காதலர் விமானம்!…. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

சாந்தினிக்கு நெருஞ்சி முள் காலின் பெருவிரலொடு உள்ள உள்பாதப் பகுதியில் குத்தியிருந்து.சிவகாமி முள்ளை இழுத்தெடுத்து எறிந்தாலும் அவளின் தடித்த பாதப் பகுதியைத் தாண்டி தசைக்குள் முறிந்துவிட்டது முள்.
வேதனையைப் பொருட்படுத்தாது சாந்தினி நொண்டி நொண்டி வயலில் நடந்து வந்தாலும்கூட முறிந்த முள் உள்ளேயிருப்பதால் நடக்க நடக்க நோகத் தொடங்கியதால் முன்பாதத்தை உயர்த்தியபடி குதிக்காலை அழுத்தி வைத்து நடந்து கொண்டிருந்தாள்.
நொண்டியபடியே அடுப்படிக்குள் நடந்து போன சாந்தினி „மாமி நான் ஏதாவது உதவி செய்யவா’ எனச் சாந்தினி கேட்க,’வேண்டாம் பிள்ளைன இப்பவே நீ நொண்டிறாய்,சமையலுக்கான எல்லா வேலையும் முடிஞ்சிட்டுது, மாமா இறைச்சியும் வெட்டித் தந்து, சுறாவறைக்கு சுறாவும் வெட்டித் தந்திட்டார், சுறாத் துண்டுகளை அவிச்சும் போட்டன், இனி ஒரு வேலைதான் இருக்கு சுறா வறைக்கு தேங்காய்ப் பூவை வறுகாமல் சின்னச்சின்னப் பூவாக திருவ வேணும் அதை நான் திருவுவன் இல்லாட்டி சிவகாமி திருவுவாள்’ என்று சொல்லி முடிக்குமுன்,’ஏன் மாமி உங்கடை செல்ல மகன் ஒரு வேலையளும் செய்ய மாட்டாரோ, அவர் கல்யாணம் கட்டினாள் பெண்சாதிக்கு உதவி செய்ய மாட்டார் போலிருக்கு „ என்று சாந்தினி சொன்னதைக் கேட்ட மகேஸ்வரி „தாய்மாருக்கு உதவி செய்யாதவை பெண்சாதிக்கென்றால் விழுந்து விழுந்து செய்வினம்’ என்றவுடன்’ மாமி உங்கடை மகன் எனக்குத்தான் விழுந்து விழுந்து வேலை செய்யப் போகிறான்’ என்று மனதுக்குள் நினைத்தவள் சிரிப்பை அடக்கியவாறு முகத்தை திருப்புகிறாள்.
„மாமி ஏதாவது வேலை தாருங்கள் நீங்களும்,மச்சாளும் வேலைசெய்ய என்னாலை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ நான் எப்ப உங்களுக்கு மச்சாள் என்று சொன்னனான்’ என்று கேட்டவாறு அடுப்படிக்குள்சிவகாமியிடம்„’உங்கடை அம்மாவை நான் மாமி என்று கூப்பிட்டால் மாமியின் மகளை மச்சாளென்று கூப்பிடலாந்தானே’ எனப் பதில் சொன்ன சாந்தினி „ஏன் மாமி நான் சொன்னது சரிதானே’ என்று கேட்டவவள் விடாமல்’ உங்கடை அண்ணையை மச்சான் என்றும் கூப்பிடலாம் அத்தான் என்றும் கூப்பிடலாந்தானே, என்ன மாமி நான் சொல்லுறது சரிதானே „என்றவள்,நொண்டி நொண்டிப் போய் கதிரையில் உட்காருகிறாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும்,சிவகாமி „மரியாதைக்கு கூப்பிடறதை வைச்சு எல்லாத்தையும் தீர்மானிக்க முடியாது’ என்று சொல்கிறாள்.எதையுமோ காதிலை வாங்கிக் கொள்ளாமல் கதிரையில் உட்கார்ந்து விரல்களால் சாப்பாட்டு மேசையில் தாளம் போட்படி „தனக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக மிக மெதுவாக சிவகாமியை ஓரக் கண்ணால் பார்த்தபடி „நான்தான் இந்த வீட்டு மருமகள் என்பது எழுதப்பட்ட விதி’ எனச்
சொல்ல, சிவகாமியின் ஊசிக்காது அதைக் கேட்க,’பார்ப்பம்’ என்று தனக்குத்தானே கதைப்பது போல சிவகாமி சொல்ல அதைக் கேட்ட தாய் மகேஸ்வரி’ என்னத்தைப் பார்க்கப் போகிறாய்’என்று கேட்க „ஒன்றுமில்லை’ என்று சிவகாமி சொல்ல, இவர்களுக்குள் ஏதோ நடக்குது என அவள் புரிந்து கொள்கிறாள்.
சாந்தினியின் துடுக்குத்தனமான பேச்சைக் கவனித்த மகேஸ்வரி’ இவள் மருமகளாக வந்தாள் இவளை அண்டழிக்க ஏலாது போல என்று மனதில் நினைத்து தன்னையறியாமலே சிரிக்கிறாள்.
அதைப் பார்த்த சிவகாமி’ ஓகோ கற்பனை மனதில் ஓடுதோ „ என்று சொல்லிவாறு,சாந்தினியைப் பார்க்கிறாள்.
„மாமி சுறாவறைக்கு வெங்காயம் உரிச்சு தரவா, சும்மா இருக்க போரடிக்குது விசராயிருக்குது „ என்ற சாந்தினியிடம்’ சரி இதை உரிச்சு வெட்டித்தா பிள்ளை „ என்று மகேஸ்வரி சாந்தினி உட்கார்ந்திருந்த சாப்பாட்டு மேசையில் வெங்காயக் கூடையை வைக்கிறாள்.
வெங்காயத்தை உரிச்சு வெட்ட வெட்ட வெங்காயத்தின் காரம் கண்ணில்பட கண்ணைக் கசக்கியபடி வெட்டிக் கொண்டிருந்தவள்’ ஆ’ என்று வேதனையுடன் சொல்ல’கையை வெட்டிப் போட்டியோ பிள்ளை’ என்று திடுக்கிட்ட திரும்பிப் பார்த்த மகேஸ்வரியிடம்’ இல்லை மாமி காலை ஊன்ற பெருவிரலடிப் பாதம் சரியா நோகுது மாமி ,முள்ளெடுக்க வேணும், எப்படி முள்ளெடுக்கிறதெண்டு தெரியேலை „ என்று பொய்யான வேதனையுடன் சொல்கிறாள் சாந்தினி.
இவள் என்னைக் கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அடிக்கடி மாமி மாமி என்று சொல்கிறாள் என்று எரிச்சலடைகிறாள் சிவகாமி.
„முள்ளெடுப்பதைப் பற்றி யோசிக்கவே வேண்டாம், எங்களிட்டை ஒரு டொக்ரர் இருக்கிறார், எடுத்து விடுவார் என்கிறாள் மகேஸ்வரி.
„யார் மாமி அது’ என்று சாந்தினி சொல்ல.
„இவள் ஒருத்தி எப்ப பார் மாமி மாமி’ என்று தேங்காயை இறுக்கித் துருவியபடி சத்தத்தை அடக்கி மெதுவாகச் சொல்ல, அது சாந்தினிக்கு கேட்க’ யார் மாமி அந்த டொக்ரர் „ என்று வேண்டுமென்றே கேட்க, தனது மகளும் சாந்தினியும் வேண்டுமென்றுதான் கதைக்கினம் என்பதைப் புரிந்து கொண்ட மகேஸ்வரி எதையுமே கேட்காதது போல நடிக்கிறாள்.
„சந்திரன்தான் எங்கடை டொக்ரர் எந்த தாழத்தில் முள் குத்தினாலும் எடுப்பான்.எங்களுக்கு முள் குத்தினால் அவன்தான் எடுத்து விடுவான். அவன்ரை நண்பர்களுக்கு முள் குத்தினால்கூட நொண்டி நொண்டி வந்து அவனிட்டைத்தான் முள்ளை எடுக்கச் சொல்லுவினம்.நாள்பட்ட முள்ளு ஆணியாய் வளந்திடும்.தகப்பனுக்கு காம்புச் சத்தகக் கூரால் ஆணியை அவன்தான் எடுத்துவிடுவான்’என்று சொன்ன மகேஸ்வரி, இவளிட்டை முள்ளை எடுக்கச் சொன்னால் அதை ஊசியாலை தோண்டித் தோண்டி
நல்லாய் தாளக் கொண்டு போய்விடுவாள்’ என்று மகளைப் பார்த்து சொல்ல, சிவகாமி „இப்ப என்னைவிட அவதானே முக்கியம்’ என்பது போல தாயை முறைத்துப் பார்க்கிறாள் சிவகாமி.
மகேஸ்வரி „சந்திரன் „ என்று கூப்பிட அவனும்’ என்னம்மா என்று கேட்டபடி அடுப்படிக்குள் வருகிறான்.’பிள்ளை சாந்தினிக்கு பாதத்துக்குள்ளை முள்ளுக் கிடக்குது போல,அதை எடுத்துவிடு „10என்று தாய் சொல்ல,’நானா’ என்று அவன் கேட்க „நீதான் எடுத்துவிடு என்கிறாள் தாய். தமையன் மகா நடிப்பு நடிக்கிறான் என்பது சிவகாமிக்குத் தெரியும்.
கதிரை ஒன்றை எடுத்து அவள் முன்னாள் போட்டபடி’ எந்தக் கால் „ என்று கேட்க வலது கால் என்று சொல்ல „சரி காலைத் தூக்கி …..இங்கை வையுங்கள் என்று தொடையைக் காட்டிறான்.அவனின் தொடைக்கு மேல் தனது காலை வைக்க விரும்பாதவள் போல நடித்த சாந்தினி மெதுவாகத் தூக்கி அவன் தொடையில் வைக்க முள்ளை எடுப்பதற்காக, தனது கையால் பாதத்தில்: இருந்த அழுக்கை தட்டுகிறான்.
சந்திரனின் தொடைக்கு மேல் தனது காலை வைத்தவுடன் அவள் முகம் அவளையறியாமலே சிவக்க அதை மகேஸ்வரி பார்த்தாலும் அதைக் கவனிக்காதது போல கவனிக்கிறாள்.
சந்திரன் அழுக்கைத் தன் கையால் உரஞ்சியதால் இன்னும் அவள் நாணுகிறாள்.இதைக் கவனித்தும் கவனிக்காதது போலவிருந்த சிவகாமி தாய்க்கருகில் போய் தாயின் காதில்’ நீ நல்லாய்த்தான் மாமி வேலை பார்க்கிறாய்’ என்று கிசுகிசுக்க,தாய் எதுவுமே சொல்லாது மௌனமாக இருக்கிறாள்.
முள் குத்திய இடத்தைக் கண்டுபிடித்த சந்திரன், குத்திய இடத்தின் இரண்டு பக்கத்திலும் விரல்களை வைத்து விரல்களால் விரித்து ஊசியால் மெதுவாக முள்ளைத் தட்ட,’மாமி உங்களிட்டை ஒரு விளக்கம் கேட்க வேணும், ஏன் மாமி பொம்பிளைப்பிள்ளையளை அரேபியக் குதிரைகள் மாதிரி என்று சொல்றவை, என்னையும் அரேபியக் குதிரை என்று சி…ல…ர் சொல்லுகினம் என்று சொன்னவள் மாமி’ என்று கடைக்கண்ணால் சிவகாமியைப் பார்த்தபடி சாந்தினி கேட்க,குதிரைக் கதையை பிறகு கதையுங்கோ முதலிலை காலை ஒழுங்காய் ஆட்டாமல் வைச்சிருங்கோ’ என்ற சந்திரனுக்கு,வெடுக்கென்று „நீங்கள் காலை இறுக்கிப் பிடிக்கலாந்தானே’ என்று சொல்கிறாள்.
ஒரு காலை கீழேவிட்டு,ஒரு காலை சந்திரனின் தொடையில் வைத்திருந்த சாந்தினி,கணுக்கால் வரையும் பாவாடையை காலோடு சேர்த்து அமத்திப் பிடிக்க அவளின் கால்சங்கிலி தூங்கியபடி இருக்க,நேர்த்தியான விரல்களும் வெள்ளையுமல்லாது மாநிறமுமல்லாதிருந்த காலும் பாதமும் சந்திரனின் மூளைக்குள் காதலின் ஆரம்பத்தைப் பாய்ச்ச அவன் தடுமாற தட்டுத் தடுமாறி முள்ளை எடுத்துவிடுகிறான்.
அப்பொழுது அர்ச்சனா திடுதிப்பென்று அடுப்படிக்குள் வர,சந்திரனின் தொடைக்கு மேல் சாந்தினி பாதத்தை வைத்திருந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தவள் மகேஸ்வரியையும், சிவகாமியையும், சந்திரனையும் , சாந்தினியையும் மாறி மாறிப் பார்க்கிறாள்.
முள்ளை எடுத்த சந்திரன் தாயிடம் உப்புக்கல் ஒன்றை வாங்கி முள்ளுக்குத்திய இடத்தில் வைத்து தீக்குச்சியைத் தட்டி ; சூடுகாட்ட „ஐயோ’ என்று சொன்னாளே தவிர காலை எடுக்கவே இல்லை.
„இனிச்சரியாகவிடும்’ என்று மெதுவாக அவளின் காலைத் தூக்கி கீழே விட்ட சந்திரன்’ இனிக் குதிரைக் கதையைக் கதையுங்கோ’ என்று எழும்ப மனமில்லாமல் எழும்புகிறான்.
தலையைக் குனிந்து கண்களை நிமிர்த்தி சந்திரனின் கண்களைப் பார்த்தவளின் இதழ்கள் நாணத்தால் சிவந்ததை சந்திரன் கவனிக்க அவனுக்குள்ளும் காதல் விதை ஊன்றப்படுகிறது.
தனக்குள் எதுவுமேயில்லை என்பது போல பாவனை செய்து கொண்டே அவன் எழும்ப’ சுண்ணாகத்தில் முள்ளுக் குத்தினாலும், முள்ளெடுக்க தெல்லிப்பழைக்குத்தான் வருவேன்’ என்று சாந்தினி சொல்ல, படக்கென்று „அதற்காக கையாலை முள்ளை எடுத்து காலிலை குத்திப் போட்டு வருவியள் போல’ என்று அர்ச்சனா சொல்லியவாறு சாந்தினியைக் கோபமாகப் பார்க்கிறாள்.
அதைக் கவனித்த சாந்தினி கவனிக்காதது போல,’மாமி அரேபியக் குதிரை என்று ஏன் சொல்றவை என்று விட்ட இடத்தைத் தொடுகிறாள்…
தொடரும்.
![]()