Featureகட்டுரைகள்

எழுத்தும் வாழ்க்கையும்!… அங்கம் 11 ….   முருகபூபதி.

வடக்கில் மலர்ந்த   “ மல்லிகை  “  மணம்பரப்பிய பிரதேசங்கள் !

மூவினத்தவரையும் இணைத்த மல்லிகை ஜீவா !!

சிங்கள ஆசிரியையின் குரலில் ஒலித்த  “ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி…  “ பாடல் வரிகள் !!!

                                                                   முருகபூபதி

எமது நீர்கொழும்பு வளர்மதி நூலகத்தின் சார்பில்  நாம் வெளியிட்ட வளர்மதி கையெழுத்து சஞ்சிகையில் நானும் தேவா, தருமலிங்கன்,  ரட்ணராஜ், செல்வரத்தினம் ஆகியோரும் கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள் எழுதினோம்.  நீர்கொழும்பூர் முத்துலிங்கம் அவற்றுக்கு ஓவியமும் கேலிச்சித்திரங்களும் வரைந்தார்.  

வளர்மதி நூலகத்தின் பணிகளில் எனது   பங்களிப்பினை அவதானித்து வந்த அவர் , நான் எழுதிய கட்டுரைக்கு ஒரு கேலிச்சித்திரமும் வரைந்திருந்தார்.

வளர்மதி நூலகத்தை ஒரு  மலையாகவும் அதனை சுமந்துகொண்டு பறப்பவராக என்னையும் வரைந்திருந்தார். அநுமார்  சஞ்சீவி மலையை சுமந்துகொண்டு பறந்துவருவதுபோன்று அந்த கேலிச்சித்திரத்தில் என்னை வரைந்திருந்தார்.

அவரிடம் இதுபோன்ற குறும்புத்தனங்கள் அதிகம். கவிதை, நாடகம், சிறுகதை எழுதுவார். ஓவியம் வரைவார்.  அத்துடன் சிலம்பாட்டக்  கலைஞர். எமது ஊரில் பல இளைஞர்களுக்கு சிலம்பம் பயிற்சியும் வழங்கியவர்.  ஊர் ரதோற்சவத்தில்  அவரது குழுவினரின் சிலம்படி  முக்கிய நிகழ்வாகும்.

சில சிங்கள திரைப்படங்களுக்கும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர்.  நாடகங்கள் இயக்கியவர்.  ஒரு தொலைக்காட்சி நாடகத்தையும் இயக்கினார். ரூபவாகினியில் ஒளிபரப்பானது. 

இவரது வீட்டில்தான் மல்லிகை ஜீவா அவர்களை நான் மீண்டும் 1971 ஆம் ஆண்டில் சந்தித்தேன். நீர்கொழும்பூர் முத்துலிங்கமும் அவரது அண்ணன் மாணிக்கமும் வேறும் சிலரும் இணைந்து ஒரு தமிழ்த்திரைப்படமும் தயாரிக்க முன்வந்தனர். ஆனால், அதற்கான ஆரம்ப வேலைகளுடன் அந்த முயற்சியும் நின்றுவிட்டது.

எனது உறவினரான மயில்வாகனன் மாமா, தனது சாந்தி அச்சகத்திலிருந்து 1966 இல் வெளியிடத்தொடங்கிய அண்ணி மாத இதழிலும் முத்துலிங்கம் துணை ஆசிரியராக இணைந்திருந்தார்.  அதில் கௌமாறன் என்ற புனைபெயரில் ஒரு சரித்திர தொடர்கதையும் எழுதினார்.

அண்ணி இதழின் வெளியீட்டுவிழா அச்சமயத்தில் மட்டக்களப்பு எம்.பி. யாகவிருந்த செல்லையா இராசதுரை தலைமையில் நடந்தது. எழுத்தாளர் மு. பஷீர்,  சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் மன்றத்தின் தலைவர்  இலக்கிய ஆர்வலர் த. மணி ஆகியோரும் உரையாற்றினர்.

எழுத்தாளர் இளங்கீரனின் நேர்காணலும் அண்ணி இதழில் வெளியானது. தந்தை செல்வநாயகமும் முதல் இதழுக்கு வாழ்த்துச்செய்தி வழங்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் கலைஞர் மு. கருணாநிதி நடத்திய முத்தாரம் இதழின் சாயலில் அண்ணி இதழை வெளியிடுவதில்தான் மயில்வாகனன் மாமா ஆர்வம் காண்பித்தார்.

அவரும் தி. மு. க. ஆதரவாளர். எனினும் அவருக்கு அச்சக வசதியிருந்தும் அண்ணி இதழை தொடர்ந்து நடத்தமுடியாது போய்விட்டது. 

அச்சகம் இருந்தால் இதழ்கள், பத்திரிகைகளை நடத்திவிடலாம் என நம்பமுடியாது என்பதை நான் எழுத்துலகில் பிரவேசித்த காலப்பகுதியிலேயே தெரிந்துகொண்டேன்.

கொழும்பில் குமரன், மெய்கண்டான், இளம்பிறை,  யாழ்ப்பாணத்தில் ( எழுத்தாளர் வரதரின் ) ஆனந்தா  முதலான அச்சகங்கள் இருந்தும்,   அவற்றின் உரிமையாளர்களினால் அங்கிருந்து வெளியான இதழ்களை தொடர்ந்து நடத்த முடியாது போய்விட்டது.

எனினும் அவர்களுக்கிருந்த அச்சக – அச்சு இயந்திர  வசதிகள் எதுவும் இல்லாத மல்லிகை ஜீவா,  தமது யாழ். கஸ்தூரியார் வீதி ஜோசப் சலூனின் பின்புற அறையில் வெள்ளீய அச்சு எழுத்துக்களையும்  சந்திரசேகரம் என்ற அச்சுக்கோப்பாளரையும்  மாத்திரம் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக மல்லிகை இதழ்களை வெளியிட்டு சாதனை புரிந்தார்.

பின்னாளில் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதிக்கும் கஸ்தூரியார் வீதிக்கும் நடுவில் வரும் ஒரு சிறிய ஒழுங்கையில் ராஜா தியேட்டருக்கு பின்னால் ஒரு கட்டிடத்தின்  ஒரு பகுதியில் மல்லிகை அச்சு எழுத்துக்களை வைத்துக்கொண்டு மல்லிகையை கிரமமாக வெளியிட்டுவந்தார்.

காலப்போக்கில்  கொழும்புக்கு இடம்பெயர்ந்து கணினியின் துணையுடன் மல்லிகையை தொடர்ந்து வெளியிட்டு,  சாதனை புரிந்தார்.  ஐம்பதாவது ஆண்டினை மல்லிகை நெருங்கும் தருணத்தில் அவருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மல்லிகையை நிறுத்தினார்.    

வடக்கில் போர் நெருக்கடி உக்கிரமடைந்திருந்தபோது,  காகிதாதிகளுக்கும் தட்டுப்பாடு வந்தது. அவ்வேளையில்  பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் அப்பியாசக் கொப்பித்தாள்களில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்டார்.

இவ்வாறு அயராமல் உழைத்துவந்த மல்லிகை ஜீவா எனக்கு எப்பொழுதும் ஆதர்சமாகவே விளங்கியவர். 

மல்லிகை வெளியீட்டில் மட்டுமன்றி, வடக்கிற்கு வெளியே மேற்கிலங்கையிலும் தென்னிலங்கையிலும் மலையகத்திலுமிருந்து இலக்கியம் படைத்தவர்களுக்கு மல்லிகையில் களம் கொடுத்து ஊக்குவித்து வளர்த்துவிட்டார்.

1970 இற்குப்பின்னர், இவ்வாறு மல்லிகை ஜீவா வளர்த்துவிட்டவர்கள் பலர். அவர்களில் கொழும்பிலிருந்து மேமன் கவி, திக்குவல்லையிலிருந்து கமால், அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவஹர்ஷா, புத்தளத்திலிருந்து ஜவாத் மரைக்கார், மினுவாங்கொடையிலிருந்து மு. பஷீர்,  நிலாம், நீர்கொழும்பிலிருந்து நான்  மற்றும்  தேவா, தருமலிங்கன்,  செல்வரத்தினம் ,  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்  ஆகியோர்  குறிப்பிடத்தகுந்தவர்கள்.

இவர்களில் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் மறைந்துவிட்டார். எம்முடன்  வளர்மதி நூலகத்தில் இணைந்திருந்த இலக்கிய ஆர்வலர்கள் பவாணிராஜா, சந்திரமோகன்,  ரட்ணராஜ்  ஆகியோரும் மறைந்துவிட்டனர்.

நான் அவுஸ்திரேலியாவுக்கும் தருமலிங்கன் கனடாவுக்கும் செல்வரத்தினம் பிரான்ஸுக்கும், தேவா ஜெர்மனிக்கும் வந்துவிட்டோம்.

ஆனால், எங்கள் மல்லிகை ஜீவா, இந்த பழங்கதைகள் எதனையும் மறந்த நிலையில்,  கொழும்பில் மட்டக்குளிய என்ற புறநகரில் மகன் திலீபன் இல்லத்தில் விட்டத்தை பார்த்துக்கொண்டு மௌனத்தவமியற்றுகிறார் என்பதையும் கனத்த மனதுடன் இங்கே பதிவுசெய்கின்றேன்.

அவரது பிறந்த தினம் வரும்போது கொழும்பிலிருக்கும் இலக்கிய நண்பர்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கூறுவதுடன் தத்தமது முகநூலிலும் பதிவுசெய்துகொள்கிறார்கள்.  என்னால், இவ்வாறு பத்தி எழுத்துக்களில்தான் எனது இலக்கிய நண்பர்களை நினைவுபடுத்த முடிகிறது.

இந்த பின்னணிகளுடன்தான், நான் எழுத்தலகில் பிரவேசித்த    காலப்பகுதியில் எனக்கு அறிமுகமான தமிழ் அபிமானி  பண்டிதர் வண. ரத்னவன்ஸ தேரோ அவர்கள் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது.

காவியுடைக்குள் ஒரு காவியம் என்ற தலைப்பில் இவர் பற்றி ஏற்கனவே எனது சொல்ல மறந்த கதைகள் தொடரிலும் – நூலிலும் எழுதியிருக்கின்றேன்.

சமகாலத்தில் இலங்கையில் சில பெளத்த பிக்குகள் இன நல்லிணக்கத்திற்கு விரோதமாக சண்டித்தனங்கள் காண்பித்து வரும் சூழலில்,  ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த பௌத்த பிக்குகள் பற்றியும்  நினைவூட்டவேண்டியிருக்கிறது.

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம்.

முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ.

மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும். அங்கே ஒரு பௌத்த விகாரை. அதன் பிரதம குரு (விஹாராதிபதி) வணக்கத்துக்குரிய பண்டிதர் ரத்னவன்ஸ தேரோ.

அவரைப்பார்க்கச்செல்பவர்கள் பெரும்பாலும் அந்தக்கிராமத்திலும் அதனைச்சுற்றியுள்ள ஊர்களையும் சேர்ந்த சிங்கள கிராமவாசிகள்தான். அவர்கள்தான் அந்த பௌத்த பிக்குவுக்கு தினமும் தானம் (மதிய உணவு) முறைவைத்து கொண்டுவந்து கொடுப்பவர்கள்.

தினமும் பகலில் மாத்திரம் ஒரு வேளை உணவுண்டு பௌத்த தர்மத்தை மக்களுக்கு போதித்துவந்த அவரைப்பார்க்க அடிக்கடி தமிழ் எழுத்தாளர்களும் சென்றுவந்திருக்கிறார்கள் எனச்சொன்னால் இதனை வாசிக்கும் வாசகர்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். ஆனால் உண்மை.

தனக்கு நாடும் வேண்டாம் அரசுரிமையும் வேண்டாம் அரசியலும் வேண்டாம் இல்லறமும் வேண்டாம் என்று வனம்சென்று தவமிருந்து பரிபூரண நிர்வாணம் எய்தி உலகம் பூராவும் அன்பு மார்க்கத்தை போதித்த கௌதம புத்தரின் சிந்தனைகளை பரப்பி பௌத்த மதத்தை இலங்கையில் சேமமாக பரப்பும் ஆயிரக்கணக்கான பிக்குகளில் ஒருவர்தான் இந்தத் தொடரில் நான் குறிப்பிடும் ரத்னவன்ஸ தேரோ.

பௌத்த பிக்குகள் மத்தியில் இவரை ஆயிரத்தில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம். காரணம் அரசியலுக்குள் பிரவேசிக்காத இலக்கியவாதி.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சிங்களத்தேசியத்திற்காகவும் தனது அரசியல் தேவைகளுக்காகவும் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்குள் இருக்கவேண்டிய பிக்குகளை அரசியலுக்குள் கொண்டுவந்தார். பின்னர் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுடப்பட்டு இறந்தார் என்பது பழையசெய்தி. அவரது மறைவு வாரிசு அரசியலுக்கும் வித்திட்டது என்பதும் கடந்துபோன செய்தி. .

இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஹெல உருமய என்ற கட்சியின் பிரதிநிதிகளாக பிக்குகள் காவி உடையுடன் பிரவேசித்தார்கள்.  பொது பலசேனா செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  தேசியப்பட்டியலில் வரப்போகிறார்.   அம்பிட்டிய சுமண ரத்னதேரர் சட்டத்தையே மதிக்காமல் அட்டகாசங்கள் புரிந்து ஊடகங்களில் பிரசித்தம் பெற்றுள்ளார்.  இலங்கையின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பலமான சக்தியாகவும்  பௌத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.

இப்பொழுது இலங்கையில் பல பௌத்த பிக்குகள் தமிழ் படிக்கிறார்கள், தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல நாட்டின் பிரதமர்  பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்திருந்தபோதிலும் அவரும் பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்பேசும் மக்கள் முன்னிலையில் தமிழ் பேசுகிறார்.  இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர்தான் இங்கு நான் குறிப்பிடும் வண.ரத்னவன்ஸ தேரோ.

1970 களிலேயே தமிழை மாத்திரமல்ல,  நவீன தமிழ் இலக்கியங்களையும் படித்து தேர்ந்தவர் அவர்.

வளர்மதி நூலகத்தையடுத்து, நீர்கொழும்பில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பையும் 1972 இல் தொடக்கியிருந்தேன். இந்த அமைப்புக்கு ரத்னவன்ஸ தேரோவை அறிமுகப்படுத்தியவர் மினுவாங்கொடையைச்சேர்ந்த எழுத்தாளர் நிலாம்.  இவர் பின்னாளில் வீரகேசரி, தினகரன், தினக்குரல் நாளேடுகளிலும் பணியாற்றியதுடன்,  ஏரிக்கரை (Lake House ) பத்திரிகையில் தமிழ்ப்பிரிவுக்கும் பொறுப்பாகவிருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் முஸ்லிம் தலைவர்களுடனும் நெருக்கமாக உறவாடியவர்.  

எங்களிடமிருந்த நூலகத்திலிருந்து தமிழ் நூல்களையும் இதழ்களையும் வாங்கிச்சென்று படித்து தமது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்ட  ரத்னவன்ஸ தேரோ, தமது கொரஸ கிராமத்திலும் அருகிலிருந்த வியாங்கொடை, மினுவாங்கொடை முதலான நகரங்களிலும் தமிழ் கற்பிக்கும் வகுப்புகளை உருவாக்கினார். பல சிங்கள ஆசிரியர்களும் பௌத்த பிக்குகளும் மிகுந்த ஆர்வமுடன் தமிழ் கற்க முன்வந்தார்கள். வாராந்தம் வெள்ளிக்கிழமை மாலையானதும் நான் நீர்கொழும்பிலிருந்து அந்த கொரஸ கிராமத்துக்கு சென்றுவிடுவேன். வெள்ளி, சனி அங்கே விஹாரையில் தங்கியிருந்து தேரோவுடன் பயணித்து அங்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவந்தேன்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவையும் அவருக்கு அறிமுகப்படுத்தியதும் மல்லிகைக்கு  சந்தா செலுத்தி தருவித்து படித்தார். அப்பொழுது மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1976 ஆம் ஆண்டு மல்லிகையின் முகப்பில் தேரோவின் படம் வெளியானது. நான் எழுதிய  அவருடனான நேர்காணல் இந்த இதழில் பிரசுரமானது.

எங்கள் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் பங்கேற்ற , இலங்கை வானொலியில் நடந்த சங்கநாதம் நிகழ்ச்சியில் தேரோ அவர்கள் கலந்துகொண்டு இனிய தமிழில் சிறந்த பேட்டியை வழங்கினார். பேட்டி கண்டவர்:- அன்று வானொலியில் குறிப்பிட்ட சங்கநாதம் நிகழ்ச்சியை தொகுத்து தயாரித்து வழங்கிய பிரபல வானொலி ஊடகக்கலைஞர் வி.என்.மதியழகன். (இவர் தற்போது கனடாவில்)

அன்றைய தினத்தை மறக்கவே முடியாது.  ரத்னவன்ஸ தேரோவை கண்டதும்  நண்பர் மதியழகன் பரபரப்பானார்.

பொதுவாக பௌத்த பிக்குகள் இலங்கை வானொலி கலையகத்திற்கு வந்தால், அவர்கள் அமரும் ஆசனத்தில் வெள்ளைத்துணியை விரிப்பார்கள். அவ்வாறு செய்தால்தான் அவர்கள் அதில் அமருவார்கள்.  மதியழகன் வெள்ளைத்துணியை எடுத்துவருவதற்கு முயன்றபேது,   “  மதி… நான் ஒரு இலக்கியவாதியாகத்தான் இங்கே வந்துள்ளேன். அந்த சம்பிராதாயங்கள் எனக்கு வேண்டாம் “  என்று மறுத்தார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை நடத்தியபொழுது முதல் நாள் காலையில் தொடக்கவுரையையும் தமிழில் நிகழ்த்தினார்.

பின்னர் தமது கொரஸ்ஸ கிராமத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்களை வரவழைத்து ஒரு சிறப்பான கருத்தரங்கையே ஊர்மக்களைக்கொண்டு நடத்தினார்.

தேசிய ஒருமைப்பாடு தொடர்பான குறிப்பிட்ட கருத்தரங்கு பற்றிய செய்தியை அன்று வீரகேசரிப்பத்திரிகை தலைப்புச்செய்தியாக வெளியிட்டதுடன் மறுநாள் அதுகுறித்து ஆசிரியத்தலையங்கமும் எழுதியது. தினகரன் வாரமஞ்சரி விரிவான செய்தியை வெளியிட்டது.

அக்காலப்பகுதியில் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் இந்த கொரஸ கருத்தரங்கு பரபரப்பாகப்பேசப்பட்டதற்குக் காரணம், அதில் தேரோ அவர்கள் தமிழில் நிகழ்த்திய கருத்தாழம் நிரம்பிய உரைதான். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்று வாசகர்கள் கேட்கலாம்.

“ ஒரு இனத்தையோ மொழியையோ அடிமைப்படுத்தி வேறு இனமோ மொழியோ சுபீட்சம் பெற முடியாது. தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு ஜனநாயகத்தீர்வு காணப்படல்வேண்டும். அப்பொழுதுதான் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும்.”

“ ஒரு தமிழ்ப்பெண்ணை ஒரு சிங்கள ஆடவர் திருமணம் முடித்தால் அல்லது ஒரு சிங்களவரை தமிழ்ப்பெண் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடும் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச்சொல்ல மாட்டேன். அவ்விதம் திருமணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறக்காது, பிள்ளைதான் பிறக்கும்.”

அவரது நீண்ட உரை தமிழில்தான் நிகழ்த்தப்பட்டது.

கொழும்பிலிருந்து வருகை தந்த தமிழ் எழுத்தாளர்கள் திகைத்துப்போனார்கள். அந்தக்கருத்தரங்கில் எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, சோமகாந்தன், மு. பஷீர், மு.கனகராஜன், உரும்பராய் செல்வம், டொக்டர் வாமதேவன், சுப்பிரமணியன், பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் எம்.கே.இராகுலன்  (இவர் பின்னாளில்  இலங்கை  ஜனாதிபதிகளின்  மொழிபெயர்ப்பாளரானார் ) ஆகியோர் உரையாற்றினர். ரத்னவன்ஸ தேரோ, இக்கருத்தரங்கின் பின்னர், செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். அதனை மொழிபெயர்க்க முன்னர் அவர் மொழிபெயர்க்க முயன்றது தமிழக எழுத்தாளர் உமாசந்திரனின் முழுநிலவு நாவல்

உமாசந்திரனின் நாவல் மொழிபெயர்ப்பை திடீரென கைவிட்டு, செங்கை ஆழியானின் வாடைக்காற்றை அவர் எடுத்துக்கொண்டதற்கு சொன்ன காரணம், “ ஆழியான் இலங்கையில் இருக்கிறார். மொழிபெயர்ப்பில் ஏதும் ஐயப்பாடுகள் நேர்ந்தாலும் தொடர்பு கொள்ள முடியும். ஆனால்,  இந்தியாவிலிருக்கும் உமாசந்திரனை நான் எங்கே போய்த்தேடுவது…?  “

வாடைக்காற்றை சிங்களத்தில் மொழிபெயர்க்கும்போதும் அவருக்கு சிக்கல்கள் தோன்றின.
அக்கதையில் காதலும் இருக்கிறது. சில காட்சிகளை கிரக்கம் ஏற்படுத்தும் விதமாகவும் செங்கை ஆழியான் சித்திரித்திருந்தார். வாடைக்காற்று திரைப்படமாக்கப்பட்டபொழுதும் அந்தக்காட்சிகளை இயக்குநரால் தத்ரூபமாக காண்பிக்க முடியவில்லை.

ஒரு நாள் என்னிடம் தமக்குள்ள சிக்கலையும் சொன்னர்,                      “ பூபதி, நான் ஒரு துறவி. இந்தக்காதல் காட்சிகளை எப்படி மொழிபெயர்ப்பது. பிறகு பெரிய விவகாரமாகி விடுமே….”

“ உங்களால் முடிந்தவாறு செய்யுங்கள்” என்றேன்.

அவர் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு என்ற சிறிய கவிதை நூலையும் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவர் வாராந்த விடுமுறை நாட்களில் கம்பகா மாவட்டத்தில் நாலந்தா கல்லூரியில் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பிக்கவும் என்னை அழைத்துச்செல்வார்.

இலக்கிய மொழிபெயர்ப்பில் அவருக்கு வந்த சங்கடங்கள் போன்று எனக்கும் அந்த வகுப்புகளில் சங்கடங்கள் நேர்ந்துள்ளன.

ஒரு சிங்கள இளம் ஆசிரியைக்கு தமிழ் கற்பிக்க நேர்ந்தது. அவர் ஒரு தமிழ்ப்பாடலை வகுப்பிற்கு எடுத்துவந்து காண்பித்து சொல்லித்தரச்சொன்னார்.

அந்தப்பாடல் சிறுவர்களுக்குரியது.

 “ ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய், எனக்கு முத்தம் தந்திடுவாய்  “ 

இதனை அவருக்கு ராகத்துடன் சொல்லிக்கொடுத்தேன். அவரும் பாடினார். அர்த்தம் கேட்டார். சொல்லிக்கொடுக்கும்போது,  இறுதி வரிகளை  “  மட்ட கிஸ் தெண்ட… “  என வெள்ளாந்தியாக சொல்லிவிட்டேன்.  அந்த ஆசிரியை திடுக்கிட்டு சற்று பின்வாங்கிவிட்டார்.

பின்னர் மன்னிப்பு கேட்டு சமாளித்தேன். ரத்னவன்ஸ தேரோவிடத்திலும் இது பற்றி சொன்னதும் அவர் அட்டகாசமாக சிரித்தார்.

எனது அப்பாவுக்கும் சிங்களம் அரைகுறைதான். இத்தனைக்கும் அவர் ஒரு கம்பனியின் வெளியூர் விற்பனைப்பிரதிநிதி,  அவர், சிங்கள கடை முதலாளிகளிடம் பேசிய அரைகுறை சிங்களத்தை என்னால் இங்கே எழுத்தில் பதிவுசெய்யவே முடியாது.

அம்மாவிடம் நான் எதனையும் மறைப்பதில்லை. அம்மாவிடம் வந்து  நான் சென்று சிங்கள ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பிக்கும்போது நடக்கும் சுவாரசியங்களை சொல்வது வழக்கம்.

அம்மாவுக்கு இரண்டு பயம் வந்துவிட்டது.  ஒன்று:   நான் பௌத் பிக்குமாருடன் அலைகின்றேன். அதனால், நானும் துறவறம் பூண்டு பிக்குவாகிவிடுவேன் என்பது.

மற்றது:  சிங்கள ஆசிரியைகளுக்கும் தமிழ் கற்பிக்கின்றேன்.  யாராவது ஒரு சிங்கள ஆசிரியை மீது மோகம் கொண்டு   தள்ளிக்கொண்டு வந்துவிடுவேன்  என்ற பயம்.  அப்போது எனது வயதும் அப்படி இருந்ததுதான் அம்மாவின் பயங்களுக்கு காரணம். 

இந்தப்பயம்பற்றி ஒருநாள் ரத்னவன்ஸ தேரோவிடம் வேடிக்கையாகச் சொன்னேன்.

ஒரு தைப்பொங்கல் தினத்தன்று எங்கள் வீட்டுக்கு வந்தவர் எங்களுடன் சேர்ந்து பொங்கலும் கொண்டாடி பெற்றோர் சகோதரங்களின் அர்த்தமற்ற பயத்தையும் போக்கினார்.

பொங்கல்  வடையுடன்  கத்தரிக்காய் குழம்பு சகிதம்  மதிய உணவும் ரஸித்து சுவைத்துண்ட தேரோவுக்கு அதன் பின்னர் எங்கள் வீட்டிலிருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப்பிடித்தமான கறிவகைகளுடன் உணவு கொண்டு சென்று கொடுத்திருக்கின்றேன்.


1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இனவாத வன்செயல்கள் தலைதூக்கின. தமிழர்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.  கொல்லப்பட்டனர். அகதிகளாயினர். இலங்கையில் ஒருமைப்பாட்டை உருவாக்க தமிழ் இலக்கியவாதிகளுடனும் முற்போக்கு சக்திகளுடனும் கைகோர்த்து வந்த ரத்னவன்ஸ தேரோ மிகவும் மனம் கலங்கிய நாட்கள் அவை.

நீர்கொழும்பில் நாம் பாதுகாப்பாக இருக்கின்றோமா என்று தேடித்தேடி வந்து பார்த்ததுடன் மினுவாங்கொடை என்ற சிங்களப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களான மு.பஷீர், நிலாம் ஆகியோருடன் அடிக்கடி தொடர்புகொண்டு தமிழ் எழுத்தாளர்களின் குடும்பங்களின் நிலைமைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

செங்கை ஆழியானின் வாடைக்காற்று சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியை பார்வையிடுவதற்காக எடுத்துச்சென்ற ஒரு சிங்கள அன்பரையும் பின்னர் அவரால் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு நெருக்கடிகள் உக்கிரமடைந்தன.

அந்தப்பிரதி தொலைந்த சோகத்திலேயே அவர் நோயாளியுமாகிவிட்டார்.  இனிய சுபாவம் கொண்ட துறவியை இனிப்பே கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத்தொடங்கியது. அவர் தீராத நீரிழிவு நோயாளியாக மாறினார்.

நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துவிட்டேன். தொடர்ந்தும் கடிதத்தொடர்பைப் பேணிக்கொண்டிருந்தேன்.

அவரது ஒரு கடிதத்தில், தாம் பார்வையை இழந்துவிட்டதாகவும் தன்னிடம் தமிழ் கற்ற அவ்வூர் பெண்ணான பத்மசீலி குணதிலக்க என்பவரிடம் தான் சொல்லிச்சொல்லித்தான் இதனை எழுதி அனுப்புகின்றேன்- என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் எனக்கு எழுதிய கடிதமும், நான் 2001 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்ட ‘கடிதங்கள்’ நூலில் 80 கடிதங்களுடன் இடம்பெற்றுள்ளது.  அவர் மறைந்தபோது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.  எனது இலக்கிய வாழ்வில் மறக்கவே முடியாதவர்தான்  ( அமரர் ) ரத்னவன்ஸ தேரோ. அவர் பற்றி நான் எழுதிய ஆக்கம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

செங்கை ஆழியானும் நானும்  எமது சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்பு நூல்களை அவருக்கே சமர்ப்பணம் செய்துள்ளோம்.

எனது மதக்க செவனெலி (SHADOWS OF MEMORIES) நூல் அவர் வாழ்ந்த மினுவாங்கொடை உடுகம்பொல கொரஸ கிராமத்தின் ஶ்ரீசுதர்மாணந்த விகாரையில்தான் சிங்கள மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. 

அன்று அவருடைய பெரிய உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தபோது என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். 

அவர் காவியுடைக்குள் ஒரு காவியம்தான். 

( தொடரும் ) 

letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.