காதலர் விமானம்!…. 31…. ( நாவல் ) ஏலையா க.முருகதாசன்.

சச்சிதானந்தம் குடும்பத்துடன் உறவாடி நின்ற குரு,சாகித்தியன் சாந்தினியைக் கண்டதும் அர்ச்சனாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சந்திரன் தனக்கானவனாய் வருவதை இவர்கள் அனைவரும் சேர்ந்து தடுத்துவிடுவார்களோ என்ற பயம் அவளின் மனதில் இருந்ததால் தடுமாறி நின்றாள்.அந்த தடுமாற்றத்தால் அவளுக்கு அங்கு நிற்பது பிடிக்கவில்லை.
இதைவிட, சாந்தினியை அரேபியக் குதிரை என்று சந்திரன் சொன்னதாக பொய் சொன்னதை ஞாபகத்தில் வைத்து தனக்கு முன்னாலேயே சிவகாமியின் தாயாரிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்க, அவரும் விலாவாரியாகச் சொன்னதும் சாந்தினியின் உடல் தோற்றத்தை வைத்தே அவர் விபரித்ததும், தன்னை வேண்டுமென்றே சீண்டத்தான் அந்தக் கதையை சாந்தினி எடுத்தாளோ என்று அர்ச்:சனா எண்ணினாள்.
சாந்தினி கேட்டதற்கு சிவகாமியின் தாயார் விளக்கம் சொன்ன போதுகூட, தனக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லையென்பது போல சமையல் வேலையில் தாயாருக்கு உதவி செய்வது போல பாசாங்கு செய்து கொண்டே சிவகாமி கடைக்கண்ணால் தன்னைக் கவனித்ததையும் அர்ச்சனா கவனிக்கத் தவறவில்லை.
அதே நேரம், சாந்தினியை எதற்காக வீட்டுக்கு வரச் சொல்லி தடல்புடலாக சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள் என யோசித்து மனதுக்குள் பல கேள்விகளை அவள் hள்எழுப்பிக் கொண்ட போதும் தான் அமைதியாக இருப்பதாகவும் உங்களுடைய செய்கைகள் எதுவும் என்னைப் பாதிக்கவில்லையெனக் காட்டிக் கொண்டாள்
எல்லாரும் சாப்பிடுவதற்கு ஆயத்தமான போது, மகேஸ்வரி அழைத்தும்,வேண்டாமென்று சொல்லிவிட்டு விறுக்கென்று போனவள் விறாந்தையிலிருந்து இறங்குவதற்கு படியில் கால் வைக்கத் தடக்குப்பட்டு தடுமாறி விழுந்தவனை குரு ஓடிச் சென்று தூக்கிவிட்டதும், குருவின் கை அவளில் பட்டதும் அவர்களிருவரின் உடலில் ஒரு இனம்புரியாத ஒரு சிலிர்ப்புத் தோன்றியதும்,ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே இவை நடந்து முடிந்துவிட்டன.
மூன்று இளம் பெண்களுக்கிடையில் ஒரு போட்டியே நிலவிக் கொண்டிருந்தமையை அவர்களின் பார்வையிலிருந்து தெரிய வந்தது.ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் வைத்து, சிவகாமி சாந்தினியை எடுத்தெறிந்து பேசிய போது, நான் உனக்கு அண்ணியாக வந்து காட்டுகிறேன் என்று சாந்தினி சிவகாமிக்கு கேட்டும் கேளாத மாதிரி சொன்னது இன்று அது உண்மையாகும் நிலைக்கு வந்துவிட்டது.
சில ஆம்பிளைப் பிள்ளைகள் பல இளம் வயதுப் பெண்களுடன் பழகினாலும் குறிப்பிட்ட காலம்வரை பேச்சுவார்த்தையுடன் இருக்கும் பழக்கம், நாட்கள் செல்லச் செல்லமெதுவாக யாரோ ஒருத்திமீது காதலாக வெளிப்படுவதும் உண்டு.
காதல் வசப்படும் எல்லா ஆம்பிளைப் பிள்ளைகளும் பொம்பிளைப் பிள்ளைகளும் தமது காதலைக் காட்டிக் கொள்வதற்குரிய முகமொழி அவர்களிடம் இருப்பதில்லை.முகத்தில் எதையுமே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.தான் விரும்புவனை எப்பொழுது சந்திப்பேன் என்ற காதலியும், தான் விரும்புவளை எப்பொழுது சந்திப்பேன் என்ற காதலனும் ஏங்கி நிற்கையில், நேரிடையாகச் சந்திக்கும் போது உள்மனம் குதூகலித்து உடல் முழுவதும் ஒரு புதிய உணர்வு தோன்றினாலும் தமக்குள் எதவுமே தோன்றவில்லை என்பது போல காட்டிக் கொள்வார்கள்.எப்பொழுதும் ஒரு தயக்கம் இருக்கும்.இப்படிப்பட்டவர்கள் மெல்ல மெல்லத்தான் தமது காதலை வெளிப்படுத்துவார்கள்.காதலனின் மூச்சுக்காற்றோ, காதலியின் மூச்சுக் காற்றோ தமது முகத்தில் படும் தூரத்திலிருந்தால்கூட அந்த மூச்சுக்காற்றின் வெப்பம் சுகந்தமாக அவர்களின் கழுத்துப் பகுதியிலோ, முகத்திலோ பட்டால்கூட உள்ளுக்குள் பெரும்பிரவாகமாக மகிழ்ச்சி பொங்கினால்கூட அதைக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.ஆனால் தொடர்ந்து அந்த வெப்பமான மூச்சுக்காற்று தமக்குச் சுகந்தமாக வேண்டுமென்று விரும்புவார்கள்.
அப்படித்தான் சாந்தினியின் காலில் குத்திய முள்ளைத் தாயார் எடுத்துவிடச் சொன்ன போது, தாயார் சொன்னதற்காக கடமைக்கு எடுத்துவிடுவது போல சந்திரன் நடித்த போதும் அது தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்றெண்ணி ,சாந்தினியின் காலைத் தொட்டு எடுத்த போது, சாந்தினி தனது நீளமான தனது தலைமயிரை மார்பில் எடுத்துவிட்டபடி, சந்திரனின் தொடையில் பாதத்தை வைத்த போது சந்திரன் அதை விரும்பினான்.அவன் காலைத் தொட்டதும்,அவளின் இருதயம் வழமைக்கு மாறாக வேகமாக துடித்ததும், அதனால் அவள் வேகமாக மூச்சைவிட அந்த வெப்பமான காற்று, இரண்டு தெறிகள் திறந்திருந்த அவனது மார்பில் மெதுவாக ஸ்பரிசித்துக் கொண்டதை அவன் எதுவுமே தனக்குள் ஏற்படவில்லை என்பது போல நடித்த போதும் அவன் உடல் அந்தச் சுகத்தை விரும்பி நின்றது.
சிவகாமி ,தாயாருக்கு உதவி செய்து கொண்டே சாந்தினியை கவனித்துக் கொண்டேயிருந்தாள், சாந்தினி தலைமயிரை எடுத்து மார்பில் விட்டதையும், சந்திரனையே பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி வேகமாக மூச்சு விடுவதால் மார்பு ஏறி இறங்குவதை உன்னிப்பாக கவனித்த சிவகாமியின் முகம் மாற, அந்த மாற்றத்துடனேயே தாயாரை பார்த்தவள் „எல்லாம் இந்த மனுசியாலைதான்’ என்று நினைத்துக் கொண்டாள்.அம்மா இப்படி ஏன் நடக்கிறாள் , எதோ இருக்குது என்று நினைத்துக் கொண்டாள்.சந்திரன் முள்ளை எடுத்துக் கொண்டே கடைக்கண்ணால் தாயாரையும் தங்கச்சியாரையும் பார்த்தவன்,கண்களை உயர்த்தி சாந்தினியைப்
பார்த்தான், அவளும் நேரே அவன் கண்களைப் பார்த்தான்.அப்பொழுதுதான் அர்ச்சனாவும் அடுப்படிக்குள் நுழைந்திருந்தாள்.
இனிச் சந்திரனால் ஆடவோ அசையவோ முடியாது.சாந்தினி அவனை தனது காதலால் ,பார்வையால் கட்டிப் போட்டுவிட்டாள்.சச்சிதானந்தம் குடும்பத்துக்கு அவள் மருமகளாகவும் சிவகாமிக்கு அண்ணியாக வருவதும் உறுதியாகிவிட்டது.
இப்ப,எல்லாரும் மேசையில் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள்.அது பெரிய மேசை ஏழு பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடமிருந்தது.அந்த நீள்சதுர மேசையில் நீளமான மேற்குப்புறப் பக்கத்தில் சச்சிதானந்தம், அவருக்குப் பக்கத்தில் சாந்தினி,அவளுக்குப் பக்கத்தில் சந்திரன்,அதற்கடுத்து அகலப் பகுதியில் சாகித்தியன் அடுத்து கிழக்குப் பக்கத்து நீளமான பகுதியில் சிவகாமி,சிவகாமிக்குப் பக்கத்தில் தாயார், தாயாருக்குப் பக்கத்தில் குரு என எல்லோரும் அமர்ந்திருந்தனர்.சாகித்தியன் உட்கார்ந்திருந்த அகலப் பகுதிக்கு நேரெதிரே அர்ச்சனா உட்கார்ந்திருக்க வேண்டியவள். அவள் மனத் தடுமாற்றத்துடன் வெளியேறியதால் அது நடக்கவில்லை.
மரக்கறிச் சாப்பாடாகவிருந்தாலென்ன, மச்சச் சாப்பாடாகவிருந்தாலென்ன எப்பொழுதும் சச்சிதானந்தம் வாழையிலையிலேயே சாப்பிடுவார்.அவர் வாழையிலையை தனக்கு முன்னாள் வைத்ததும் „மாமா நானும் வாழையிலை சாப்பிடப் போகிறன்’ என்றதும் அவளுக்கு முன்னாள் சச்சிதானந்தம் இன்னொரு வாழையிலையை எடுத்து வைக்க, ஒவ்வொரும் வாழையிலையிலை சாப்பிடுவம் என்று தமக்கு முன்னால் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, மகேஸ்வரி ஒவ்வொருவருக்கும் பரிமாறிவிட்டு உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.
குத்தரிச் சோறும்,எண்ணை பிறந்த ஆட்டுக்கறியில் கறிவேப்பிலையும் பச்சைமிளகாயும் கலந்து தனிச்சுவையைக் கொடுக்க,உடன் தேங்காய்ப்பூவும் அளவாக மஞ்சளும், இடித்த மிளகும் கலந்து,பச்சை மிளகாய் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும்,சின்ன வெங்காயத்தை தூவிவிட்டது போல பரவலாக இருந்த சுறா வறை தனிச் சுவையாக இருக்க,கத்தரிக்காய் வெள்ளைக் கறி நெய்யில் சமைத்தது போல இன்னொரு சுவையாக இருக்க,அவர்கள் சுவைத்துச் சாப்பிட்டக் கொண்டிருக்க „உங்கள் மூன்றுபேருக்கும் என்ரை சமையல் பிடிச்சுதா’ என மகேஸ்வரி கேட்க, குருவும், சாகித்தியனும் அருமை என்று செல்ல, கொஞ்சம் தாமதித்து „மாமி அருமையோ அருமை மாமி’ என்று சொன்னவள்,’மாமி அப்பாவுக்கு சுறா வறையென்றால் நல்ல விருப்பம், அவருக்கு ஒரு தங்கச்சி இருந்தாவாம், அவ சுறாவறை செய்தால் அதன் உருசியே தனி உருசி என அடிக்கடி நாங்கள் சின்னனாய் இருந்த போது சொன்னவர் பிறகு அப்பா தங்கச்சியாரைப் பற்றி எதுவுமே சொல்லேலை „என்றவுடன்,மகேஸ்வரிக்கு புரைக்கேறி இருமத் தொடங்க, இடது புறங்கையால் கண்களைத் துடைத்தபடி’ சில நேரம் எனக்கு பச்சைமிளகாய் ஒத்துவராது,அதைக் கடிச்சு சாப்பிட்டிட்டன் „ என்று மகேஸ்வரி சொன்னதைக் கேட்ட அவளருகில் இருந்த குரு, அவள் எதையோ
