பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?… ( சிறுகதை ) … ஏலையா க.முருகதாசன்

கிளிநொச்சியில் கொழும்பு- யாழ்ப்பாண வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் முன்றல் வீதியோரத்தில் குடும்பப் பெண்களும்,சிறுவர்கள் சிறுமிகள் எனக் கொழுத்தும் வெயிலில் உட்கார்ந்திருந்தனர்.எல்லோர் கைகளிலும் சுலோகங்கள் இருந்தன.
சுலோகங்கள் அனைத்திலம் இறுதிப் போரில் சரணடைந்து திரும்பி வராமல் போனோரின் பெயர்கள் இருந்தன.சுலோக அட்டைகளில் காணாமல் போனோரின் படங்களும் இருந்தன.
எனது கணவர் எங்கே?.எனது அப்பா எங்கே? எனது அண்ணா எங்கே? எனது தம்பி எங்கே? என்ற சுலோகங்களை தூக்கிப் பிடிப்பதும் கைவலிக்க கீழே வைப்பதுமாக அந்தக் கொடிய வெயிலில் தமது உறவுகள் மீண்டும் வருவார்களா,என்ற எதிர்பார்ப்புடன் முகத்தில் வியர்வை வழிய வழிய துடைத்தவாறே ஏங்கி நின்றனர் காணாமல் போனோரின் குடும்ப உறவுகள்.
முள்ளிவாய்க்கால் என்பது சிங்கள அரசுக்கும் இராணுவத்திற்கும் கொக்கரித்து மகிழ்ந்த வெற்றிக் கொணடாட்ட தளம். ஆனால் அப்பாவித் தமிழ்ப்; பொதுமக்களுக்கு அது சாவுமணியடிக்கப்பட்ட சூனியப் பிரதேசம்.
வடக்கிலிருந்து மட்டுமல்ல,கிழக்கு மாகாணத்திலுமிருந்து வந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொணடவர்கள் ஏராளம்.தனது கணவன் ; இன்றைக்கு திரும்பி வந்துவிடுவார் என்று இன்றை எதிர்பார்த்து நாளைக்கு வந்துவிடுவார் என்ற பெருநம்பிக்கையுடன் இருந்து நாளை இன்றாகி இன்னுமொரு நாளை நாளை என்பது பல இன்றாகி வருடங்கள் பதினொன்றாகிவிட்டன கமலாவுக்கு.
இதே நிலைதான் அண்ணன் வருவான் தம்பி வருவான் என்று காத்திருந்தவர்களுக்கும் எதிர்பார்ப்பு.வீதியால் சென்று கொண்டிருப்போரில் பலர் போகிற போக்கில் பார்த்துவிட்டுச செல்வோரும், இன்னும் சிலரோ தாமதித்து சிலமணி நேரம் உட்கார்ந்துவிட்டு அனுதாபம் தெரிவித்துவிட்டு எழுந்து சொல்வோரகவும் இருந்தனர்.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பதில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலவாதிகளுக்கு அக்கறை இல்லை,போர் முடிந்து பதினொரு வருடங்களாகிவிட்டன இராணுவத்தினரிடம் சரணடைந்த எமது உறவுகள் இன்னும் விடுதலையாகவில்லையா, அவர்கள் உயிரோடுதானிருக்கிறார்களா,அரசாங்கத்துடன் இவர்கள் கதைக்கவே மாட்டார்களா என்ற கோபாவேசத்துடன் ஊடகங்களுககு காணாமல் போனோரின் குடும்பங்கள் தெரிவிப்பதும்,அதைப் பார்த்த அரசியல்வாதிகள் ஒரு நாளைக் குறிப்பிட்டு வாருங்கள் போராடுவோம் என காணாமல் போனோரின் உறவினர்கனை அழைத்து வீதயோரத்தில் உட்கார வைப்பதும், கண்காணிக்க வரும் காவல்துறையினரின்
