காதலர் விமானம்!…. ( நாவல் ) … ஏலையா க.முருகதாசன்.

அர்ச்சனாவின் வீடு பக்கத்து வீடு. பக்கத்து வீடாக இருப்பதால்அவள் அடிக்கடி சிவகாமியின் வீட்டுக்கு வந்து போவாள்.அப்படித்தான் இன்றும் அவள் வந்திருந்தாள்.அவளுக்கும் சந்திரன் மீது ஒரு விருப்பம் இருந்தது.
சந்திரனை விரும்புவதற்கு அவனது உயரமும் கம்பீரம் மட்டுமல்ல யாழ் மாவட்டத்திலேயே உதைபந்தாட்ட விளையாட்டுப் பிரியர்களால் கவனிக்கத்தக்க விளயாட்டு வீரனாகவும் இருந்தான்.
சந்திரன் உயர்தர வகுப்பில் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன்.அவனை மாணவன் என்பதற்கப்பாலும் அவனது நல்லியல்புகளால் பலரும் அவன் மீது ஒரு விருப்பம் கொண்டிருந்தனர்..
சச்சிதானந்தத்திடமும் மகேஸ்வரியிடமும் வேறு ஆட்கள் மூலமாக, அவர்களின் உறவினர்கள் தமது மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கும் விருப்பத்தைக் கேட்ட போது, அவன் படித்துக் கொண்டிருக்கிறான் படிப்பு முடிந்து அவன் வேலைக்குப் போக வேணும், இனி அவனுக்கு ஒரு தங்கச்சியிருக்கு அவளுக்கு எங்கையாவது நல்ல பொடியனைப் பார்த்துச் செய்து வைத்ததற்குப் பிறகுதான் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று நாகரிகமாச் சொல்லி வைப்பார்கள்.
சச்சிதானந்தம் மகேஸ்வரிக்கு சுண்ணாகத்திலும் பருத்தித்துறையிலும் சாவகச்சேரியிலும் அதிக உறவினர்கள் இருந்தார்கள்.
உறவினர்கள் வீட்டில் நடைபெறும் கல்யாண வீடுகளுக்கோ,பூப்புனித விழா வீட்டுக்கோ சந்திரனும் சிவகாமியும் பெற்றோருடன் போகிற வேளைகளில் அங்குவரும் அவர்களின் உறவினர்களும் தம்முடன், தமது ஆம்பிளைப்;பிள்ளைகளையும் பொம்பிளைப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருகையில், சிவகாமியையும் சந்திரனையும் பார்த்துவிட்டு தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பனையில் சோடி சேர்த்துப் பார்ப்பார்கள்.
தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் தரகரிடம் சச்சிதானந்தம் குடும்பத்திலேயே முதலிலை போய்க் கேளுங்கள் என்று; சொல்லி அவர் வந்து கேட்டாலும் படிச்சுக் கொண்டிருக்கிற பிள்ளையள் படிப்பு முடியட்டும், பிறகு சொல்றம் என்று யாரிலும் நோகாமல் சச்சிதானந்தம் சொல்லி விடுவார்.
தனது பிள்ளைகள் இருவரும் அழகாகவும் உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பதை நினைத்து மகேஸ்வரி எப்:பொழுதும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள்.யாரிடமும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளவும் மாட்டாள்.
தங்களுடைய பிள்ளைகளை மருமகளாகவோ, மருமகனாவோ ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் கல்யாணம் பேசி வருபவர்களை அவர்களிருவரும் அலட்சியமாக பார்ப்பதில்லை.ஏனென்றால் தாங்கள் வேண்டாம் என்று சொல்பவர்களை காலம் தேடிப் போக வைக்கும் என்பதை சச்சிதானந்தமும் மகேஸ்வரியும் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.
ஆனால் எல்லாரும் பிள்ளையளைக் கேட்டு வருவதால் பிள்ளையளுக்கு நாவுறுபட்டுவிடும் என்று மகேஸ்வரி சொல்லுற பொழுதெல்லாம்’ ஆம்பிளைப் பிள்ளை பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடென்றால் நாலுபேர் சம்மந்தம் பேசி வாறது இயற்கைதானே,நான் உன்னை விரும்பி தூக்கிக் கொண்டு வரேலையே அது மாதிரித்தான் , அதைப் போல இது கேட்டு வருகினம் என்று சச்சிதானந்தம் சொல்ல, தூக்கிக் கொண்டு வரேலேயே என்ற இடத்தை மகேஸ்வரி எப்பொழுதும் இரசிப்பாள்.இந்த வயதிலும் அவளுக்க முகம் சிவக்கும். பிள்ளைகளில்லாத நேரங்களிலைதான் அவர்களிருவரும் இப்படியெல்லாம் இரசித்துக் கதைப்பார்கள்.
ஆனால் இப்ப அந்த வீட்டுச் சூழ்நிலையே மாறிவிட்டது.தான் பெரியபிள்ளையாக முன்பே தனக்குச் சந்திரன் காதல் கடிதம் தந்தவர் என்று அர்ச்சனா ஒரு நாள் சொல்ல,சச்சிதானந்தம் குடும்பத்துக்கு அதிர்ச்சியாகவிருந்தாலும் தங்களுடைய மகன் அப்படிச் செய்திருக்க மாட்டான் என்று அவர்கள் நம்பினது மட்டுமல்ல, அதைப் பெரிது படுத்தாது ஒரு பொம்பிளைப் பிளளையின் பெயருக்கு கெட்ட பெயர் தங்களால் வரக்கூடாது என்பதற்காக அர்ச்சனாவின் பெற்றோருக்கு அதைத் தெரியப்படுத்தவேயில்லை.
எதுவுமே நடக்காதது போல அர்ச்சனா சச்சிதானந்தம் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள்.ஒரு சந்தர்ப்பத்தில் அர்ச்சனா சிவகாமியிடம், „ என்னை விட்டிட்டுச் சந்திரன் வேறொருத்திக்கு தாலி கட்டுவானானால் அன்றைக்கு நான் தற்கொலை செய்வேன்’ என்றும் வெருட்டியிருந்தாள்.
முதலிலை சிவகாமி அர்ச்சனா சொன்னதைக் கேட்டு பயந்தாலும் ஆனால் அதை அவள் பெற்றோருக்குச் சொல்லவில்லை.
இன்றைக்கு தான் தற்செயலாக வந்தது போல அர்ச்சனா வந்திருந்தாலும், சாந்தினி அங்கிருப்பதைக் கண்டதும், சாந்தினி திட்டமிட்டுத்தான் நடக்கிறாளோ என நினைத்த அர்ச்சனா சாந்தினி வந்திருப்பதை யாரோ ஒருத்தி வந்திருக்கிறாள் எனக்கென்ன என்பது போல நடித்தாள்.ஆனால் உள்ளுக்குள்ளை அவளுக்கு சாந்தினி மீது பொறாமையும் பயமும் இருந்தது.
„மாமி அரேபியக் குதிரை மாதிரி என்று பொம்பிளைப் பிள்ளையள் சிலரைப் பார்த்துச் சொல்வது ஏன் மாமி’ என்று சாந்தினி கேட்டதும்,அர்ச்சனாவின் முகம் கறுக்கத் தொடங்கியது.
„ஏன் அப்படிச் சொல்லுகினம் என்றால், பொம்பிளைப் பிள்ளையளிலை உயரமாகவும், வட்டமுகம் இல்லாமலும் நீளமுகமாக இல்லாமலும், நீளமான
மூக்குடனும், நீளமான தலைமயிருடனும்,நீளமான கைவிரல்களுடனும், கால்விரல்கள் பெருவிரல்களிலிருந்து சின்னி விரல் வரை உள்ள விரல்கள் கூடிக் குறைந்து இல்லாமல் அளவான நீளமாகவும், நீளமான கால்களுடனும்,வாழைத்தண்டு போல துடைகளுடனும,; நடக்கும் போது பின்பக்கம் அழகாகவும் இருந்தால்,அவர்களை அரேபியக் குதிரை மாதிரி திமிறிக் கொண்டு நிற்பவை என்று சொல்றது வழக்கம்’ என்று மகேஸ்வரி பெண்களின் அழகு பற்றி ஒரு விரிவுரையே நடத்தி முடித்தாள்.
„ஏன் மாமி நான் மட்டுமே அப்படி இருக்கிறேன், சிவகாமியும் அப்படித்தானே இருக்கிறாள், நீங்கள்கூட நீங்கள் சொன்ன இலட்சணத்தில்தனே இருக்கிறியள்,அர்ச்சனாகூட அப்படித்தானே இருக்கிறியள்,நான் நினைக்கிறன் மாமி நீங்கள் குமர்ப்பிள்ளையிலை சிவகாமிமாதிரி இருந்திருப்பியள்,நீங்கள் படிக்கேக்கிலை மகாஜனாவின் கனவுக்கன்னி நீங்கள்தானோ’ என்ற சொல்லி சாந்தினி பலமாகச் சிரித்தவள்,ஏன் என்னை மட்டும் அரேபியக் குதிரை என்று சொல்லுகினம் மாமி’ என்று சாந்தினி கேட்க „சொன்னவைதான் அதுக்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று மகேஸ்வரி சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடத் தொடங்கினாள்.
தனது மகள் சிவகாமிதான் சாந்தினிக்கு அரேபியக் குதிரை என்று பட்டப் பெயர் வைத்தது என்று தெரிந்த போதும்,, எதுவுமே தெரியாதது போல மகேஸ்வரியும் நடித்தாள்.

சாவகச்சேரியில் நடந்த கல்யாண வீட்டில் வைத்து,சந்திரன்தான் உனக்கு அரேபியக் குதிரை என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறான் என்று சொன்னவள் அர்ச்சனா.ஆனால் சாந்தினி அதை நம்பவே இல்லை, தான் சந்திரனை விரும்புவது அர்ச்சனாவுக்கு பிடிக்காததால் அர்ச்சனா பொய் சொல்கிறாள் என்பது சாந்தினிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அர்ச்சனாவின் ஒரே நோக்கம் சந்திரன் மீது சாந்தினி வெறுப்புக் கொள்ள வேண்டுமென்பதே.
ஆனால் நாளுக்கு நாள் அவளுக்கு சந்திரன் மீது விருப்பம் அதிகரித்துக் கொண்டே வந்தது.சிவகாமியைச் சீண்டுவது சாந்தினிக்கு விருப்பமான ஒன்று.சிவகாமி சாந்தினியை வெறுத்தாலும் அது உண்மையான வெறுப்பு அல்ல.நீ எனக்கு அண்ணியாக வரவிடமாட்டேன் என்பது சிவகாமியிடம் இருக்கும் திமிர்த்தனமான சாந்தினியுடனான ஒரு போட்டி மட்டுமே.
அடுப்படிக்குள் கொஞ்ச நேரம் யாருமே எதுவும் பேசவில்லை.ஆனால் அர்ச்சனா மட்டும் நிம்மதியிழந்து காணப்பட்டாள்.ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ச்சிவசப்பட்டு பின் விளைவுகள் எதையுமே யோசிக்காமல் எல்லாருடைய முன்னிலையிலும்,தான் பூப்பெய்த முந்தியே சந்திரன் தனக்கு காதல் கடிதம் எழுதியவன் என்று பொய் சொன்னாளே தவிர சந்திரன் தன்னை விரும்புவானா என்பதை அவளால் அறிய முடியவில்லை.
அயல் வீடுகளில் ஆம்பிளைப் பிள்ளைகளோ பொம்பிளைபிள்ளைகளோ இருந்து அந்த வீடுகளுக்கு போய்வரும் ஆம்பிளைப் பிள்ளையளும் பொம்பிளைப் பிள்ளையளும் யதார்த்தமாக ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வது போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், அவர்குளக்குள்ளும் யாருமே அறியாதவாறு காதல் துளிர்விடுவதும் அவற்றில் சில நிறைவேறுவதும், சில நிறைவேறாமலே கருகிப் போவதும் உண்டு.மற்றவர்கள் அரசல்புரசலாக ஏதாவது கேள்விப்பட்டாலும் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், அதுகள் சின்ன வயசிலையிருந்து சகோதரமாக பழகுதுகள் என்று அப்படியே அக்கதைக்கு தண்ணீர் ஊற்றி அணைத்து விடுவார்கள்.
அப்படித்தான் அர்ச்சனாவின் நிலையும்.சந்திரனின் மனதில் சாந்தினி என்ற ஒருத்தி இடம் பிடிக்காவிட்டால் சிலவேளை அர்ச்சனா சந்திரனின் காதலியாக மாறியிருக்கலாம்.
அயல் வீட்டில் உள்ள உறவுக்காரப் பெண்ணுடன் யதார்த்தமாகப் பழகிறோம் என்று சந்திரன் தன்னை ஏமாற்றிக் கொண்டாலும், அழகியாக கன்னக்குழி சிரிப்புடன் வந்து போகும் அர்ச்சனாவின் அழகில் சந்திரன் தடுமாறிக் கொண்டும் சுதாகரித்துக் கொண்டுமிருந்தான். பருவ வயதுக்குரிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இத்தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே.
சந்திரனின் மனதின், ஒரு ஓரத்தில் சிரிக்கும் போது கன்னக்குழி விழும் அர்ச்சனாவின் முகம் இருந்தது உண்மைதான்.ஆனால் சாந்தினி சந்திரனின் இதய மூலைமுடுக்கெல்லாம் எப்பொழுது ஆக்கிரமித்து விரவி நின்றாளோ அன்றிலிருந்து அர்ச்சனாவின் நினைப்பு அவனில் இல்லாமல் போய்விட்டது.
சந்திரனுக்கும் காதலுக்கும் வெகுதூரம் என்றுதான் பெற்றோரும் நினைத்தனர்.ஆனால் சிவகாமி மட்டும் தமையன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனை என நினைத்தாள்.
„சரி எல்லாரும் சாப்பிட வாங்கோ’ என்று சொன்ன மகேஸ்வரி, „என்ன பிள்ளை இன்னும் உன்ரை அண்ணன்களைக் காணேலை’ என்று சாந்தினியைப் பார்த்துக் கேட்க,அப்பொழுது விறாந்தையில் காலடித்தடம் கேட்க, சிவகாமி அடுப்படிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து „வந்திட்டினம் அம்மா’ என்று சொல்ல அர்ச்சனாவும் எட்டிப் பார்க்கிறாள், குருவும் சாகித்தியனும் நிற்பதைக் கண்டதும் குடும்பமாகவே வந்திருக்கினம் போல’ என்று நினைத்தவள்,இதுவரை காலமும் அன்ரி என்றே மகேஸ்வரியை அழைத்து வந்தவள்’ மாமி நான் போயிட்டு பிறகு வாறன்’ என்று சொன்னவளை ஆச்சரியத்துடன் , இவள் ஏன் இன்றைக்கு என்ன மாமி என்று கூப்பிடுகிறாள் என்ற மகேஸ்வரி „சாப்பிட்டிட்டுப் போவன்’ என்று கேட்க, „வேண்டாம் மாமி நான் சாப்பிட்டிட்டுத்தான் வந்தனான்’ என்று சொன்னவள் வேகமாக படியிறங்கும் போது கால் தடுக்கி படியை விட்டு கீழே விழுந்தும், படியருகில் நின்ற குரு வேகமாகப் போய் அவளைத் தூக்கி விடுகிறான்
„தாங்ஸ்’ என்று சொல்லி அர்ச்சனா விழுந்த நோ இருந்த போதும் அதைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே விறாந்தையில் நின்ற சந்திரனையும் சிவகாமியையும் , சாந்தினியையும் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்குகிறாள்.
அர்ச்சனாவின் கன்னக்குழிச் சிரிப்பில் சாகித்தியன் காதலில் விழுந்தானா என்பது வரும் நாட்களில் தெரியுந்தானே.காதல் வருவதற்கு ஒரு சிறு சம்பவமே போதும்.
(தொடரும்)
![]()