கவிதைகள்
நெஞ்சிலே இறையின் நாமம் நீள் புவி வாழவைக்கும்!… ( கவிதை ) ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆசைகள் அகன்று போக
ஆணவம் அழிந்து போக
அகமெலாம் இறையின் நாமம்
அரணென நிறைந்து நிற்க
வாய்மையே ஓங்கி நிற்க
வன்முறை மடிந்து போக
தாய்மையே எழுந்து நிற்க
தரணியே சிறந்து நிற்கும் !
வேற்றுமை விலகிப் போக
விரக்தியும் வெருண்டு ஓட
சாற்றிடும் வார்த்தை எல்லாம்
சன்மார்க்கம் நிறைந்து நிற்க
தூற்றிடும் குணமும் மாழ
துட்டரின் மனமும் மாற
ஏற்றியே போற்றி நிற்போம்
இறையது நாமம் நாளும் !
வறுமையும் வரண்டே போக
சிறுமையும் சிதைந்தே போக
பொறுமையும் எழுந்து நிற்க
புகலுவோம் இறையின் நாமம்
நெறியினை நேர்மை ஆக்கு
நீதியை பாதை ஆக்கு
நெஞ்சிலே இறையின் நாமம்
நீள் புவி வாழவைக்கும்
![]()