கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 12 ……(உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்.

இயற்கையின் படைப்பில் பகலில் உழைத்துவிட்டு, பகலில் உழைத்த உடல் களைப்பையும் மனக் களைப்பையும் இரவினில் போக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல பகலில் சக்தியாக மாறி எரிந்து போகும் கலங்கள் இரவினில் மீள உருவாவதற்குமாகத்தான் இரவுப் பொழுது ஓய்வுக்காலம் என்பது இயற்கையின் விதி.

 

ஆனால் இன்றைய நவீன உலகில் நீயா நானா என்ற உற்பத்திப் போட்டி காரணமாக வளர்ச்சியடைந்த உலக நாடுகளில் இரவு பகல் என்று பாராமல் இருபத்தி நான்கு மணி நேரமும் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல.இரவு வேலைக்குப் போன முதல் நாளே உடல் அலுத்துப் போயிருந்தது.பகலோடிணைந்த இரவு வேலைக்கே ஒய்வு தேவையென்னும் போது,இரவு வேலையென்பது கடினமானதுதான்.

ஆனால் வாழ்வியல் சூழ்நிலை காரணமாக பணத்தின் தேவை கருதி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதான் வாழ வேணடும் என்ற சூழ்நிலை மனிதனைச் சுற்றித்சூழ்ந்து நிற்கின்றது.மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிக் கொண்டே வருகின்றது.

மிசின்களை ஒழுங்கமைத்தன் பின்னர் சில நிமிடங்களுக்கு ஓய்வெடுப்பதற்கென்று ஒரு பக்கச் சுவரோடு ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் இருக்கின்றன.

வேலைக்குப் போனவுடன் நேரே போய் ஒரு கதிரையில் உட்கார்ந்து, மேசையில் முழங்கையை வைத்து கன்னத்தில் கைவைத்து கண்ணை மூடியவுடன் நித்திரைவரப் பார்த்தது.

நித்திரைக்கு போகமாலிருக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.அப்பொழது எனது முதுகில் ஒரு கை வைத்ததும்; அது யோகமலர்தான் என்பதை எனது நாசியும் அறிவும் உணர்ந்துவிட்டது.

அவளிடமிருந்து வரும் வாசனையை நான் நுகர்ந்து பல நாட்களாகிவிட்டன.வலது கையால் தோளின் மேலிருந்த அவளுடைய கையைப் பிடித்தேன்.தோளின் மேல் இருந்த கையை எடுக்காமலே பக்கத்தில் இருந்த கதிரையில் உட்கார்ந்தவள் எனது நிலமையைப் புரிந்து கொண்டு’ ஏங்க இது உங்களுக்குத் தேவையா, பாருங்க ஒரு நாளிலேயே முகம் காஞ்சு போச்சுது கீழ்க்கண் கறுத்துப் போச்சுது என்று சொன்னவளைத் திரும்பிப் பார்த்தன் அவள் கண்களிலிருந்து எனக்காக கவலைப்பட்டுப் பொலபொலவென கண்ணீர் கொட்ட தனது கைப்பைக்குள் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்துத் திறந்து அதற்குள்ளிருந்து அப்பிள்பழத் துண்டுகளையும்

தோடம்பழச் சுளைகளையும் தந்து சாப்பிடுங்கள் என்றவள், „ எனக்குத் தெரியும் நீங்க இன்னைக்கு இப்படித்தான் வருவீங்கன்னு அதற்காகத்தான் இதைக் கொண்டு வந்தனான் என்றவள், பிள்ளைக்குத் தாய் பாசமாகத் தருவது போல தந்து கொண்டேயிருந்தவள்,இனிப் போக வேண்டாம்ங்க என்றவளிடம் வீட்டுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு அனுப்பினால் நல்லது என்றுதான் இரவு வேலைக்குப் போகிறன்அதுவும் இந்தக் கிழமைக்கு மட்டுந்தானே என்று சமாதானப்படுத்தினன்.

