மருளகல மால்மருகா திருவுளத்தைக் காட்டிவிடு!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நீலமயி லேறிவரும் நெஞ்சிலுறை வேல்முருகா
ஆலகால விடமுண்ட அரனாரின் திருக்குமரா
தாளலய மோடுன்னை தமிழாலே பாடுதற்கு
நீயருள வேண்டுமென நித்தமுமே வேண்டுகிறேன் ! ![]()
சோலையுறை குயிலெல்லாம் சொல்லுதையா உன்நாமம்
நீளநெடுங் கடலலைகள் நினைக்குதையா உன்பெயரை
ஓடிவரும் நதியனைத்தும் உனையெண்ணி ஓடுதையா
உன்பெயரை சுமந்தபடி ஒவ்வொன்றும் அசையுதையா !
ஆடிவரும் தென்றலிலும் அருட்குமரா தெரிகின்றாய்
அசைந்தாடும் புற்களிலும் அழகுமுகம் காணுகிறேன்
கூடுகட்டும் குருவியிலும் குமராநீ வருகின்றாய்
குன்றனைத்தும் குடியிருக்கும் வீடாக்கிக் கொண்டனையே !
தங்கமாய் வைரமாய் குவிக்கின்றார் சன்னிதியில்
சஞ்சலமும் கூடவே இணைக்கின்றார் யாவருமே
சலனமில்லா பெரும்பொருளே சண்முகா நீயவரின்
சலனநிறை மனமகல சற்குருவாய் அமைந்தருளு !
பேராசை பெருநோயாய் பிடித்திருக்கு பலபேர்க்கு
தீராத காதலுடன் தினமலைந்து சேர்க்கின்றார்
மாறான பலவற்றை மனமேற்றி நிற்கின்றார்
மருளகல மால்மருகா திருவுளத்தைக் காட்டிவிடு !
![]()