கவிதைகள்

மருளகல மால்மருகா திருவுளத்தைக் காட்டிவிடு!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நீலமயி லேறிவரும் நெஞ்சிலுறை வேல்முருகா

ஆலகால விடமுண்ட அரனாரின் திருக்குமரா

தாளலய மோடுன்னை தமிழாலே பாடுதற்கு

நீயருள வேண்டுமென நித்தமுமே வேண்டுகிறேன்  ! 

 

சோலையுறை குயிலெல்லாம் சொல்லுதையா உன்நாமம்

நீளநெடுங் கடலலைகள் நினைக்குதையா உன்பெயரை

ஓடிவரும் நதியனைத்தும் உனையெண்ணி ஓடுதையா

உன்பெயரை சுமந்தபடி ஒவ்வொன்றும் அசையுதையா  !

 

ஆடிவரும் தென்றலிலும் அருட்குமரா தெரிகின்றாய்

அசைந்தாடும் புற்களிலும் அழகுமுகம் காணுகிறேன்

கூடுகட்டும் குருவியிலும் குமராநீ வருகின்றாய்

குன்றனைத்தும் குடியிருக்கும் வீடாக்கிக் கொண்டனையே !

 

தங்கமாய் வைரமாய் குவிக்கின்றார் சன்னிதியில்

சஞ்சலமும் கூடவே இணைக்கின்றார் யாவருமே

சலனமில்லா பெரும்பொருளே சண்முகா நீயவரின்

சலனநிறை மனமகல சற்குருவாய் அமைந்தருளு  !

 

பேராசை பெருநோயாய் பிடித்திருக்கு பலபேர்க்கு

தீராத காதலுடன் தினமலைந்து சேர்க்கின்றார்

மாறான பலவற்றை மனமேற்றி நிற்கின்றார்

மருளகல மால்மருகா திருவுளத்தைக் காட்டிவிடு  !

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *