நடுகைக்காரி!…. தொடர் 1….. ( குறு நாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

(பார்வதி கசக்கி அவனின் மார்பிற்கு நேரே எறிந்த சிறுதுண்டுத்தாள் காதல் சொல்லும் செய்தி மட்டுமல்ல.அது ஞானசெல்வத்தின் இதயத்திற்குள் எறிந்த மன்மதக் காதல் அம்பு.அவன் கொடுத்து சஞ்சிகை அவளுக்கான செங்கம்பள வரவேற்பு…)
![]()
![]()
பகுதி 01 ….
நானும் ஞானசெல்வமும் ஒரே கிராமந்தான். எங்களுடைய கிராமத்திற்குப் பெயர் தெல்லிப்பழை.
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து வடக்கு வீதி காங்கேசன்துறைக்கும், தெற்கு வீதி யாழ்ப்பண பட்டினத்திற்கும், கிழக்கு வீதி அச்சுவேலிக்கும்,மேற்கு வீதி பண்டத்தரிப்புக்கும் செல்கின்றன.
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அம்பனைச் சந்திவரையும் உள்ள வீதிப் பகுதிக்கு மகாஜனா கல்லூரியின் நிறுவனர் பாவலர் துரையப்பாபிள்ளையின் பெயரை தெல்லிப்பழைக் கிராம சபையின் அங்கீகாரத்துடன் அம்பனைக் கலைப்பெருமன்றம் வைத்திருந்தது.
தெல்லிப்பழைச் சந்தியிலுள்ள மதகைத் தவிர்த்து அம்பனைச் சந்திவரை ஆறு மதகுகளும், அம்பனைச் சந்திக்கப்பால்,அளவெட்டி வயலுக்கூடாக அளவெட்டியை ஊடறுத்து மல்லாகம் அலுப்பாய்ச் சந்தியை சென்றடையும் வீதி இந்த ஏழாவது மதகு இருக்கும் இடத்திலேயே ஆரம்பிக்கின்றது.
மகாஜனக் கல்லூரியின் மேற்குப்புற ஓழுங்கை ஆரம்பிக்கும் இடத்திலிருக்கும் மதகும், அம்பனைச் சந்தியிலிருக்கும் மதகும், அளவெட்டிக்கு போகும் வீதியிலிருக்கும் மதகுந்தான்
சுப்பையா சண்முகவல்லி தம்பதிகளின் ஐந்தாவது பிள்ளையான ஞானசெல்வத்தின் சிம்மாசனங்கள்.
மதகில் இருப்பவர்களுக்கு சமூகம் பார்த்துப் பாராமல் வழங்கிய பெயர்கள்தான் காவாலிகள், விடுகாலிகள்,தறுதலைகள், வேலைவெட்டியில்லாதவர்கள், மதவடிப்பிரபுக்கள் என்பனவாகும்.
ஞானசெல்வத்திற்கும் அதே பெயர்கள் இடப்பட்டுவிட்டன.சுப்பையாவை விற்க வந்தவன் என்ற பெயரும் உண்டு.மற்றவர்கள் தனக்கு என்னென்ன காரணப் பெயர்களை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஞானசெல்வத்திற்கு இல்லை.
ஞானசெல்வம் மகாஜனாக் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 3 கிறடிட்டும் 2 டிஸ்ரிங்சன் எடுத்து சித்தியடைந்த போதும் உயர்தர வகுப்பில் படிக்க வேண்டும்; என்ற ஆசை அவனுக்கில்லை.மகாஜனாவில் ஆங்கிலத்தில் டிஸ்ரிங்சன் எடுத்த மாணவன் அவன் ஒருவன்தான்.
அவனுக்கு மூத்த சகோதரங்கள் என இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உண்டு.மூத்த அண்ணன் மகாலிங்கம் யாழ் கச்சேரியில் எழுதுவினைஞராக வேலை செய்கிறான்.
மூத்த அண்ணனின் மனைவியின் பெயர் கார்த்திகைச்செல்வி.அவள் குடும்பத்தலைவி .இரண்டாவது அண்ணனின் பெயர் சிவலிங்கம்.கிளிநொச்சியில் ஆசிரியராக இருக்கிறான்.அவனின் மனைவி பெயர் இராஜகுமாரி.அவளும் ஆசிரியைதான்.
மூன்றாவது சகோதரி பெயர் தனலட்சுமி.கணவரின் பெயர் பரராசசிங்கம் அவரும் ஆசிரியர்தான்.மாவிட்டபுரம் மகாவித்தியாலத்தில் ஆசிரியராக இருக்கிறார்.தனலட்சுமி
தெல்லிப்பழை பன்னாலை மகாவித்தியாலயத்தில் ஆசிரியையாக இருக்கிறாள்.
நான்காவது சகோதரி சிவலட்சுமி. அவள் கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியை.அவளின் கணவர் பெயர் வசந்துகுமார் அவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் பஸ் சாரதி.
ஞானசெல்வம் கடைசிப் பிள்ளையாதலால் கொஞ்சம் செல்லந்தான்.ஞானசெல்வத்தின் தாய் தகப்பன், சகோதரர்கள், அவரவரின் மனைவிமார்.அவனின் சகோதரிகள் அவரவரின் கணவன்மார் என எல்லாருமே பத்திரிகைகள் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்.
ஒவ்வொரு நாளும்; வீரகேசரிப் பத்திரிகையும் டெயிலி நியூசும் எடுப்பவர்கள்.ஞானசெல்வம் மட்டுமே டெயிலி நியூஸ் வாசிக்கும் ஒரே ஆள். வீட்டில் புத்தகங்களை அடுக்கி வைப்பதற்கென்றே ஐந்து மீற்றர் நீளத்திலான ஐஞ்சு தட்டு றாக்கி இருக்கின்றது.புத்தகங்கள் சஞ்சிகைகளால் நிரம்பியிருக்கும் அந்த வீடு.
ஞானசெல்வத்திற்கு புத்தகங்கள் பத்திரிகைகள் வாசிப்பதென்றால் கரும்பு சாப்பிடுவது போல.பிரபல எழுத்தாளர்களான மு.வரதராசனார்,ஜெயகாந்தன்,குறிஞ்சிமலர் மணிவண்ணன் என்ற நா.பார்தசாரதி, புதுமைப்பித்தன்,தத்துவஞானிகளின் நூல்களுடன் குமுதம்,கல்கி, ஆனந்தவிகடன், கலைமகள், பொம்மை என்ற சினிமாச் சஞ்சிகை என எல்லாம் இருக்கும்.
யாழ்ப்பாணத்திற்கு படம் பார்க்கப் போகிற நாட்களில் யாழ் பொதுநூலகத்திற்குச் சென்று வாசிப்பதற்கென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து வாசித்துவிட்டுத் திருப்பிக் கொண்டு போய் கொடுப்பான்.
ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பண்ணையிலோ பூபாலசிங்கம் புத்தகசாலையிலோ புதுப் புத்தகங்கள் வாங்காமல் வரமாட்டான்.
இத்தனைக்கும் சுப்பையா ஒரு தோட்டக்காரன்.ஆனால் பத்திரிகை சஞ்சிகைகளைத் தினசரி வாசிப்பவர்.அவரின் மனைவி சண்முகவல்லியும் பத்திரிகை சஞ்சிகை நூல்களை வாசிப்பவர்தான்.
அவனுடைய தமக்கைகள் இருவரும் படிக்கிற காலத்தில் சஞ்சிகைளில் வெளிவந்து கொண்டிருந்த தொடர்கதைகளைக் கிழித்து ஒன்றாகச் சேர்த்து புத்தகமாக கட்டிய புத்தகங்களும் றாக்கியில் இருக்கும்.
