததை அவர்கள் பார்த்துத் திடுக்கிட்டு, இவள் என்ன மனசிலை நினைச்சுக் கொண்டிருக்கிறாள்,கடைசியிலை பார் முருக்கங்காயை காந்திச் சாப்பிட்டு சப்பிப் போட்டு போறதைப்; போல சுப்பையற்றை மகன் செய்யப் போகிறான், பரியாரியாரைத் தேடி தவசி மானங்கெட்டு மரியாதை கெட்டு ஓடி இவளாலை அந்த மனுசன் தலைகுனியப் போகுது என்று அவர்களில் ஒருத்தி சொல்லிக் கொண்டே தலையைத் திருப்பிப் புல்லுப் பிடுங்கத் தொடங்கினார்கள்.

அவளின் முன்வரிசைப் பற்கள் மெதுவாக தெரியத்தக்கதாக,எனது வியர்வை உங்களுக்கு மணக்கவில்லையா என்று அவன் கண்களைப் பார்த்துக் கேட்க காதலியின் வியர்வை காதலனுக்கு நறுமணம் என்று சொல்லி அவன் சிரிக்கிறான்.

அந்தச் சூழ்நிலையை அவனே கலைக்கிறான்.’சரி சரி கனநேரம் நாங்கள் இஞ்சை நின்றால் மாணிக்கத்தார் கதையைப் பரப்பிவிடுவார் என்றவன் இதிலை நாலு வடைகள் இருக்குது சாப்பிடுங்கோ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் குனிஞ்சு குடத்திலிருந்த தண்ணீரைச் சிரட்டையில் வார்த்துக் குடிப்பதைக் கண்ட ஞானசெல்வத்தின் முகம் சிவக்கத் தொடங்க,கேடுகெட்ட சாதிமான்கள் என்று பல்லை நெருமிக் கொண்டே சிரட்டையைப் பறிக்கப் போன ஞானசெல்வம் குடிப்பதற்கு

வேறு எதுவுமில்லையோ என்று தேடிய போது ஆடுகால் மரத்தின் கெவரில் கொழுவியிருந்த பித்தளை மூக்குப் பேணியைக் கண்டு விடுகிறான், அதைக் கண்டதும் பார்வதியின் கையில் இருந்த சிரட்டையை வேகமாக பறித்தெடுத்த அவன் கீழே போட்டுவிட்டு பித்தளை மூக்குப் பேணியில் தண்ணியை வார்த்துக் கொடுக்க அவள் வேண்டாம் மாணிக்கத்தார் கண்டால் பிரச்சினையாகிவிடும் என்று பயந்தாள்.

பயப்படாதையுங்கோ உங்கள்; காதலை என்னிடம் சொல்ல கடிதத்தை என்னை நோக்கி எறிந்த துணிச்சலிருந்ததே அதே துணிச்சல் எமது காதல் நிறைவேறி கல்யாணம் வரைக்கும் அப்பாலும் வேண்டும்.

பயப்படாமல் மூக்குப் பேணியில் குடியுங்கோ எதுக்கும் நானிருக்கிறன்.நீங்கள் அனைவரும் சிரட்டையை எடுத்தால் உங்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்று இந்தச் சாதிமான்கள் நினைப்பார்கள்.

 

பயப்படாமல் குடியுங்கள்,குடிச்சிட்டு என்னிட்டையும் தாருங்கள் எனக்கும் தண்ணி உடாய்க்குது என்றவன் அவள் குடித்த மிச்சத் தண்ணியை குடிச்சிட்டுக் கொண்டிருக்க சைக்கிள் காண்டிலில் இருந்த டெயிலி நியூஸ் பத்திரிகையை எடுத்தவள் அதிலிருந்த தலைப்புக்களை வாசித்துவிட்டு செய்தியை வாசிக்கத் தொடங்க ஞானசெல்வம் திகைச்சுப் போய் இங்கிலீஸ் வாசிப்பீர்களா என்றான் ஆச்சரியத்துடன்.

வாசிப்பன் நான் யூனியன் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி சோதனையில் இங்கிலீசில் சாதாரண சித்தியும் தமிழிலும், சமயத்திலும்,சரித்திரத்திலும் கிறடிட் எடுத்தனான் ஆனால் எண்கணிதத்தில் பெயில் என்றவுடன், சரி உங்களுடன் நிறையக் கதைக்க வேண்டும்.தலையிடியாயிருக்கு என்று பொய் சொல்லிவிட்டு வாருங்கள் நான் லிங்கம் கடையடி மதகில் இருக்கிறன்.நாங்கள் இரண்டு பேரும் கதைச்சுக் கொண்டே உங்கடை வீடுவரையும் போகலாம் …என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே….வீடு

வரையுமா…ஐயோ….வேண்டாம்….என்று அவள் பயப்பட்டுச் சொல்ல, வீடு வரையும் என்றால் வீட்டுக்கு கிட்ட வரை….என்று அவன் சொல்லிக் கொண்டே வடையை நீட்ட…இப்ப வேண்டாம்,உங்களோடை வரேக்கிலை சாப்பிடுறன்…கனநேரமாய் இங்கை நிக்கிறம், மாணிக்கத்தார் சந்தேகப்படுவார் நீங்கள் போய் காத்திருங்கள் ….நான் வாறன் …என்றவள் மாணிக்கத்தாரை நோக்கிப் போக,ஞானசெல்வம் சைக்கிளை எடுத்து வரம்பினில் ஓடி வெள்ளவாய்க்காலில் இறக்கி ஏற்றி லிங்கம் கடையடி மதகை நோக்கிப் போகிறான்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *