கதைகள்

காதலர் விமானம்!…. 40….. ( நாவல் )….. ஏலையா க.முருகதாசன்.

(காதல் சோடிகள் காதலிக்கும் போது அவர்கள் தமது அடுத்த கட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் விடமாட்டார்கள்.’என்ன இப்படியே இரண்டு பேரும் படம், கடற்கரை, திருவிழாவென்று எத்தனை நாளைக்குத் திரியப் போகிறீர்கள் கல்யாணம் எப்ப என்று யாராவது ஒருவர்,ஒரு காதல் சோடியைப் பார்த்துக் கேட்டால் „ இப்ப எங்களுக்கு அவசரம் இல்iலெயென்று சொல்லி தமது மனதில் உள்ளதை மூடிமறைத்து நடிப்பார்களே தவிர, உள்ளுக்குள்ளை அவர்களின் கற்பனை முதலிரவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடும்.)

சிவகுருவின் வீட்டுக் கேற்றைத் திறந்து கொண்டு சந்திரசேகரம் செல்லம்மா சச்சிதானந்தம் மகேஸ்வரி எனத் தம்பதிகள் நால்வரும் வருவதை விறாந்தையிலிருந்து பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த சிவகுரு கண்டதும் பத்திரிகையை வைத்துவிட்டு வாங்கோ வாங்கோ என மகிழ்ச்சியாக வரவேற்றார்.

கணவர் யாரை இப்படிக் குதூகலமாக வரவேற்கிறார்; என அறையை விட்டு விறாந்தைக் கதவோடு நின்று எட்டிப் பார்த்த வசந்தமாலாவும் வாங்கோ என்று வரவேற்க பின்னால் தாயுடன் வந்த அர்ச்சனா சந்திரசேகரத்தையும் செல்லம்மாவையும் சச்சிதானந்தத்தையும் மகேஸ்வரியையும் பார்த்தவுடன் விறாந்தைக் கதவடி நிலையைப் பிடித்தபடியே அப்படியே நிற்கிறாள்.

சந்திரசேகரத்தின் குடும்பத்துக்கும் சச்சிதானந்தத்தின் குடும்பத்துக்குமிடையில் இருபத்தைந்து வருடங்கள் உறவு இல்லையென்று சிவகுரு குடும்பத்துக்குத் தெரிந்த போதும் அப்படி எதுவுமே இல்லை என்பது போலவும் தொடர்ந்து

அந்தக் குடும்பங்களுக்கிடையில் உறவு இருந்தது போன்ற பாவனையில் எதையுமே காட்டிக் கொள்ளாமல் சிவகுருவும் வசந்தமாலாவும் மிகுந்த முகமலர்ச்சியோடு அவர்களை விறாந்தையில் இருந்த கதிரைகளில் உட்காரச்; சொல்கின்றனர்.

நடந்த கசப்பான சம்பவங்களைக் கிண்டிக் கிளறாமல் இருப்பதே நாகரீகமும் பண்புமாகும்.அதனை சிவகுரு வசந்தமாலா தம்பதிகள் உணர்ந்து நடந்தார்கள்.

இருங்கோ நான் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன் என்று போகவிருந்த சிவகுருவின்; மனைவியான வசந்தமாலாவைத் தடுத்த சந்திரசேகரம் அதைப் பிறகு போடலாம் நாங்கள் உங்கள் மூன்று பேருடனும் ஒரு விசயம் கதைக்க வேண்டுமென்றவர் அர்ச்சனாவை உற்றுப் பார்க்க,