மூடிமறைக்க முயற்சிக்கிறாள் என்பதை கண்டு கொண்டவன் மேசையின் நடுவிலிருந்த தண்ணீர்க் கோப்பையை எடுத்து குடிக்கக் கொடுக்கிறான்.அப்பொழுது சச்சிதானந்தம் சாந்தினியைப் பார்த்து, „எல்லாத் தேங்காயும் ஒரே மாதிரி உருசியானவை அல்ல, சில தேங்காய்களின் பாலில் கறி சமைத்தாள் நெய்மாதிரி வாசம் வரும்,அப்படியான தேங்காயின் பாலைத்தான் கத்தரிக்காய் கறிக்கு விட்டிருக்கிறா என்று சொல்கிறார்.
மனைவிக்கு புரைக்கேறியதைக் கவனித்தும் , கவனியாதது போல சச்சிதானந்தம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அவருக்குத் தெரியும் தனது மனைவிக்கு எதனால் புரைக்கேறியதென்று.
சாகித்தியனின் இலையில் சோறு கறிகள் குறைந்ததைக் கண்ட மகேஸ்வரி,அவற்றைப் போடுவதற்கு எழும்ப, „அம்மா நீங்க இருங்கோ, நான் போடுறன் „என்று எழுந்த சிவகாமி, தற்செயலாக நிற்பது போல பாவனை காட்டிக் கொண்டு அவனக்கு மிக அருகில் நின்று கொண்டு சோறு கறிகளை இலையில் வைக்கத் தொடங்கினாள், அவளின் தலைமயிரின் ஒரு பகுதி சாகித்தியனின் தோள்பட்டைச் சேட்டில் பரவி நின்றது.அவன் போதும் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை’ போதும் „ என்று சொல்லி அவளின் கையைப் பிடித்த போது, சாந்தினி நிமிர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்தவள்’ சிவகாமி எனக்கு அண்ணியாக வரப் போகிறதுக்கு இப்பவே பாத்தி கட்டிறாள் போல’ என்று நினைக்கும் போதே,சிவகாமியும் நான் உனக்கு அண்ணியாக உன்னுடைய வீட்டுக்குள் வருகிறேனா இல்லையா என்று பார் என்பது போல சாந்தினியைப் பார்த்தபடியே உட்காருகிறாள்.
மகேஸ்வரிக்கு புரைக்கேறியது, சிவகாமியின் கையைச் சாகித்தியன் பிடித்தது, சாந்தினியை சிவகாமி பார்த்தது என எல்லாமே சில விநாடிகளுக்குள் நடந்தாலும், அவற்றுக்குள் பல அர்த்தங்களும் பொதிந்து கிடந்தன.எல்லாவற்றையும் எல்லாரும் கவனித்தார்கள்.ஆனால் கவனிக்காதது போல இருந்தார்கள்.
எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும்,பள்ளிக்கூட மைதானத்திலை போய் போல் அடிப்பமா என்று சந்திரன் குருவையம் சாகித்தியனையும் பார்த்துக் கேட்க அவர்களிருவரும் அவனோடு போக, சிவகாமி வாறியளா பள்ளிக்கூட மைதானத்திலை சற்றில் கொக் விளையாட என்று சாந்தினியைப் பார்த்து கேட்க அவளும் ஓம் என்பது போலத் தலையை ஆட்டுகிறாள்.
சற்றில் கொக்கும் மூன்று பாட்மட்டைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டுக்; கேற்றைத் தாண்டிய சிவகாமி, கிழக்குப் பக்கமாக இரண்டடி நடந்து அர்ச்சனாவுக்கு கேட்கத்தக்கதாக’ அர்ச்சனா வாறியா சற்றில் கொக் விளையாட „ என்று கேட்க அவளும் இவர்களுடன் வந்து இணைகிறாள்.
மூவரும் மகாஜனாவின் கேற்றிருக்கும் இடத்தை நோக்கி வீதியில் மேற்குப் பக்கமாக நடந்து போய் கேற்றைத் தாண்டி பள்ளிக்கூடத்துக்குள் நுழைகிறார்கள்.இவர்களுக்கு முன்னால் போன சாகித்தியன், குரு, சந்திரன்
என மூவரும் கேற்றுக்கு அருகில் பள்ளிக்கூடத்துக்குள் நிற்கும் வானைப் பார்த்துவிடுகிறார்கள்.
அநத வான்தான் மகாஜனா பங்குபற்றும் உதைபந்தாட்டங்களுக்கு வீரர்களை ஏற்றி இறக்கும் வான்.அதன் உரிமையாளரும் சாரதியும் கிருஸ்ணர்தான்.வழமையாக அந்த வானை கிருஸ்ணர் வான் விடுவதற்கு என்று கட்டப்பட்ட கொட்டகையில் விடுவார்.இன்று ஏனோ அங்கு நின்றது.
வானைக் கடக்கையில் ஒரு பக்கத்தில் உடைந்திருந்த கண்ணாடியைப் பார்த்த சாகித்தியன் துணுக்குறுகிறான்.இந்தக் கண்ணாடி உடைவதற்குகாரணமானவன்; தான்தானே என்று நினைத்தவன், திரும்பி தங்கச்சியார் சாந்தினியைப் பார்க்கிறான்,நினைவழியா தழும்பாக அவளின் நெற்றிக் காயத்தை நினைக்கிறான்.தங்கச்சியின் காயத்துக்கு தான்தானே காரணம் என நினைத்துக் கொள்கிறான்.
உடைந்த கண்ணாடியைக் கண்ட சந்திரனின் மனக் கண்ணில், சாந்தினிக்கு உடைந்த கண்ணடித் துண்டு பட்டு வெட்டிய காயத்திலிருந்து ஒழுகிய இரத்தத்தை கட்டுப்படுத்த தனதுச சட்டையைக்; கிழித்துக் கட்டியது ஞாபகம் வருது, கூடவே ஸ்கந்தா மைதானத்தில் வைத்து வியர்வையைத் துடைக்கவென சாந்தினி கொடுத்து கைக்குட்டையும் அன்றைய நாளும் ஞாபகத்தில் வருகின்றன.
அவர்கள் மூவருக்கும் பின்னால் வந்த சாந்தினியும், சிவகாமியும், அர்ச்சனாவும் அந்த வானையும் உடைந்த கண்ணாடியையும் பார்த்துவிடுகிறார்கள்.உடைந்த கண்ணாடியைப் பார்த்த சாந்தினி, வானுக்கு எறிந்த கல்லால் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று பறந்து வந்து தனது நெற்றியை வெட்டி இரத்தம் ஒழுக அந்த தனது காயத்துக்கு வானை விட்டிறங்கி வந்து சந்திரன் தனது சட்டையைக் கிழித்துக் கட்டிய அன்றைய நாளும்;, அதைத் தான் பவுத்திரமாக வைத்திருப்பதையும் வியர்வையைத் துடைக்கவென தான் கொடுத்த கைக்குட்டையை சந்திரனும் கவனமாக வைத்திருப்பான் என நினைக்கிறாள்.
வானையும் வானில் உடைந்த கண்ணாடியையும் பார்த்த சிவகாமியின் மனக்கண் முன்னால் அன்றைய நாள் விரிகிறது.சாந்தினி குடுத்த கைக்குட்டையும்,சாந்தினியின் நெற்றிக் காயமுந்தானே அவளை எனக்கு அண்ணியாக வரவைக்கிறது நினைத்தவள்,அப்படியானால் நானும் அதே நினைப்பில்தானே அவளுக்கு அண்ணியாக வர ஆசைப்படுகிறேன் என நினைத்து வானைக் கடக்கையில், எல்லாவறறையும் அறிந்து வைத்திருந்த அர்ச்சனா தான் படியிலிருந்து தடுக்கி விழுந்த போது ஓடிவந்து தூக்கிவிட்ட குருவின் நினைப்புடன் வானைக் கடந்து நடக்கிறாள்.
காதலர்களைச் சேர்த்து வைத்ததில் மகாஜனாவின் செல்லப்பிள்ளையான இந்த வானுக்கும் பெரும் பங்குண்டு.பந்துடன் மைதானத்துக்குள்; இறங்கிய மூவரில் சாகித்தியன் „வாற புதன்கிழமை பரமேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் எங்கடை இணர்டாவது அணி நட்பு ரீதியாக விளையாடுது
வாறியளா „ என்று சந்திரனைப் பார்த்துக் கேட்க’கட்டாயம் வருவன் „ என்கிறான் சந்திரன்.
சாகித்தியன் சொன்னதைக் கேட்ட சாந்தினி,சிவகாமி,அர்ச்சனா மூவரும் „நாங்களும் வருவோம்’ என்கின்றனர்.அதைக் கேட்ட சாகித்தியன், சாந்தினியைப் பார்த்து,’அதுதான்……முந்தி’ என்ற அவளின் காயத்துக்கான சம்பவத்தைச் சொல்ல வாயெடுத்தவன் சட்டென்று நிறுத்திக் கொள்கிறான்.
மைதானத்தின் நடுவில் நின்று ஆண்கள் மூவரும் பந்தையடித்துக் கொண்டிருக்க, மைதானத்துக்கு மேற்குப்புற மாமர நிழலில் மூன்று பெண்களும் சற்றில் கொக் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆண்களில் சந்திரன் அடிக்கடி சாந்தினியைப் பார்க்க சாந்தினியும் அடிக்கடி சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சிவகாமி சாகித்தியனை அடிக்கடி பார்த்தாள், சாகியத்தியனும் சிவகாமியை அடிக்கடி பார்த்தாள்.அர்ச்சானவின் பார்வை குருவிடமே இருந்து.குருவும் அர்ச்சனாவின் கன்னக்குழி சிரிப்பு ஞாபகத்தினால் அவனும் அப்பப்ப அவளைப் பார்த்தான்.
அந்த மூன்று காதல் சோடிகளில் சந்திரன் சாந்தினியின் காதல் விதையாகி,முளையாகி, செடியாகி வைரம் பாய்ந்த மரமாகி நின்றது.இன்னொரு காதல் சோடியான சாகித்தியன் சிவகாமி காதல் விதையாகி, முளையாகி செடியாகி நிற்கின்றது.அது மரமாகும்.இன்னொரு காதல் சோடியான கரு அர்ச்சனாவின் காதல் விதையாகி முளையாகி நின்றது.அதுவும் செடியாகி மரமாகும்.
அந்த ஆண்கள் மூவரும், அந்தப் பெண்கள் மூவரும் ஒப்புக்கு பந்தை அடித்தார்கள்,சற்றில் கொக் விளையாடினார்கள். மகாஜனா மைதான வெளி அந்தக் காதல் சோடிகளின் காதல் அலைகளால் நிறைந்து நின்றது.
(இனி)
![]()