ஞானசெல்வத்தின் சைக்கிள் காண்டில் எப்பொழுதும் ஏதாவது ஒரு சஞ்சிகையை மடித்துச் செருகியிருப்பான் அல்லது வீரகேசரி பத்திரிகை அல்லது டெயிலி நியூஸ் பத்திரிகை சைக்கிள் காண்டிலில் குடிகொண்டிருக்கும்.
ஊருக்குள் அவன் சுற்றுவதென்றால் கறுப்பு அகலக்கரை பட்டர்கலர் வேட்டியும் அதற்குப் போருத்தமான சட்டையும் போட்டிருப்பான்.சில வேளைகளில் நீளக் காற்சட்டையும் அதற்குப் பொருத்தமான சட்டையும் போட்டிருப்பான்.
எப்பவும் அயன் பண்ணின மடிப்புக் கலையாத சட்டைதான் போடுவான்.சட்டையின் பின்புறத்தில் சுருக்கித் தைக்கப்பட்ட இடத்தை அழகாக இழுத்து அமத்தி அயன் பண்ணியிருப்பான்.
முக்கால் கைவரையும் சட்டையின் கைப்பகுதியை மடித்துவிட்டிருக்கும் அவன்; மணிக்கட்டுக்கு கீழேயும் தளர்ந்து நிற்கக்கூடிய கை மணிக்கூடொன்றைக் கட்டியிருப்பான். சட்டையின் மேல் தெறியொன்றை கழற்றிவிட அதுவழியே கழுத்தில் தெரியும் சங்கிலி இதுதான் ஞானசெல்வத்தின் கோலம்.
இத்தனை அட்டகாசமுள்ள ஞானசெல்வம் சொகுசுப் பேர்வழியா என்றால் அதுதான் இல்லை.தந்தையுடன் சரிக்குச் சமனாக தோட்ட வேலைகளில் பங்கு போட்டுச் செய்வான்.
தோட்டத்திற்குரிய பசளைப் பொருட்களான எரு குப்பைகளை தலையில் சுமந்து செல்வான். கொத்தி நிலத்தைப் பண்படுத்துவான்.ஏர்பூட்டி உழுவான்.தண்ணீர் இறைக்கும் இயந்திரம் வாங்கும் முன் அவன் துலா மிதித்தால் தகப்பன் இறைப்பார்.தகப்பன் துலா மிதித்தால் ஞானசெல்வம் பட்டைபிடித்து இறைப்பான்.சில வேளை தாயாரும் இறைப்பார்.
என்ன வேலைக்குப் போகலாம் என்று சிந்தித்த காலத்தில்,காலைச் சாப்பாடாக புட்டோ இடியப்பமோ சாப்பிட்டுவிட்டு; சைக்கிளில் வந்து மகாஜனாக் கல்லூரிக்கு முன்னாலிருக்கும் லிங்கம் கபேயில் சூடான ஒரு தேத்தண்ணியும் முறுகலான ஒரு கடலை வடையும் சாப்பிட்ட பின் வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு மகாஜனாவின் மேற்குப்புற ஒழுங்கை ஆரம்பிக்கும் இடத்திலிருக்கும் மதகில் உட்கார்ந்து தனது நண்பனான இராமநாதனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.![]()
வாழைப் பழத்தைச் சாப்பிட்டபடியே பள்ளிக்கூடத்துக்கு போற மாணவ மாணவிகளை கிண்டலடிப்பான்.அவன் காதிலை கேட்கத்தக்கதாக சனியன் மூதேவி காவாலி என்று அவர்கள் திட்டினாலும் கோபப்படவே மாட்டான்,சிரிப்பான்.
„டேய் அதுகள் உன்னை திட்டுதுகள் நீ சிரிக்கிறாய்’ என்று இராமநாதன் கேட்டால் அவையின்ரை வாயிலை இருந்து வருகிற வார்த்தைக்கு அவைதான் பொறுப்பு.அவை சொன்னது சொன்னதுதான்.இனி அவையாலை அந்த வார்த்தையை திரும்பப் பெறவே முடியாது என்பான்.
காலையில் இப்படி இருந்த ஞானசெல்வம் மாலையில் இன்னொருவனாக மாறுவான்.மாலையில் குப்பைக்
கடகத்தை தலையில் வைத்து சைக்கிளில் வரும் அவனை காலையில் திட்டிய மாணவிகள் அவனைப் பார்த்து குப்பைத் தம்பி என்று கேலி செய்வார்கள்.அதுவும் அவன் காதில் விழும்.அதற்கும் அவன் சிரிப்பான்.
மதகில் ஞானசெல்வம் இருக்கிறானென்றால் தூரத்தில் வருபவர்களுக்கே தெரிந்துவிடும்.அட்டகாசமாகச் சிரிப்பான்.அவன் ஒரு இரசிகன்.புல்பூண்டைக்கூட உற்றுப் பார்த்து இரசிப்பான்.தாமரைப் பூவின் அழகும் புல்பூண்டுகளின் பூக்களும் ஒன்றென்பான். அவையும் அழகென்பான். அதை தர்க்க ரீதியாக நிறுவியும் விடுவான்.
„அம்மா இவன் நல்லாத்தானே மார்க்ஸ் எடுத்தவன் உயர்தரத்தில் படிச்சு யூனிவேர்சிற்றிக்கு போகலாந்தானே என்று இரண்டு தமக்கைமாரும் தாயிடம் குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்’ எதையுமே காதிலை அவன் வாங்க மாட்டான்.
அவனிடமே, „ ஏண்டா இப்படியே மதகு மாறி மதகாக ஒவ்வொரு மதகுகளிலையும் குரங்குமாதிரி இருக்கிறதுதான் உனது எதிர்கால வாழ்க்கையோ’என்று தமக்கை மார் கேட்டால்’ ஓமக்கா பார்க்கிறன் „ என்று மெதுவாக நழுவிவிடுவான்.
மகாஜனாக் கல்லூரிக்கு கிழக்குப் பக்கமாக ஒரு மதகும் தெருவளைவுமிருக்கிறது.அந்த மதகடியில் நின்று மேற்கு நோக்கிப் பார்த்தால் ஒரு அரிய காட்சியைப் பார்க்க முடியும்.
வெள்ளவாய்க்காலில் நிரையாக நிற்கும் திடகாத்திரமான பனைமரங்களும்.வீதியின் இருமருங்கிலும் உயரமாக வளர்ந்து தனது கிளைகளை வீதிக்கு மேலால் பரப்பி தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வீதியின் இருமருங்கிலும் நிற்கும் நிழல்வாகை மரங்கள் தமது கிளைகள் என்ற கைகளை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பின்னிப் பிணந்து
வீதிக்கு நிழல்குடை பிடித்து நிற்பது போலவும் அழகிய மரக்குகை போலவும் தோன்றும்.
பத்துப் பதினைந்து சிறிய தும்புகள் ஒன்றாய்ச் சேர்ந்திணைந்தது போல இளஞ்சிவப்புப் பூக்கள் மகரந்தப் பைகளைத் தாங்கி நின்றவை வீசும் தென்றலால் நிலம் நோக்கி நிழல்வாகைப் பூக்கள் விழ வீதியெங்கும் இளஞ்சிவப்பு பாய் விரித்தது போல கண்கொள்ளாக் காட்சியதை மதகில் இருந்து இரசித்து மகிழ்வான் ஞானசெல்வம்.
தென்றலின் சுகத்தை வயற்காற்று புடம் போட்டு அவன் காதோரம் கதை சொல்லிச் செல்லும்.
உழவாரக் குருவிகள் உயரத்தில் சிறு விமானங்களாய் வயலின் மேல் பறக்கும்.பயிற்றங்காயை கொத்த வரும் கிளிகளின் கீச் கீச் சத்தமும், அவற்றை விரட்டும் தோட்டக்காரர்களின் குரலும் சங்கமமாகி அது இனிய உணர்வைக் கொடுக்கும்.
அப்பப்ப மதகுகள் என்னும் சிம்மாசனங்களை மாற்றுவான்.மகாஜனாவின் மேற்குப்புற ஒழுங்கையில் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு ஆலமரமும் அம்பனைச் சந்தியில் ஒரு ஆலமரமுமாய் வீதிக்கு அவை ஆபரணம் அணிந்து நிற்கும்.
பழுத்து விழும் பழங்களின் ஒசையும், ஆலமரத்தில் குடிகொண்டு வாழும் குருவிகள் பறவைகள் என அவற்றின் மொழிகளும் ஞானசெல்வத்தைத் தாலாட்டும் ஆராரோ.
இந்த இரசனையோடும் அந்த அழகைக் காணும் கண்களுக்கு விருந்தாகவும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி காலை ஒன்பது மணியளவில் தோட்டங்களில் புல்லுப் பிடுங்கவும் வெங்காயம் நடவும் வெங்காயம் கிண்டவும் குரக்கன் கதிர் அறுக்கவும் என விதம் விதமான சீத்தைத் துணிகளில் தைச்ச
மேல்சட்டைகளுக்கு தோதாக சீலை கம்பாயம் என கட்டிக் கொண்டு ஓய்யார நடை நடந்து நிரையாகவும் இருவராய் அருகருகே நடந்தும் காதுக்குள் இரகசியக் கதைபேசி வரும் நடுகைக்காரிகள் அந்த வீதிக்கு இன்னும் அழகு சேர்ப்பர்.
வெயிலில் உழைத்து மாநிறமாகி இறுகி வைரமான உடல் அவர்களுக்கு.வீதியால் போவோர் வருவோரை விழியுர்த்திப் பார்த்து நக்கலும் நளினமுமாய் கதைத்து அவர்கள் நடந்து செல்வதே தனியழகு.
சில வேளைகளில் அவர்கள் நிரைகொண்டு நடக்கையில் நானும் சைக்கிளில் தெல்லிப்பழை நோக்கி செல்கையில் அதில் ஒருத்தி வட்டகருவிழியாள் அழகிய சிரிப்புடையாள் விழியுர்த்தி என்னைப் பார்த்து புன்னகைத்த சம்பவங்களும் உண்டு.
நடுகைக்காரிகளில் இருவர் என்னதான் காதோடு வாய்வைத்துப் பேசுகிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்கையில் „இராத்திரி மூன்று மணிக்குப் பிறகு நித்திரை வரவேயில்லை என ஒருத்தி சொல்ல,ஏனடி என்று மற்றவள் கேட்க,மூன்று மணிக்கு அவரின் கைவந்தணைத்தது என இவள் சொல்ல,கழுத்துக்கு கீழேயா இல்லாட்டி வயிற்றுக்கு கீழேயா என அவள் கேட்க…சீ…என வெட்கப்பட்டு கழுத்துக்கு கீழேதான் என அவள் சொல்ல, பிறகு…என்று ஆர்வம் மிகுந்து இவள் கேட்க, அந்த நேரம் பார்த்து குழந்தை அழ முலை கொடுத்து அதன் பசி போக்கிப் பின் மனுசன்ரை அந்தப் பசி போக்கி நித்திரையாக ஐஞ்சரை மணியாச்சுது என்றாள் அவள்.
நடையின் களைப்பினைபு; போக்க இதுபோல நடுகைக்காரிகள் கதை பல பேசுவர்.உடல் உழைப்பாளிகளும் விவசாயிகளும் உடல்பசி மிகுந்தவர்களாக இருப்பதற்குக் காரணம் உடல் உழைப்பால் வியர்வைகள் பெருகி வெளியேற,p கெட்ட கொழுப்புக்கள்
இரத்த நாளங்களிலிருந்து கரைத்து, இரத்தம் தங்குதடையின்றிப் பயணிப்பது மட்டுமல்ல உறைப்புடன் பசித்துப் புசிப்பதும் காரணமாகும்.
மாலையில் வீடு திரும்பும் நடுகைக்காரிகள் இளியாம்பி கடையிலும்; சின்னத்துரை கடையிலும் கடைக்காரர்களின்; சீறிச்சினப்புக்கு மத்தியில் அரை இறாத்தல் கால் இறாத்தல் ஐந்து சதம் பத்துச் சதத்திற்கு பொருட்கள் வாங்கி இரவிரவாக சுவையாக சமைத்து பசித்துண்டு அடிச்சுப் போட்ட நித்திரைக்கு மத்தியில்தான் கல்யாணம் முடித்த நடுகைக்காரிகளின் அதிகாலை மூன்று மணிப்; பசிச் சம்பவமும் நடக்கும்.

அம்பனைச் சந்தி சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் சுவையான தோசையும் அதற்கு உவப்பாக நெகிழ்ந்த சம்பலும் அது இரண்டுக்கும் உவப்பாக சுண்டலும் அந்த மூன்றுக்கும் உவப்பாக நன்னாரித் தேத்தண்ணியும்; குடிப்பான் ஞானசெல்வம்.
மதகென்னும் சிம்மாசனங்களை மாற்றுகையில் லிங்கம் கபேயில் தோசையும் அதற்கு உவப்பாக மிளகாய் பொரித்து இடித்த சம்பலுடனும் சாம்பாருடனும் அதற்கு உவப்பாக மெர்று மொறுவென்ற கடலை வடையும், கடலை வடைக்கு சோடி சேர்க்க எண்ணி உழுந்து வடையை சாம்பாரில் ஊற வைத்து விரல்களின் முதல் கோடுகளுக்கு மேல் உணவு போகவண்ணம் சாப்பிடுவதும் நிறைவாக கப்பல் வாழைப் பழத்துடன் மதகில் உட்கார்ந்து இரசிகனாய் மாறுவான் ஞானசெல்வம்.
அந்த இரசிப்புக்குள் புதிதாக வந்து சேர்ந்தவர்கள்தான் இந்த நடுகைக்காரிகள்.
ஞானசெல்வத்தின் குடும்பத் தோட்டத்திற்கு அவர்கள் பலமுறை நடுகைக்காரிகளாகவும் புல்லுப் பிடுங்கவும் என வந்து போயிருக்கிறார்கள்.
அண்மை நாட்களாக புதியவளாக ஒரு நடுகைக்காரியாக ஒருத்தி இணைந்தது ஞானசெல்வத்தின் கவனத்தை அவள்மீது செலுத்த வைத்தது.
எல்லாரும் வெறுங்காலால் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒருத்தி மட்டும் றப்பர் சிலிப்பர்; போட்டிருந்தாள். தலைமயிரை குடும்பி போட்டோ அள்ளிச் செருகியோ வருபவர்களுக்கு மத்தியில் அவள் மட்டும் தனது நீளமான கூந்தலுக்கு வட்டமான கிளிப் போட்டு கூந்தலை காற்றில் பறக்கவிட்டு வருவாள்.
அவர்களில் சிலர் சீலை கட்டியிருப்பார்கள்.இன்னும் சிலர் சீலையச் சுற்றிக்கட்டி சட்டை போட்டிருப்பார்கள்.கம்பாயம் போன்றும் கட்டியிருப்பார்கள்.புதிய அவள் முழுச்சட்டையை கணுக்காலுக்கு கொஞ்சம் மேல் வரைக்கும் போட்டிருந்தாள்.
இவள் யார் இவர்களுக்குள், இந்த மாநிறத்தாளிடம் மற்றவர்களுக்கு இல்லாத ஒரு அழகிருக்கிறதே.இவளுடைய பெயர் என்னவாக இருக்கும்.ஞானசெல்வத்துக்கு அவளை யார் என்றறிய வேண்டுமென்று ஆவல் ஏற்பட, நாளைக்கு அவளுடன் கதைத்தே ஆக வேண்டுமென்ற ஆவலுடன் படுத்தவன் நித்திரையில்லாமல் புரண்டு புரண்டு படுத்தான்.
அவளின் முகமும் அவள் ஒய்யாரமாக நடக்கையில் றப்பர் செருப்பின் சத்தமும் கனவு கனவாக அவனுக்கு வந்து கொண்டிருந்தது.அவளின் நீளமான தலைமயிர் அவன் முகத்தை வருடிவிடுவது போல சிலிர்த்தான்.
அடுத்த நாள் வேலைக்கு அவசரமாகப் போவது போல, வழமை போல ஏதோ ஒரு சஞ்சிகையை எடுத்து, முதல் பக்கத்திலேயே உங்கள் பெயர் என்ன என்று எழுதி அதை மடித்து சைக்கிள் காண்டிலில் செருகியவன் மகாஜனாவுக்கு பக்கத்திலிருந்த மதகில் உட்கார்ந்திருந்தான்.
அன்று அவனுக்கு வீதியால் போவோர் வருவோரை இரசிக்க முடியவில்லை.நிழல்வாகை மரத்திலிருந்து கொட்டிய பூக்களையும் அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.
கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவன் தூரத்தே நடுகைக்காரிகள் வருவதைக் கண்டதும் அவனுடைய மனம் குதூகலித்தது.
அவள் யாராக இருக்கும் என்று அவன் அன்று நினைக்கும் முன்பே அவள் அவனை கடைக்கண்ணால் முதல் நாளே பார்த்துவிட்டாள்.தோட்ட வேலை முடிந்து போகும் போது முகத்தை திருப்பியே அவனைப் பார்த்துவிட்டாள்.
அவன் மனதில் அவள் இடம்பிடிக்க முந்தி அவள் மனதில் அவன் இடம் பிடித்துவிட்டான்.அவள் அவனை அண்மிக்கையில் அவனிருக்கும் மதகிற்கும் தனக்குமிடையில் பத்து சென்றிமீற்றர் வித்தியாச இடைவெளி இருக்குமாறு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவள் அவனை நெருங்க நெருங்க அவனுடைய நெஞ்சு படபடவென அடிக்கத் தொடங்கியது.அவளுக்கும் அப்படித்தான்.அவள் அவனருகில் மிக அருகில் நடக்கையில் அவளின் கையிலிருந்த கசக்கிய தாளொன்றை அவனுடைய திறந்த சட்டைக்கூடாக அவனது மார்பை நோக்கி எறிய,அதே வேகத்தில் அவளின் கையைப் பிடித்தவன் தான் மடித்து வைத்திருந்த சஞ்சிகையை அவள் கையில் அவன் திணிக்க தடுமாறி விழப்போவது போல அவள் நடித்து தன்னோடு நடந்து வந்தவர்கள் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக ஐயோ என்று அணுங்கியவாறு அவள் அவனருகில் மதகில் உட்கார்ந்து நோ ஏற்பட்டால் காலை உதறுவது போல காலை உதறியபடியே, அவனிடம் „எறிஞ்ச பேப்பரை வாசியுங்கள் பின்னேரம் வருவன் பதில் வேணும் என்றபடி மற்றவர்கள் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக நொண்டி நொண்டி நடந்து நடித்தவள் அவனைத் திரும்பிப் பார்த்துக் கள்ளச் சிரிப்பொன்றைச் சிரிக்கிறாள்.
கொஞ்சத்தூரம் நொண்டி நொண்டி நடந்தவள் பிறகு, ஒழுங்காக நடக்கத் தொடங்குகிறாள்.
கசக்கி எறிந்த தாளை அவன் ஒழுங்காக்கி அதில்’ என்னுடைய பெயர் பார்வதி, உங்கடை பெயர் என்ன…நான்…..உங்களை ‘ என்று எழுதியதை முடிக்காமல் இருப்பதை வாசிக்கிறான்.
அந்தக் கசக்கிய தாள் மாயப் பாயாக மாற அதில் உட்கார்ந்து பறப்பது போல உணருகிறான் ஞானசெல்வம்;.
சைக்கிளை எடுத்து ஓடியபடியே நடுகைக்காரிகள் அருகில் சென்றவன் தனது தோட்டத்தில் வேலை செய்து பழக்கமான பெண்ணிடம்’ இன்றைக்கு எங்கை வேலை என்று கேட்க அவளிடமிருந்து மாணிக்கத்தின்ரை தோட்டத்திலை என்ற பதில் வர, இவனைக் கண்ட பார்வதி தாமதிக்க „ அங்கை வருவன் பதிலுடன் „ என்றவனுக்கு அவள் „பார்த்திருப்பன் காத்திருப்பன்’ என்கிறாள் பார்வதி.
அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொண்டதை கவனித்தும் கவனிக்காதது போல இருந்த இரு பெண்களில் ஒருத்தி „கவனிச்சனியே „என „ம்…கவனிச்சனான் இவள் புளியங்கொப்பைப் பிடிக்கப் போய் வில்லங்கப்படப் போகிறாள் „என்கிறாள் மற்றவள்.
நடுகைக்காரிகள் நடந்து வரும் அழகும், நிழல்வாகை மரங்களிலிருந்து பூக்கள் சொரிந்து விழும் அழகும்,தரையிறங்கத் துடிக்கும் உழவாரக் குருவிகளின் பறப்பும்,இரண்டு ஆலமரங்கலிருந்து விழும் ஆலம்பழங்களின் விழுகையும், அம்மரங்களில் கூடுகட்டியும்,பழம் கொத்த வரும் குருவிகளின் பறவைகளின் உற்றார் உறவினர்களுடன் குதூகலித்துக் குரல் எழுப்பும் இனிய ஓசையும்,வயலுக்குள் விவசாயிகள் கூட்டிவரும் மாடுகளின் கழுத்து மணி ஓசையும்,பயிற்றங் கொடிகளில் ஊஞ்சலாடிக் கொண்டே பயிற்றங்காய் கொத்திடும்
கிளிகளின் கீச் கீச் ஒலிகளும், எரு குப்பைகளை கடகத்தில் விவாவசாயிகள் சுமந்து வருகையில் அவற்றிலிருந்து வரும் விரும்பம்தரும் நெடிகளும், சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் குடித்த நன்னாரித் தேத்தண்ணியின் உருசி நாக்கைவிட்டுப் போகா சுவையும், லிங்கம் கபேயில் தேத்தண்ணியுடன் முறுகல் கடலை வடை சாப்பிட்ட சுவையும்,கப்பல் வாழைப் பழத்தின் சுவையுமாக உண்ணும் சுவையையும் காணும் காட்சிகளையும் கண்வழியே கண்டவற்றை மனக் காட்சியாக்கியும், காது வழி கேட்டலை இனிதுணர்ந்து மனதை மகோன்னதமாக்குபவன்தான் ஞானசெல்வம்.
பார்வதி கசக்கி அவனின் மார்பிற்கு நேரே எறிந்த சிறுதுண்டுத்தாள் காதல் சொல்லும் செய்தி மட்டுமல்ல.அது ஞானசெல்வத்தின் இதயத்திற்குள் எறிந்த மன்மதக் காதல் அம்பு.அவன் கொடுத்து சஞ்சிகை அவளுக்கான செங்கம்பள வரவேற்பு…
(தொடரும்)
![]()