அர்ச்சனா „ஐயையோ….கசுவறினா கடற்கரைக்கு குருவோடு போனது தெரிஞ்சு போச்சுதோ….என்று கையை உதறி நெஞ்சில் கைவைத்ததை கண்ட சந்திரசேகரம் ஒரு புன்முறுவலுடன், இன்றைக்கு தங்கச்சியின் பிறந்தநாள் இன்றைக்கு முழுநாளும் நல்ல நாள் பின்னேரம் தோதரை அம்மன் கோவிலுக்குப் போறம் நீங்களெல்லாரும் எங்களோடை கோவிலுக்கு வர வேணும் என்றவர்….கொஞ்சம் நிறுத்தி…சச்சிதானந்தத்தைப் பார்த்து மச்சான் எங்கள் சார்பாக நீங்களும் தங்கச்சியும் அர்ச்சனாவை எங்களுக்கு வேணுமென்று கேளுங்கள் என்று சொன்னவுடன் சிவகுருவும்; வசந்தமாலாவும் இப்படி ஒரு வார்த்தை சந்திரசேகரத்தின் வாயிலிருந்து வரும் என்று நம்ப முடியாமல் மகிழ்ச்சியில் தடுமாற சச்சிதானந்தம் சிவகுருவையும் வசந்தமாலாவையும் பார்த்து எங்களுடைய மூத்த மருமகன் குருவுக்கு அர்ச்சனாவைக் கேட்டு வந்திருக்கிறம் என்று சொன்னவுடன்,நாங்கள் எப்படி யார் மூலம் கேட்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தனாங்கள்……என்று வசந்தமாலா சொல்லி நெகிழ்ந்து நிற்க உறவுகளுக்குள் எதற்கு தரகர் உங்கள் அர்ச்சனா எங்களுடைய மூத்த மருமகளாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டம் என்று செல்லம்மா

சொல்லிக் கொண்டே எங்கள் வீட்டு மூத்தமருமகளே கசுவறினாக் கடற்கரையிலிருந்து கொண்டு வந்த பூவரசம் பூவோடை இங்கை வா என அர்ச்சனாவைக் கூப்பிட பிடிபட்டுப் போனேமே என்று அவள் மட்டும் திகைக்கவில்லை எங்களுக்குத் தெரியாமல் இவள் எப்ப யாருடன் கசுவறினா கடற்கரைக்குப் போனவள் என்று சிவகுருவும் வசந்தமாலாவும்கூடத் திகைத்துவிட்டனர்.

வெட்கத்துடன் அர்ச்சனா காய்ந்து போன பூவரசம் பூவையும் எடுத்துக் கொண்டு வருங்கால மாமியாரன செல்லம்மாவுக்குக் கிட்டப் போக, செல்லம்மா அவளை அரவணைத்து தானிருந்த கதிரைச்சட்டத்தில் இருக்கச் சொல்லிவிட்டு அவளின் நீளமான தலைமயிரை வருடிக் கொண்டே,கசுவறினா கடற்கரைக்கு குருவுடன் போனது எப்படித் தெரியுமென்றாய் நினைக்கிறாய் என்று அர்ச்சனாவைக் கேட்க, அர்ச்சனா தலைகுனிந்து மௌனமாக இருக்கிறாள்.

மூத்த மருமகளே பிள்ளைகளுக்கு காதல் வந்தால் அவர்கள் பெற்றோர்களுக்குத் தெரியாமல் செய்கிறோம் என்று நினைத்துக் செய்கிற எல்லாவற்றையும் பெற்றோர்கள் அறிந்தாலும், பெற்றோர்களும் தமக்கு எதுவும் தெரியாதே என்பது போலத்தான் நடிப்பார்கள்.

நானும் அப்படித்தான் இவருடன் காதல் வசப்பட்டு அங்கை இங்கை திரியேக்கிலை என்னுடைய பெற்றோரும் தெரியாத மாதிரித்தான் நடித்தார்கள்.

அந்த நடிப்பிலும் ஒரு சுகமிருக்கு என்ற செல்லம்மா, உன்னுடைய அப்பா அம்மா எப்படிக் கல்யாணம் செய்தவை என்று தெரியுமோ என்று கேட்க அர்ச்சனா தலை குனிந்தபடியே தெரியாது என்பது போல தலையாட்டுகிறாள்.

உன்னுடைய அப்பாவும் அம்மாவும் விரும்பித்தான் கல்யாணம் செய்தவர்கள்.

ஆனால் ஊருக்கு அது பேச்சுக்கால் சம்பந்தம் என்பது போல ஒரு மாயையை இரண்டு பேரும் சேர்ந்து செய்தார்கள் என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும்.ஏனென்றால் என்னுடைய காதலோட உன்னுடைய அப்பா அம்மாவுக்குத் தூது போனது நான்தானே.

உன்ரை அம்மாவை கொப்பா, அப்பதான் முதன்முதலாக பெண் பார்க்க வருவது போல வர அம்மா நடிச்சாவே ஒரு நடிப்பு நடிகையர் திலகம் சாவித்திரி எந்த மூலைக்கு என்று சொன்னவுடன் அப்பத்தான் வாயைத் திறந்தாள் அர்ச்சனா.

மாமி அதையும் சொல்லுங்கோவன் என்று தாயாரைப் பார்த்தபடி கேட்க தாயாரோ வெட்கத்தில் செல்லம்மாக்கா அதுவெல்லாம் இப்ப சொல்ல வேண்டுமா என்று சொல்ல, நீஙகள் சும்மாயிருங்கள் பிள்ளையளுக்கும் தெரியட்டுமே என்ற செல்லம்மா, கொப்பா கொம்மாவின் வீட்டுக்கு போனபோது கொம்மாவின்ரை கொம்மா உன்ரை அம்மம்மா சொல்லியிருக்கிறா உனக்குப் பார்த்த மாப்பிளை வந்திருக்கிறார் போய்ப்பார் என்று சொல்ல கொம்மா போய்ப் பார்த்திட்டு உன்ரை அம்மம்மாவிட்டையும் அம்மப்பாவிட்டையும் „இவரா எனக்குப் பார்த்த மாப்பிளை ஏன் உங்களுக்கு வேறை மாப்பிளை பார்க்கத் தெரியேலையோ என்று கொம்மா நடிக்க, அப்படியென்றால் வேறை மாப்பிள்ளையைப் பார்ப்பம் என்று உன்ரை அம்மம்மா நடிக்க, கொம்மா பரவாயில்லை நான் இவரையே கட்டுகிறன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் உன்ரை அம்மம்மாவுக்கு உன்ரை கொப்பாவும் கொம்மாவும் ஒருவரையொருவர் விரும்புகிறது முன்னமே தெரியும்.கொம்மா சாவித்திரி மாதிரி நடிச்சாவென்றால், உன்ரை அம்மம்மா பத்மினி மாதிரி நடிச்சார்.

பிள்ளைகளின் காதல் விவகாரங்களை பெற்றோர் அறிந்தாலும் அறியாத மாதிரித்தான் இருப்பார்கள்.உனக்கு

கொப்பா கொம்மா தங்கடை காதல் கதையைச் சொல்லேலையோ என்று செல்லம்மா கேட்க „இல்லை’ என்பது போல தலையாட்டுகிறாள் அர்ச்சனா.

செல்லம்மா விரிவுரையாளர் போல காதல்கல்வி நடத்திக் கொண்டிருக்க மற்றையவர்கள் அதை இரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கதையோடு கதையாக மூத்த மருமகளே குருவைப்பறறி ஏதாவது ஒன்றைச் சொல்லன் என்று செல்லம்மா கேட்க மாமி அவரிட்டை இன்றைக்குக் கேள்வி கேட்டால் நாளைக்குத்தான் பதில் சொல்வார் போல இருக்கு திருத்திடலாம் என்று அர்ச்சனா சொல்ல எல்லாருமே வாய்விட்டுச் சிரித்தனர்.

வசந்தமாலா எல்லாருக்கும் தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே எல்லாரும் இங்கதான் சாப்பிட வேணும் நான் சமைக்கிறன் என்று சொல்ல, இன்றைக்கு எல்லாருக்கும் என்னுடைய பிறந்தநாள் சாப்பாடு எங்கடை வீட்டிலைதான் என்று மகேஸ்வரி சொன்னவுடன்,அதை ஆமோதிப்பது போல வசந்தா முதலிலை நாங்கள் போய் சாப்பாட்டு அடுக்குகளைப் பார்ப்பம், ஆம்பிளையள் கதைச்சுப் போட்டு வரட்டும் என்று செல்லம்மா சொல்லிக் கொண்டே எழும்ப வசந்தமாலா அர்ச்சனா மகேஸ்வரி என மூவரும் ஒன்றாக மகேஸ்வரியின் வீட்டை நோக்கிப் போனார்கள்.

சிவகுரு சச்சிதானந்தம் சந்திரசேகரம் ஆகிய மூவரும் மூன்று சோடிகளினதும் கல்யாணத்தை எப்பொழுது வைப்பது என்ற தீர்மானத்தில் இழுத்துக் கொண்டு போகாமல் ஆறு மாசத்துக்குள் மூன்று சோடிகளுக்கும் ஒரே நாளில் சுண்ணாகம் ஐயனார் கோவிலில் வைப்பதென்றும் தேனிலவுக்குச் சிங்கப்பூருக்கு அனுப்புவது என்றும் முடிவெடுக்கிறார்கள்.

மூவரும் முடிவெடுத்த பின்னர் வயல்வெளியில் இறங்கி நடப்பம் என்று நடந்து கொண்டிருக்கையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பந்திகள் மூவரும் வருகினம் எனத் தமக்குள் கதைத்துக் கொள்கின்றனர்.

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்பது போல குரு அர்ச்சனா, சந்திரன் சாந்தினி, சாகித்தியன் சிவகாமி காதல் விவகாரம் அம்பனை இலகைக்கே தெரிஞ்ச விடயந்தான்.

மகேஸ்வரி, செல்லம்மா, வசந்தமாலா அர்ச்சனா நால்வரும் மகேஸ்வரியின் வீட்டு விறாந்தையில் ஏறும் போதே சந்திரனின் அறையில் சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பதைக் கேட்ட அர்ச்சனா, சந்திரனின் அறைக் கதவைத் திறக்க மணமகளே! மாமா மாமி வீட்டு மூத்த மருமகளே வா வா எனச் சிவகாமி பாட வெட்கத்துடன் அர்ச்சனா போய் தரையில் உட்கார்ந்திருந்த சாந்தினிக்கு பக்கத்தில் உட்கார அப்புறுவலாச்சா பெரியண்ணி எனச் சாந்தினி கேட்க „ம்’ என்று அர்ச்சனா சொல்ல அர்ச்சனாவின் இரண்டு தெற்றுப்பல்லுகளும் தெரிய மெதுவாகச் சிரிக்க அவளின் கன்னங்கள் குழி விழ,எழுந்து வந்த சிவகாமி அவளுக்குப் பக்கத்தில் இருந்து இந்த தெற்றுப்பல்லாளும் கன்னக்குழியாலும் பெரியத்தானை உன்ரை வலையிலை சிக்க வைச்சிட்டியே என்று சிவகாமி சொல்லிச் சிரிக்கிறாள்.

சாந்தினிக்குப் போட்டியாக தான் பூப்பெய்த முன்பே தனக்குச் சந்திரன் காதல் கடிதம் எழுதினவர் என்று பொய் சொன்ன அர்ச்சனா வேறு இந்த அர்ச்சனா வேறு.எல்லாம் விதியின் விளையர்ட்டுத்தானோ.விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்.மதியால் வெல்வதுகூட விதிதான்.

சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மகேஸ்வரி, செல்லம்மா, வசந்தமாலா மூவரும் மூன்று சோடிகளுக்கும் சட்டுப்புட்டென்று ஆறு மாதத்துக்குள்ளை கல்யாணத்தைச் செய்து வைச்சிட வேணும்.

ஆறப் போட்டமென்றால் பிள்ளைகளைப் பெத்துக் கொண்டு ந்து பெயர் வைக்கச் சொல்லி நிற்பினம்…என்று சொல்லி சிரிக்கின்றனர்…

நாங்களே அந்தக் காலத்திலை அப்படி வேகமென்றால் இதுகள் சும்மாவா இருக்கப் போகுதுகள் என்று மூவரும் பேசிக் கொண்டிருக்கையில்…….

சந்திரனின் அறைக்குள்ளே புதன்கிழமை பரமேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் பரமேஸ்வராக் கல்லூரிக்கும் நடக்கப் போற நட்புரீதியான உதைபந்தாட்டப் போட்டிக்கு எதிலை போறது என்று விவாதிக் கொண்டிருந்தனர் மூன்று சோடிகளும்.

அர்ச்சனா சாந்தினியைப் பார்த்துக் கேட்டாள் உங்கடை பெரியண்ணை புட்ரூல் வைத்து அளந்து அளந்துதான் பேசுவாரா என்று கேட்க அதை அவரிட்டைக் கேட்கலாந்தானே என்றவள் பெரியண்ணை பெரியண்ணி ஏதோ கேட்கிறா என சாந்தினி குருவைப் பார்த்துச் சொல்ல அர்ச்சனா அவளின் வாயைப் பொத்திக் கொண்டே ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறாள்.

காதலர்கள் சிரித்து மகிழ்வதற்கும் குதூகலித்து பேசி ஆரவாரிப்பதற்கும் வழிவிடுதல் வேண்டும். அதை உணர்ந்த மூன்று பெற்றோர்களும் தாராளமாகவே பிள்ளைகளுக்குச் சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதற்கொப்பவும் பருவமெய்திய பெண்களின் பிரச்சினையை அது காதலாகவிருந்தாலும் தாயைத் தோழியாக நினைத்துப் பகிர்வதும் ஒரு புரிந்துணர்வு கொண்ட பெற்றோர்களிடம் மட்டுமே அது இருக்கும்.

அது சச்சிதானந்தம் மகேஸ்வரி தம்பதியினரிடமும், சிவகுரு வசநதமாலா தம்பதியினரிடமும்,சந்திரசேகரம் செல்லம்மா தம்பதியினரிடமும் தாராளமாகவே இருந்தது.

வயலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற சந்திரசேகரம், சச்சிதானந்தம், சிவகுரு மூவரும் வீட்டுக்குத் திரும்பிவிட எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

எட்டுக் கதிரைகளே இருந்ததனால் பெரியவர்களான சந்திரசேகரம் சச்சிதானந்தம் சிவகுரு மகேஸ்வரி வசந்தமாலா செல்லம்மா சந்திரன் குரு கதிரையில் உட்கார்ந்து சாப்பிட மிகுதிப் பேர் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு போய் விறாந்தைக் கதிரையிலை இருந்தும், விறாந்தைச் சுவரோடு சாய்ந்திருந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் ஒரு கூட்டம் போல பெரியவர்கள் சார்பாக சச்சிதானந்தம் காதல் சோடிகள் மூவரையும் கூப்பிட்டு, நீங்கள் வளர்ந்த பிள்ளைகள் உங்களிடம் மூடிமறைக்க எதுவும் இல்லை…..

வைகாசி மாதம் மூன்று சோடிகளுக்கும் ஒரே நாளில் சுண்ணாகம் ஐயனார் கோவிலில் கல்யாணம் செய்து வைப்பது என்று தீர்மானித்துவிட்டம்…..

கல்யாணம் முடிஞ்சு அடுத்த நாள் மூன்று சோடிகளும் சிங்கப்பூருக்குப் போய் அங்கு ஒரு கிழமையிருந்துவிட்டு வந்ததன் பின்பு சுண்ணாகம் பட்டினசபை மண்டபத்தில் மூன்று சோடிகளின் விருந்துபசாரமும் நடைபெறும்….

இப்ப தை மாதம் இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.அதுவரைக்கும் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.இதை ஒரு பெற்றோர்களாக நாங்கள் முன் வைக்கவில்லை நீங்கள் வளர்ந்த பிள்ளைகள் நணபர்களாக வேண்டுகிறோம் நீங்கள் சோடியாக படத்துக்குப் போகலாம்

திருவிழாக்களுக்குப் போகலாம், நண்பர்கள் வீட்டுக்கும் போகலாம் ஆனால் இரவு ஒன்பது மணிக்கு முன்பு வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.

படத்துக்குப் போறதென்றால் பகல் பத்தரை மணி படத்துக்கோ இல்லாட்டி இரண்டரை மணிப் படத்துக்குப் போங்கள்.

நீங்கள் மூன்று சோடிகளும் தனித்தனிச் சோடியாகப் படத்துக்குப் போவதே நல்லது.அப்படிப் போகாமல் மூன்று சோடிகளும் ஒன்றாகப் போவதானால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் மூன்று சோடிகளும் உன்னைப் பார் என்னைப் பார் என்று கண்ணில் படுகிற மாதிரி இருக்கிறியள்.அதனாலதான் தாய்தகப்பனாகிய எங்களுக்கு கொஞ்சம் பயமாயிருக்கு என்று சொல்ல…சாந்தினி, மாமா பயப்படாதீர்கள் நாங்கள் கவனமாக நடப்பம் என்கிறாள்.

கூட்டம் கலைஞ்சது மாதிரி எல்லாரும் கலைஞ்சு மீண்டும் இளஞ்சோடிகள் சந்திரனின் அறையில் சரண் புகுந்தனர். மத்தியானச் சாப்பாடு முடிந்த கையோடு கோவிலுக்கு போய்விட்டு வந்து சமைப்பது அலுப்பைத் தரும் என்பதால் புட்டவிக்கத் தொடங்கினர் மகேஸ்வரி, செல்லம்மா வசந்தமாலா ஆகிய மூவரும்.

இப்ப சந்திரனின் அறையில் அப்பப்ப சிரிப்புச் சத்தம் கேட்டாலும் நிசப்தமே அதிகமாகவிருந்தது.

சாந்தினி சந்திரனைப் பார்த்து மாமா சொன்னதைக் கேட்டீங்கள்தானே. எங்கை என்னை நீங்கள் கூட்டிக் கொண்டு போனாலும் இரவு ஒன்பது மணிக்கிடையில் வீட்டிலை கொண்டு வந்து விட்டிடோனும் தெரியுமா.வாற சனிக்கிழமை நாங்கள் இரவு ஒன்பது மணிக்கிடையில்

வீட்டிலை நிற்கத்தக்கதாக படத்துக்குப் போக வேணும் என்று சொல்லி முடிக்கிறாள்.

தங்களுடைய திருமணத்துக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றதே என்றொரு ஏக்கம் மூன்று சோடிகளிடமும் இருந்தாலும் இரண்டு மூன்று மாதங்களில் செய்து வைச்சால் என்ன குறைஞ்சா போய்விடும் என்றும் நினைத்தார்கள்.

காதல் சோடிகள் காதலிக்கும் போது அவர்கள் தமது அடுத்த கட்ட வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் விடமாட்டார்கள்.’என்ன இப்படியே இரண்டு பேரும் படம், கடற்கரை, திருவிழாவென்று எத்தனை நாளைக்குத் திரியப் போகிறீர்கள் எப்படி கல்யாணம் என்று யாராவது ஒரு காதல் சோடியைப் பார்த்துக் கேட்டால் „ இப்ப எங்களுக்குக் கல்யாணத்துக்கு அவசரம் இல்iலெயென்று சொல்லி தமது மனதில் உள்ளதை மூடிமறைத்து நடிப்பார்களே தவிர, உள்ளுக்குள்ளை அவர்களின் கற்பனை முதலிரவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடும்.

மூன்று சோடிகளுக்கும் பெற்றோர்களிடமிருந்து காதலன் காதலியுடன் கைபிடித்துச் செல்வதற்கும், யாருமே பார்க்காத நேரத்தில் ஒருவர் தோள் மீது ஒருவர் சாய்ந்து கொள்வதற்கும்…உகும்…வேண்டாம் யாராவது பார்த்துவிடுவினம் என்று பொய்த் தயக்கம் காட்டி விருப்பமில்லாதது போல முத்தத்தைக் கொடுத்தும் வாங்கியும் என காதல் உணர்வுகளை வெளிப்படுத்த கட்டுப்பாட்டுடனான சுதந்திரம் கிடைத்துவிட்டது.

கால மாற்றத்தையும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சந்திரசேகரம் செல்லம்மா தம்பதிகள், சச்சிதானந்தம் மகேஸ்வரி தம்பதிகள், சிவகுரு வசந்தமாலா தம்பதிகள் தங்களுடைய பிள்ளைகளின் காதல் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார்கள்.

பெரும்பாலும் இந்த மூன்று காதல் சோடிகளும் தனித்தனியாகவே படம் பார்க்கவோ கடற்கரைக்கு போகவோ திருவிழாவுக்குப் போகவோ விரும்பினார்கள்.

எல்லோரும் சேர்ந்து ஒன்றாகப் போகும்; நாட்களில் ஐஸ்கிறீம் கடைகளிலோ அல்லது கோப்பிக் கடைகளிலோ அல்லது சாப்பாட்டுக் கடைகளிலோ ஒன்றாக அமர்ந்திருக்கும் வேளைகளில் அவர்களுக்கிடையில் அளவான உரையாடல் இருக்கும்.

மூன்று ஆண்களும் அமைதியாக இருந்து தமக்குப் பிடித்த நடிகர்களைப் பற்றியோ அல்லது உதைபந்தாட்டங்கள் பற்றியோ கதைச்சுக் கொண்டிருப்பார்கள்.ஆனால் மூன்று பெண்களும் போகுமிடமெல்லாம் ஒரே கலகலப்புத்தான்.

மூன்று ஆண்களில் யாரோ ஒருவர் கொஞ்சம் மெதுவாகக் கதைச்சு சிரியுங்கோ என்று சொன்னால் அதில் யாரோ ஒருத்தி வாய் இருக்கிறது சிரிச்சுக் கதைக்கத்தான் உங்களைப் போல அமசடக்கு கள்ளராய் காராளபிள்ளையின் கறுவல் நாய் மாதிரி உம்மென்று இருக்கேலாது என்பவளிடம் அது யார்: காராளபிள்ளை என்று கேட்டால் ஆருக்குத் தெரியும் வாயிலை வந்த பெயரைச் சொன்னன் என்று சொல்வாள்.

காதல் சோடிகள் தனியாகப் போனால் வாங்கின ஐஸ்கிறீம் கரைந்து நீராகிப் போகும் வரையும் சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்ட கை காய்ஞ்சு காய்ஞ்ச கையை உரஞ்சி கழுவ வேணும் என்ற நிலை வரையும் கதைப்பார்கள்.

திருவிழாக்களில் எல்லோரும் சேர்ந்து போனாலும், போகும் போதே ஆளையாள் தேட வேண்டாம் திருவிழாவைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போவோம் என்பார்கள்.

சில நாட்களில் இப்படியும் நடக்கும் சந்திரன் சாந்தினியை தமையன்மாரான குரு சாகித்தியனுடன் அனுப்பிவிட

அர்ச்சனாவை குரு சந்திரனுடன் அனுப்பிவிட சிவகாமியும் தமையனுடன் வந்துவிடுவாள்.

இன்னும் சில நாட்களில் சாந்தினி சந்திரனுடனும் சிவகாமியுடனும் வந்துவிடுவாள்.அது போல சிவகாமியும் அர்ச்சனாவும் குரு சாகித்தியனுடன் அவர்களின் வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

வீட்டுக்கு வந்து சேரும்வரையும் யார் யார் எவர் எவர் வீட்டுக்கு வருவார்கள் என்பதைப் பெற்றோர்களாலேயே தீர்மானிக்க முடியாமலிருக்கும்.

ஆனாலும் காதல் சோடிகள் எல்லை மீறாமலும் பெற்றோரின் மீது பயபக்தியுடனும் நடந்து கொண்டார்கள்.முத்தமிடலாம் ஆனால் யாருமே பார்க்காதவாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதும் முத்ததத்திற்கப்பால் அடுத்த கட்டத்திற்கு போகக்கூடாது என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

கொஞ்சம் எல்லை மீறியதை மறைக்கவும் தெரிந்திருந்தார்கள். வைகாசி மாதத்தை எதிர்நோக்கி விநாடிக்கணக்கில் எண்ணத் தொடங்கிவிட்டார்கள்.

இரவுச் சாப்பாட்டைச் செய்து வைத்துவிட்டு மூன்று குடும்பங்களும் தத்தமது பிள்ளைகளுடன் தோதரை அம்மான் கோவிலுக்குப் வயலுக்குள்ளால் நடந்து போனார்கள்.

கோவிலிலிருந்து திரும்பி வரும் போது இரவாகிவிடும் என்பதால் போகும் போது மூன்று டோர்ச் லைட்டுக்களைக் கொண்டு போனார்கள்.

கோவிலில் பூசகர் தொடக்கம் கும்பிட வந்திருந்த அனைவரும் மூன்று குடும்பங்களும் கோவிலுக்கு ஒன்றாக வந்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

தங்கச்சியார் மகேஸ்வரியின் பிறந்த நாள் இன்று அம்மனைக் கும்பிட்டுப் போக வந்திருக்கிறோம் என்று சந்திரசேகரம் சொன்னாலும் மூன்று சோடிகளும் தத்தம் சோடிகளுடன் நிற்பதைக் கண்டவர்கள் அம்மனிட்டை சோடிகளுக்கு கல்யாண அருள்வாங்க வந்திருக்கிறார்கள் என்பதையும் சரியாகப் புரிந்து கொண்டார்கள்.மகேஸ்வரி தமையன் கொடுத்த சீலையையே கட்டியிருந்தாள்.

கோவிலில் இருந்து வந்தவர்கள் இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குப் போகத் தொடங்குகையில் சாந்தினி தான் மாமா மாமி வீட்டில் நின்றுவிட்டு நாளை வருவதாகச் சொல்ல சந்திரசேகரம் செல்லம்மா குரு சாகித்தியன் சுண்ணாகத்தை நோக்கிப் புறப்பட்டனர்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *