யாருமிலை என்பார்க்கு நல்மருந்தும் ஆனார்!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அல்பேணியா ஈன்றெடுத்த அன்னை அவராவார்
அனைவர்க்கும் தொண்டுசெய அகிலமதில் வந்தார்
சொல்லியவர் பணியாற்ற வந்து விடவில்லை
தூயமனத் தோடவரும் தொண்டாற்றி நின்றார் ![]()
எள்ளளவும் இரக்கமின்றி எச்சில் உமிழ்ந்தார்கள்
இன்முறுவல் கொண்டுமவர் ஏந்தியதைப் பெற்றார்
கள்ளமிலா உள்ளம் அவர் கொண்டிருந்ததாலே
காறி உமிழ்ந்தாரே கைநிறையக் கொடுத்தார்
தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்தார்
தனக்குவமை இல்லாமல் தானுவமை ஆனார்
மனக்குறையை போக்குதற்கு மாமருந்துமானார்
தனித்தவரும் தொண்டுசெயும் தற்துணிவு பெற்றார்
கைகொண்டு மெய்கொண்டு கருணைமழை பொழிந்தார்
கலியுகத்தில் கண்ணனென கைகொடுத்து நின்றார்
ஊரிலுள்ள சேரியெலாம் உவப்புடனே சென்று
யாருமிலை என்பார்க்கு நல்மருந்தும் ஆனார்
சாதிமதம் பாராமல் சமத்துவமாய் நின்றார்
சாதனைகள் செய்தாலும் தலைகனக்கா நின்றார்
போதிமரம் ஆகிநின்று போதனைகள் செய்தார்
நாதியற்ற மக்களுடன் நட்புரிமை கொண்டார்
வெள்ளுடையில் நீலக்கோடு விரும்பியவர் ஏற்றார்
அள்ளவள்ளக் குறையாமல் அருந்தொண்டு புரிந்தார்
உள்ளமெலாம் உவகையொடு உழைத்துமவர் நின்றார்
உலகிடையே அன்னையாய் என்றுமவர் உள்ளார் !
![]()