கவிதைகள்
இசைக்கோலம் ஈந்துவிட்டு எங்குசென்றாய் இசையரசா!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பண்ணும் பரதமும் கண்ணீரை விடுகிறது
ஏழுசுரங்களும் ஏக்கமுற்று அலைகிறது
ஏன்பிரிந்தாய் பாலுவென எல்லாமே அழுகிறது
ஆயிரம் நிலவாக அடியெடுத்தாய் பாலுவே
அனைத்து மொழிகளிலும் இசைத்தாயே பலபாடல்
கேட்டார்கள் எல்லாம் கிறுகிறுக்க வைத்துவிட்டு
பாட்டுக்குள் புகுந்தாயே பாலுநீ போனதேனோ
சுந்தரத் தெலுங்கிலே சங்கரா பரணத்தை
சுவையாக கொடுத்தெங்கள் மனமதிலே அமர்ந்திட்டாய்
நந்தமிழாம் தமிழதனை நன்றாக உச்சரித்து
நாடுபோற்றும் இசைதந்த நாயகனே போனதெங்கே
இசைபயிலா நீயோ இசைக்குயிலாய் வலம்வந்தாய்
இசையுலகில் அசையாத இடம்வகித்தாய் பாலுவே
இசைப்பிரியர் பலருக்கும் இசையருவி நீயானாய்
இசைகொடுத்து மகிழ்வித்தாய் எங்கையா சென்றுவிட்டாய்
மயக்குமிசை நீகொடுத்தாய் மந்திரமும் நீயிசைத்தாய்
உச்சரிப்பு அத்தனைக்கும் உயிர்கொடுத்து நின்றாயே
கவியுள்ளே நீபுகுந்து காட்டிநின்றாய் இசைக்கோலம்
இசைக்கோலம் ஈந்துவிட்டு எங்குசென்றாய் இசையரசா
கொரனா விழிப்புணர்வை கொடுத்தாயே இசையாலே
கொரனா கொடுநோயைக் கொண்டாயே உடலுக்குள்
இசைகொடுத்த உன்னையே இரக்கமின்று காவுகொண்ட
எமனான கொரனாவை எல்லோரும் திட்டுகிறோம்
எமையெழுச்சி கொள்வதற்கு இசைகொடுத்தாய் பாலுவையா 
இசைகொடுத்த உன்னையே இழந்துவிட்டோம் பாலுவையா
இசையுலகம் உள்ளவரை என்றுமே நீயிருப்பாய்
என்றாலும் உன்னிழப்பால் எமைமறந்து அழுகின்றோம்
![]()