வேலை நேரம் ஆரம்பித்தவுடன் வேலை செய்து கொண்டே இன்றிரவும் வேலைக்குப் போக வேணுமே என்ற அலுப்பான எண்ணத்துடன் வேலை செய்த நான் நாளைக்கு விடிய பஸ்ஸிலை நித்திரை கொள்ளாமல் போக வேண்டுமென்று முடிவெடுத்த நான், மொலக்சில் நடந்த விசயங்களை சாப்பாட்டு இடைவேளையில் அவளுக்குச் சொல்லுவம் என்று இருந்துவிட்டன்.

அவளுக்கு அருகில் செல்லும் போது’ நேற்றிரவு எப்படிங்க வேலை’ என்று கேட்க பிறகு சொல்றன் நிறைய இருக்கு’ என்றவுடன்’அப்படியா „ எனச் சொல்லி அறியும் ஆவலில் இருந்தாள்.

சுவாங்கிடம் சென்று வேலைக்குப் போன விசயத்தைச் சொல்லி அவருக்கு நன்றி கூறினன்.

இடைவேளை வந்தது.அன்று அவள் பூரியும் உருளைக் கிழங்கு புரட்டலும் முட்டைப் பொரியலும் கொண்டு வந்திருந்தாள்.நிறையச் சாப்பிடுங்கள் என்றாள்.இரவு தூங்காமல் வேலை செய்கிறீங்க உடம்பு கெட்டிடும் சாப்பிடுங்க என்றாள் ஆதரவாக.

சாப்பிடுகிற போது, சொல்லுங்க எப்படி வேல எத்தனை பேர் வேல செய்தாங்க என்றாள்.நித்திரை தேவைப்பட்டதால் வேகமாகச் சாப்பிட்ட நான் தண்ணீpரை எடுத்துக் கொண்டு போய் மறைவாக நின்று வாய் கொப்பளித்துவிட்டு அவள் வார்த்துக் கொடுத்த கோப்பியை குடித்த நான் அவள் தோள்மீது சாய்ந்து நித்திரை கொள்ளத் தொடங்கினன்.அவளும் சாப்பிட்டு முடித்திருந்தாள்.

இடது கையைத் தோள்மீது போட்டு எனது தலைமயிருக்குள் கையைவிட்டு மெதுவாக நீவிக் கொண்டிருந்தவள் சொல்லுங்கள் எத்தனை பேர் வேல செய்தாங்க என்றாள்.

எல்லாருமாக ஆறு பேர் வேலை செய்தம்,அத்தனை பேரும் தமிழர்கள்.லீடர் பெயர் மகேந்திரன்.அவர் உங்கடை இடத்திலிருந்துதான் வருகிறவர்.என்னையும் மகேந்திரனையும் தவிர இரண்டு ஆண்களும் இணர்டு பெண்களும் சிங்கப்பூரியர்கள்.

பெண்கள் இரண்டு பேருடைய தாத்தாக்களும் சிறீலங்காவைச் சேர்ந்தவங்கள்.அனால் ஆண்கள் எந்த வம்சாவழியென்று தெரியவில்லை என்று சொன்ன நான் அதில் ஒரு பெண் சாண்ட்விச் போன்ற ஒன்றைத் தந்து சாப்பிட சொல்ல நான் வேண்டாம் என்று சொன்னதையும் சொன்னேன்.

அப்பொழுது அவள் நீங்க யார்கிட்டயும் வாங்கிச்; சாப்பிடாதீங்க.இந்தப் பையில மீன், அவிச்ச முட்டை போட்டுச் செய்த சாண்ட்விச் இருக்கு.பிளாஸ்க்கிலை சுக்குக் கோப்பி இருக்கு என்று அவள் சொல்ல நான் இடைமறித்து நான் நித்திரையாகி பஸ் மூன்று முறை சுற்றிவந்ததையும் பஸ்ஸில் இருந்து இறங்காததையும் அவளிடம் சொன்னதும் „அட கடவுளே இந்த வேலை உங்களுக்குத் தேவையா’ எனக் கவலைப்பட்டாள்.

இரண்டு மணிக்கு இடைவேளை விடுவாங்கல்ல அப்போ இதையெல்லாம் மிச்சம்விடாம சாப்பிட்டு வாழைப்பழம் ஒன்னு வைச்சிருக்கன் சாப்பிடுங்க என்றவள் மறக்காம பையை எடுத்திட்டுப் போங்க, ஆனா நீங்க இரவு வேலைக்குப் போறதில்லை எனக்கு கொஞ்சமும் விருப்பமே இல்ல,ரொம்பக் கவலையாயிருக்குதுங்க என்றாள்.

அக்காவுக்கு உங்க சலறியோட நானும் தரேனுங்க சேர்த்து அனுப்புங்க.

நான் இங்க உங்க பெண்டாட்டிங்க, எனது சலறியும் உங்களுக்குத்தாங்க என்றவள் தூங்குங்க என்றவளிடம் அங்கை கொண்டு போறதுக்கு சாப்பாடு யார் செய்தது என்று கேட்க ,என்ர புருசனுக்கு நான் ஆசையாசையாச் செய்தது என்றவள் இன்னும் பத்து நிமிசம் இருக்கு அதுவரைக்கும் தூங்குங்க என்றவள் எனது தலையை நீவிட்டபடியே அவளும் சுவரோடு சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.

நித்திரைக்கும் முழிப்புக்குமிடையில் நான் அவளின் தோள் மீது சாய்ந்து கொண்டிருந்தன்.எல்லாரும் எழுந்து போவது அசிகையாகத் தெரிந்தது.மலாய்ப் பெண் யோகி என்று கூப்பிடுவதும் அவளின் தோழிகள் ரொமன்ஸ் போதும் எழுப்புங்க என்று சொல்வதும் கேட்டது.

எல்லாரும் போனதன் பின் வழமையானது நடக்க மீண்டும் வேலை ஆரம்பித்தது.வேலை முடிய அவளுடன் நடந்து அவளை பஸ் ஏறும்வரை காத்திருந்து பஸ் புறப்பட அவள் கைகாட்டியவுடன் இரவு வேலைக்காக மொலக்ஸை நோக்கி நடந்தன்.

அங்கு வழமையான வேலைதான் சாப்பாட்டு இடைவேளை வந்தது.மகேந்திரனும் மற்றைய இருவரும் கோப்பி மிசினில் கோப்பி அடிச்சுக் குடிச்சுக் கொண்டிருந்தார்கள்.

நான் யோகமலர் தந்த சாண்ட்விச்சை சாப்பிடுவதும் கோப்பி குடிப்பதுமாக இருந்த போது,நேற்று சாண்ட்விச் தந்து நான் வேண்டாம் என்று சொன்ன அந்தப் பிள்ளை ஒரு பிறவுன்; தாளில் மடித்து எதையோ கொண்டு வந்து தந்தவள்,’இதை அம்மா உங்களிடம் கொடுக்கச் சொல்லித் தந்தவா’ என்றாள்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது, அவளை வியப்புடன் பார்க்க அவள், இன்று காலை, சிறீலங்காவிலிருந்து வந்த ஒரு தமிழர் நான் வேலை செய்கிற கொம்பனியில் இரவு வேலை செய்கிறார் என்று சொன்னன்.

நான் வேலைக்கு வரும் போது இந்தப் பார்சலை தந்து உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.உணவைப் பார்சல் செய்யும் மண்ணிறத் தாளை சிங்கப்பூரில் கடைகளில் வாங்கலாம்.மண்ணிறத்தாளின் ஒரு பக்கத்தில் பொலித்தீன் தாள் அமத்தி ஒட்டப்பட்டிருக்கும்.அந்த பொலித்தீன் அமத்திய பக்கத்தில் உணவை வைத்துத்தான் பார்சல் செய்து கொடுப்பார்கள்.

அந்தப் பெண்பிள்ளை அந்தப் பார்சலைத் தந்துவிட்டு பிரித்துப் பாருங்கள் என்று சொல்ல பிரித்துப் பார்த்தேன்.நான்கு குண்டுத் தோசைகளும் தேங்காய் சேர்த்த செத்தல்மிளகாய்ச் சம்பலும் இருந்தன. இவை குண்டுத் தோசை என்று நான் சொல்ல,’ அம்மாவும் அப்படித்தான் சொல்றவா, ஆனால் பொதுவாக குழிப்பணியாரம் என்றும் சொல்றவங்க என்றவள் சாப்பிடுங்கள் என்றவள், நான் சாண்ட்விச்சை சாப்பிட்டு கோப்பி குடிப்பதைக் கண்டதும், இது நீங்கள் வீட்டிலை இருந்து கொண்டு வந்தீங்களா என்று கேட்க, இல்லை இதை என்னோட ஜிஇயிலை வேலை செய்யிற மலேசியப் பெண் கொண்டு வந்து தந்தவர் என்றன்.

அவள் உடனே நீங்கள் மறீஜ் பண்ணீட்டிங்களா என்றாள்.மறீஜ் பண்ணி மூன்று பிள்ளைகள் இருக்குது என்றன்.அப்படியா ஆனால் மலேசியப் பெண் எதுக்கு இதெல்லாம் கொண்டுவந்து தருகிறா என்று கேட்டவளுக்கு எந்தப் பதிலுமே சொல்லாமல் இருந்தன்.கதையை வளர்த்தால் நானே உள்ளதையெல்லாம் சொல்லிவிடுவேன் என்ற பயம் எனக்கு.

ஊர் உணவை நினைவுபடுத்தியமைக்காகவும் பற்றுடனும் தந்தமைக்காகவும் அம்மாவுக்கு நான் நன்றி சொன்னதாக சொல்லுங்கள் என்றன். இதைக் காலையிலை சாப்பிடுகிறன் என்றவுடன் அந்தப் பெண்பிள்ளை அம்மா கேட்டவர் நீங்கள் சிறீலங்காவில் எந்த ஊர் என்று கேட்டுக் கொண்டு வரச் சொன்னவர் என்று அவள் கேட்க தெல்லிப்பழைதான் எனது ஊர் மகாஜனாக் கல்லூரிக்குப் பக்கத்தில்தான் எனது வீடு அந்த இடத்தை அம்பனை என்று சொல்வார்கள் என்றும் சொன்னன்.

எல்லாவற்றையும் கேட்ட அவள் திரும்பி அவளிடத்துக்குப் போக திரும்பிய போது, நில்லுங்கள் எனக்கு குண்டுத் தோசை தந்தனீங்கள் நான் தாறதையும் நீங்கள் வாங்க வேண்டுமென்று சொல்லிய நான் சுக்குக் காப்பி கொஞ்சம் குடியுங்கள் என்ற நான் எதில் வார்த்துக் கொடுப்பது என்று யோசித்த போது அவளே தனது இருப்பிடத்திற்குப் போய் ஒரு கப்பை எடுத்துவர அதில் ஊற்றிக் கொடுத்தன் அதைக் குடித்தவள் இரவு நித்திரைக்கு அருமையாக இருக்குது என்று சொல்லியவாறு, அடுத்து ஒரு கேள்வியை குண்டாகத் தூக்கிப் போட்டாள் கோபப்படாதீங்க அந்த மலேசியப் பெண்ணுக்கு உங்களில் ஏன் இவ்வளவு அக்கறை என்றாள்.

நான் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாது தெரியாது என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தன்.அவள் குடித்தபடியே அந்து இடத்தைவிட்டுப் போய்விட்டாள்.

வேலை விடியற்காலை ஐந்து மணிக்கு முடிய ரொய்லற்றுக்குள் போய் நான் தயாராக கொண்டு வந்த பற்பசையையும் பிரஸ்ஸையும் எடுத்து பல்லை மினுக்கினன்.பல்லை மினுக்கியதால் ஒரு சுகம் கிடைத்தது.

இல்லாதுவிட்டால் பஸ்ஸில் ஏறி யாரோ ஒருவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாலும் வீட்டுக்குள் போகும்வரை வாயை மூடிக் கொண்டே இருப்பது என்னால முடியாத காரியம்.

ஏதோ ஒரு பாரத்துடன் இருப்பது போன்ற உணர்வை அது தரும்.ஊரில் இருக்கும் போது காலையில் பல்லு மினுக்கினாலும் சாப்பிட்டவுடன் வேப்பங்குச்சியோ அல்லது பூவரசம் கிளையையோ முறிச்சு பல்லு மினுக்காமல் விடமாட்டன்.என்னுடைய சின்ன மைத்துனி அத்தான் எப்பவும் பூவரசம் குச்சி இல்லாட்டி வேப்பங்குஞ்சியுமாக திரியிறவர் என்று சொல்லிச் சிரிப்பாள்.

பல்லு மினுக்கிவிட்டன் என்ற திருப்தியுடன் யூரோங் இன்ரர் சேன்ஜ் போகிற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தன். நேற்றுப் போல ஏறியவுடனேயே நித்திரை கொள்ளவில்லை.

சில நிமிடப் பயணத்திலேயே யூரோங் இன்ரர் சேன்ஜ் போய் இன்னொரு பஸ்ஸில் ஏறி எனது வீடு இருக்கும் பூன்லே றைவிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டன்.

மனம் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும்.அதுவும் மனைவி பிள்ளைகளை விட்டிட்டுப் போய் வெளிநாடொன்றில் வேலை செய்பவர்கள் நிம்மிதயாகவே இருக்கமாட்டார்கள்.எப்பொழுதும் மனைவி பிள்ளைகளை நினைத்துக் கொண்டுதானிருப்பார்கள்.

வேலை செய்யும் நாடுகளின் நேரத்தை தமது சொந்த நாட்டின் நேரத்துடன் ஒப்பிட்டு இப்பொழுது மனைவி பிள்ளைகள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைப்பதும் உண்டு.

எனது வாழ்க்கையில் யோகமலருடனான சந்திப்பினால் ஆறொன்று கிளையாக பிரிந்து வோறொரு திக்கில் பயணிப்பது போல அவளுடன் இணைந்த சிங்கப்பூர் வாழ்க்கை அமைந்திருந்தது.

வீட்டுக்குள் வந்த நான் மொலக்சில் தமிழப் பிள்ளை தந்த குண்டுத் தோசைப் பார்சலை மேசையில் வைத்துவிட்டு தேத்தண்ணி வைப்பம் என்று நினைத்துக் கொண்டு சூரியகுமார் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தன்,சூரியகுமார் எனது அசிகையைத் தெரிஞ்சு முழித்தவர் பொஸ் வந்துவிட்டியளா என்றார்.

„ம்’…என்று பதிலளித்த நான்,மேசையிலை குண்டுத் தோசை வைச்சிருக்கிறன் எடுத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குள் போகவிருந்த என்னிடம் பொஸ் இஞ்சை உங்களைப் பற்றி கனகதை நடக்குது.

நீங்கள் இரவு வேலைக்குப் போகவில்லையாம் மலேசியப் பிள்ளையோடை இரவிரவாக இருந்திட்டு வாறியள் என்று கதைக்கிறாங்கள். நீங்கள் அந்தக் கொம்பனிக்கு நடந்து போனதைக் கண்டதாகச் சொல்லியும் அவங்கள் நம்பவேயில்லை என்றான்.

நான் அதற்கு எந்தப் பதிலுமே சொல்லாமல் தேத்தண்ணி வைக்கப் போனன். சும்மாவே வாயைச் சப்புகிற உலகம் அவல் கிடைச்சால் சும்மாவா இருக்கும்.நான் நடந்து கொள்வது சரியா பிழையா என்பதை எனது மனத்தராசில் போட்டுப் பார்க்க விரும்பவில்லை.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் உடல் சம்பந்தப்பட்டதே.சத்தியம் நேர்மை மனச்சாட்சி இவைகளின் வழியில் நடக்க வேண்டுமென்ற எனது இயல்பு என்மீது தீராத காதல் வைச்ச யோகமலரைக் காதலிக்க வைத்து மலேசியா மனைவியாக அவளை ஏற்றுக் கொண்டு வாழ வைத்துவிட்டது.

முதல் நாள் சந்திப்பில் எற்பட்ட சிறிய அறிமுகத்தினால்; அடுத்த நாளே மொலக்சில் வேலை செய்த பெண்பிள்ளை தாயார் கொடுத்ததாகக் குண்டுத் தோசை கொண்டுவந்து தந்திருக்கிறார்.

நான் கல்யாணம் செய்தவன் என்பதை அந்தப் பிள்ளை ஊகித்துத் தாயாரிடம் சொல்லியிருக்கலாம்.அதனால் ஒரே நாட்டின் வேர் என்ற ரீதியில் தமிழர் என்ற அபிமானத்தில்தான் குண்டுத் தோசையை கொடுத்தனுப்பியிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

சிலோன் றோட்டில் உள்ள செம்பவான் பிள்ளையார் கோவிலுக்குப் போகும் போது அங்கு கோவிலுக்கு வருபவர்களில் பெரும்பான்மையான தமிழர்கள் எமது நாட்டு பரம்பரையினராக இருப்;பதை அவதானித்திருக்கிறேன்.அவர்களில் சிலர் என்னிடம் யாழ்ப்பாணத்தில் எந்;த ஊர்; என்று விசாரித்துமிருக்கிறார்கள்.

அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து கதைப்பதைக் கவனித்திருக்கிறன்.சிங்கப்பூரின் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.வார்த்தைகளின் இறுதியில் „லா’ போட்டுக் கதைப்பதில் ஒரு மென்மையான அழகு இருப்பதை உணர்ந்தன்.அது எனக்குப் பிடித்திருந்தது.அப்படி நானும் சில வேளைகளில் கதைச்சதும் உண்டு.

குண்டுத் தோசையை சாப்பிட எனது மனம் இடம்கொடுக்கவில்லை.யோகமலர் கொண்டு வந்து தரும் சாப்பாட்டைதவிர எவர் தந்தாலும் சாப்பிடக்கூடாது என்று எனது மனம் தானாகவே முடிவெடுத்துவிட்டது.

அவளும் யாரிடமும் வாங்கிச் சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.தனது அன்பாலும் அக்கறையாலும் தனது கைக்குள் என்னை வைத்திருந்தாள்.

தேத்தண்ணியைக் குடித்த நான் குளித்துவிட்டு படுத்த எனக்கு உடனடியாக நித்திரை வரவில்லை.மனைவிக்கு நேற்று அனுப்பிய கம்பாயப் பார்சல் எப்படியும் வெள்ளிக்கிழமைக்குள் போய்விடும் என்று நினைத்துக் கொண்டு படுத்திருந்தன்.யோகமலரும் போட்டு அழகு பார்த்திருப்பாள் என்ற எண்ணத்துடன் குண்டுத் தோசை விசயத்தை இன்றைக்கு அவளுக்கு சொல்ல வேண்டும் என்ற நினைப்புடன், என்னை ஏன் விரும்பினால் என்பதை இன்றைக்கு கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நித்திரை கொள்ளத் தொடங்கினன்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *