தண்டனை!…. ( உருவகக்கதை )….. செங்கதிரோன்.

ஒரு காலைப் பொழுது அந்த வீட்டு வளவின் கொல்லைப் புறத்தில் குவிந்திருந்த குப்பை மேட்டில் காகம் ஒன்று இரை தேடித் தின்று கொண்டிருந்தது.
வீட்டு எஜமானி வீட்டு முற்றத்தில் வீசி விட்டிருந்த நெல்மணிகளைக் கொத்தி விழுங்கிக் கொண்டிருந்த அந்த வீட்டின் வளர்ப்புச் சேவல் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருந்த காகத்தைக் கண்டு அதன் மீது காழ்ப்புக் கொண்டது.
சினைந்து சீறிக்கொண்டு சென்று காகத்தைத் துரத்திற்று.
குப்பை மேட்டிலிருந்து உயரப்பறந்து சென்ற காகம் பக்கத்தில் வேலிக்கட்டையொன்றின் உச்சியிலே உட்கார்ந்து கொண்டு சேவலைப் பார்த்து,
“சேவல் அண்ணாவே! உனக்குத்தான் உன்வீட்டு எஜமானிஅம்மா ஒரு கைச்சுறங்கை நெல்மணிகளை அள்ளி வீட்டு முற்றத்தில் வீசியிருக்கிறாவே. அதைக் கொத்தித் தின்று கொண்டிருந்த நீ அதனை விட்டுவிட்டு குப்பை மேட்டிலே இரை தேடிக் கொண்டிருக்கும் என்மீது ஏன் எரிச்சல்படுகிறாய்?” என்றது.
“ஆம்! எனக்குத் தெரியும் நீ தந்திரமானவன் என்று. அண்ணா என்று அழைத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். குப்பை மேடு என்றாலும் அது என் வீட்டுக் குப்பை. அதைக் கிளறும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு. நீ வேறு எங்காவது போய் உணவு தேடிக் கொள். இங்கு நின்று என் கோபத்தைக் கிளறாதே. பறந்து போய்விடு” எனப் பதிலிறுத்தது சேவல்.
சேவலின் அகங்காரமான பேச்சு காகத்திற்குப் பிடிக்கவில்லை.
“நான் சுதந்திரமாக எங்கும் உலா வருபவன். இந்தக் குப்பை மேடு இல்லையென்றால் உணவு தேட எனக்குப் பல இடங்கள் உண்டு. வீட்டு எஜமானியின் வளர்ப்பில் அடிமையாக இருக்கும் உணக்கு இவ்வளவு அகங்காரம் கூடாது” எனச் சற்றுக் காட்டமாகக் காகம் கூறிற்று. அந் நேரத்தில் கிணற்றடியில் நின்றிருந்த வீட்டு எஜமானியின் கணவன் குசினிக்கள் நின்றிருந்த மனைவிக்குக் குரல் கொடுத்தான்.
“இந்தா? இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் என்ட கூட்டாளி ஒருவன் சாப்பிட வாறான் என்று இரவு சொண்னேன் அல்லவா? என்ன கறி”
“ஓம்! நான் மறக்கல்ல, அதப் பத்தித்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தநான். நம்மட சிவப்புச் சேவலைப் புடிச்சு வெட்டுங்க. அது கிழண்டு போய்த்து” என்றவள் வாசலுக்கு வந்து வா…வா.. என்று சேவலை அழைத்துக் குரல் கொடுத்தாள்.
காகத்தை விட்டுவிட்டு ஓடிவந்த சேவல் மீண்டும் நெல்மணிகளைக் கொத்தத் தொடங்கிற்று.
“கயிற்றுத் துண்டையும் கத்தியையும் சட்டியையும் கொண்டு வா” என்று மனைவியிடம் சொன்ன கணவன் குனிந்து தனது காலடியில் மேய்ந்து கொண்டிருந்த சேவலை எட்டிப் பிடித்தான்.
மனைவி சேவலின் கால்களைச் சேர்த்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கச் சேவலின் கழுத்தைக் கயிற்றுத் துண்டினால் சுற்றி முடிச்சுப் போட்டு இறுக்கினான். சத்தமிட்டுப் பின் முனகியபடி துடிதுடித்து இறந்த சேவலை வேலிக்கு அடிக்கப்பட்டிருந்த முள்ளுக்கம்பி வரிசை யொன்றிலே கட்டித் தொங்கவிட்டுக் கத்தியால் சேவலை உரிக்கத் தொடங்கினான்.
எஜமான் விட்டெறியும் சேவலின் உடல் எச்சங்களைக் கொத்திக் கொண்டு போவதற்காக வேலிக்கட்டையின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருந்தது காகம். இப்போது இன்னும் பல காகங்களும் வந்து சேர்ந்து வேலிக்கட்டைகளிலும் முள்ளுக்கம்பி வரிகளிலும் உட்கார்ந்து கொண்டிருந்தன.
![]()