முன்னிலையில் ஊடகங்களுக்கு ‘இலங்கை அரசைக் கேட்கிறோம் போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த இந்த அப்பாவித் தாய்மாரின், அக்காமாரின், தங்கைமாரின் உறவுகள் எங்கே?.அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா?.இந்த அப்பாவிகளின் கண்ணீர் இன்னொரு தமிழீழ போரை அரசு எதிர்நோக்க வேண்டிவரும் என்று லிங்கசாமி வீர வசனம் பேசிவிட அவர்களின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரப்;பரிக்க வீதியோரத்தில் வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் உறவுகள் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்று முகத்தில் வலிந்த வியர்வையை சீலைத்தலைப்பால் துடைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தப் பதினொரு வருடங்களில் ஆண்டுக்கு ஐந்துமுறையாவது வௌ;வேறு சனநடமாட்டம் உள்ள பிரதான இடங்களில் காணாமல் போனோரைத் தேடித் தாருங்கள் என கண்ணீர்மல்க கோரிக்கைகள் அவரவர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அரசாங்க அதிபர்கள் ஊடாகவும் ஆளுநர் ஊடாகவும் வைக்கப்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காணாமல் போனோரின் நிலை என்ன எனக் கேள்வி கேட்ட போதும் சரியான பதிலைப் அரசாங்கத்திடமிருந்து இதுவரை பெறமுடியவில்லை.எந்தப் பதிலுமே சொல்லாமல் மௌனம் காக்கின்றது அரசு.
தனது கனவணைத் தேடித்தருவார்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் மாங்குளத்திலிருந்து காணாமல் போனோருக்கான போராட்ட அழைப்பு வரும் போதெல்லாம் வந்து போய்க் கொண்டிருந்தாள் கமலா.
இராணுவத்தினரிடம் தனது கணவன் சரணடைந்த போது கமலாவின் மகள் சிவானிக்கு நான்கு வயது..ஒவ்வொரு முறையும் தாயுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்வாள்.தாய் வரும் போது மகளுக்கு பசி எடுக்குமே என்பதற்காக ஏதாவது சாப்பாடு கொண்டுவருவாள்.கொண்ட வந்த சாப்பாட்:டை போராட்டத்தில் கலந்து கொள்ளும் சிவானியின் வயதொத்த பிளளைகளுக்கும் பகிர்ந்து கொடுப்பாள்.
போராட்டத்தை ஆதரிக்கவென வருவோர்,போராட்த்தில் ஈடுபடுவோருக்கு தேநீர் சாப்பாடு என வாங்கிக் கொடுப்பார்கள்.சிவானி வீட்டிலிருக்கும் போதும் போராட்ட நாட்களிலும் தாயிடம் ‘ அம்மா எப்ப வருவார்,ஆமிக்காரர் அப்பாவை விட்டுவிடுவினந்தானே’ என்று கேட்டுக் கொண்டேயிருப்பாள்.
சிலவேளைகளில் ‘அம்மா அப்பாவைச் சாக்கொண்றிருப்பினமோ’ என்று அவள் அழுதபடி கேட்டவுடனேயே மகளின் வாயைப் பொத்தியபடி ‘அப்படியெல்லாம் சொல்லாதை அப்பா உயிருடந்தான் இருக்கிறார், வந்துவிடுவார்’என்று சொன்ன போதிலும் கமலாவின் மனதில் ‘ஒரு வேளை மகள் சொல்வது போல நடந்திருக்குமோ’ என்ற கலக்கம்; ஏற்படும்.அவள் தனது கலக்கத்தை மகளுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பாள்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இன்றாவது வரமாட்டாரா என கமலா வீதியைப் பார்த்து ஏங்குவாள்.தூரத்தே தெரியும் ஆண்களின் உருவங்களில் தனது கணவனைப் போல இருக்கும் உருவத்தையும் கணவனின் நடை போன்று இருப்பவரைக் கண்டதும் கணவர்தான் வருகிறார் என ஒரு நொடிப் பொழுதில் அவள் முகம் பிரகாசாகும்.
அந்த உருவம் கமலாவின் வீட்டைக் கடந்து போகையில் அது வேறொருவராக இருக்கையில் அவள் மனமும் உடலும் சோர்ந்து போய்விடும்.
கணவனில்லாது பதினொரு வருடமாக தோட்டங்களில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும் கமலாவுக்கு அவளின் இளமையும் அழகும் ஆபத்தானகவே மாறியதும் உண்டு.எப்படி இவள் ஆண் துணையில்லாமல் பதினொரு வருடங்களாக இருக்கிறாள் என்று வக்கிர உணர்வுள்ள ஆண்களும் அவர்கள் சொல்வதை ‘அதுதானே’என ஆமோதிக்கும் பெண்களும் தன்னுடைய ஒழுக்கம் பற்றி கதைப்பது அவள் காதில் விழாமலில்லை.
ஒரு நாள் தோட்டத்தில் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருக்கும் போது,தோட்டக்காரன் செல்லத்தம்பி, கமலாவுக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டு ‘அங்கை கனக்க புல்லுக்கிடக்குது இங்கை கிடக்குது என்று காட்டிக் கொண்டேயிருந்தான். அவளின் மகள் சிவானிக்கு பத்து வயது அவள் அங்கிருந்த மரநிழலில் அவள் தனது பள்ளிக்கூடப் புத்தக்கத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.செல்லத்தம்பிக்கு கமலா மிது ஒரு கண்.அவன் சொல்லச் சொல்ல கமலாவும் களையைப் பொருப்படுத்தாது அங்கு மாறி இங்கு மாறி புல்லைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.
செல்லத்தம்:பியின் வியர்வை அவளுக்கு வீசுமளவுக்கு அவளை அவன் நெருங்கி நின்றது மட்டுமல்ல சாரத்தை வேண்டுமென்றே முழங்காலுக்க மேல் தொடை தெரியுமளவிற்கு உயர்த்திக் கட்டியிருந்தான்.அவனின் நோக்கத்தை கமலா புரிந்து கொண்டாலும் அந்த வேலையை அவளால் விடமுடியவில்லை.தோட்ட வேலையான அந்தக் கூலி வேலையைத் தவிர அவளுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது.
நெருங்கி நின்ற செல்லத்தம்பியினால் அவள் அருவருப்பினால் நெளிந்தாள்.செல்லத்தம்பி ‘மெய்யே கமலா உன்ரை புருசன் வருவாரோ அல்லது அவரைச் சாக்காட்டிப் போட்டாங்களோ, நீ ஏதாவது அறிந்தாயா’ என்று அவன் கேட்டு முடிக்கவில்லை’அப்படிச் சொல்லாதீங்ள் ஐயா என்ரை புருசன் வருவார்’ என்று வேகமாச சொல்லியவள் கண்கலங்கினாள்.அவள் கண்கலங்கியதைக் கண்ட செல்லத்தம்பி அவளின் கண்ணீரைத் துடைக்கக் கையைக் கொண்டு போகவே வேகமாக விலகி நின்றாள்.
ஆனால் செல்லத்தம்பி தனது தவறான நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் அவளைச் சபலப்படுத்த நினைத்து’ இல்லை நான் ஏன் கேக்கிறனெண்டால் உன்ரை உடம்பு எத்தனை நாளைக்குத் ‘தாக்காட்டும் ‘என்றதற்காக கேட்டனான்’ என்றவுடன் கமலாவுக்கு அவன் உள் நோக்கம் தெட்டத் தெளிவாகத் தெரியவே,முறைத்து ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ஐயா நான் வீட்டை போறன், இனி உங்கடை தோட்டத்திற்கு
வேலைக்கு வரமாட்டன் என்று சிவானியையும் அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.
சொல்லாலும், பார்வையாலும் தனது உடலை ஊடறுத்தப் பார்த்துவிட்டானே என்று கூசினால்.சிவானியைக் கூட்டிக் கொண்டு வரம்புகளில் வேகமாக நடந்து வீட்டுக்கு வந்து கொணடிருக்கும் போது கலங்கிய கண்களை தனது மகளுக்குக் காட்டக்கூடாதே என்பதற்காக சீலைத்தலைப்பால் வியர்வையைத் துடைப்பது போல முகம் முழுவதையும் துடைத்து கண்களையும் துடைத்துக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்த அவள் கோபத்தினாலும் கவலையாலும் குமுறினாள்.அந்தக் குமுறலைக்கூட அவளால் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை.தகப்பன் இன்று வருவார் நாளை வருவார் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருக்கும் தனது பிஞ்சு மகளுக்கு தனது அழுகைக்கு காரணத்தை அவளிடம் சொல்ல முடியாது என்பதால் தனக்குள்ளேயே குமுறினால்.
மகளை வீட்டிலே இருக்கச் சொல்லிவிட்டு, தேநீர்க்கடையும் சாப்பாட்டுக் கடையும் வைத்திருக்கும் இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் மார்க்கண்டு வீட்டுக்குள் போனவள், மார்க்கண்டுவின் மனைவி வள்ளிக்கொடியிடம் செல்லத்தம்பி தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததையும்’தாக்குப்பிடிக்குமா’என்று கேட்டதையும் சொல்லி ஒரு தாயிடம் மகள் தனது கவலைச் சொல்வது போல சொல்லி விக்கி விக்கி அழுதாள்.
தனது நெஞ்சொடு கமலாவை அணைத்த வள்ளிக்கொடி அவளின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே ‘அழாதை அவன் அப்படிக் கேட்ட போது,புல்லுப் பிடுங்கிற சத்தகத்தாலை அந்த அறுவானைக் குத்தாதையன்’ என்று வள்ளிக்கொடி சொல்ல,’ என்ன செய்யிறது அக்கா என்ரை பிள்ளையாலை பேசாமல் இருந்திட்டன்.ஊரிலை என்னைப் பற்றி தேவையில்லாமல் அரசல் புரசலாக கதைக்கிறது என்ரை காதிலும் விழுந்து கொண்டுதானிருக்குது அக்கா, எல்லாம் எங்கடை தலைவிதி, அவர் வந்திட்டாரென்றால் நிம்மதியாகிவிடுவன்,சீலை முள்ளிலை பட்டாலும் சரி முள் சீலையிலை பட்டாலும் சீலைக்குத்தான் பாதிப்பு என்:று சொன்னவள், இனி தோட்ட வேலைக்குப் போகமாட்டன் என்ன செய்யிறதெண்டு தெரியேலை என்று சொல்யலியபடி எழுந்தவளை, கையைப் பிடித்து இருத்தி ‘இனி நீ எங்கையும் வேலைக்குப் போக வேண்டாம்,எங்கடை சாப்பாட்டுக் கடையிலை சமைக்கிற வேலையிருக்கு,நாளையிலையிருந்து அந்த வேலைக்கு வா’ என்றவுடன்’ நன்றி அக்கா’ என்று சொல்லியவள் கொஞ்ச நேரம் வள்ளிக்கொடியுடன் இருந்துவிட்டுப் போய்விடுகிறாள்.
வீட்டுக்குப் போனவள் ‘தனது அழகும் இளமையும் வாளிப்பான உடலுந்தானே வக்கிரபுத்தியுள்ள ஆண்களுக்குப் பிரச்சினையாகவிருக்கின்றது,எனது அழகும் இளமையும் வாளிப்பான உடலும் என்னிடம் இல்லாமல் போனால் தான் பாதுகாக்கப்படுவேன் என்று முடிவெடுத்தாள்.
பொதுவாக ஒவ்வொரு ஆணும் தான் எப்பொழுதும் எந்த வயதிலும் கம்பீராமாகவும்
இளமையுடனும் இருக்கவே விரும்புவான்.பெண்களும் இளமையையும் அழகையும் எந்த வயதிலும் தக்க வைக்கவே விரும்புவார்கள்.அது இயல்பானது.தனது மகளுக்காக தான் உயிரோடு வாழ வேண்டுமென்பதற்காக நேரந்த தவறாது முடிந்தளவு சத்தான உணவுகளையே சாப்பிட்டு வந்த அவள் தான் உயிரோடு மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால்.ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டவள்,இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடத் தொடங்கினாள் நேரந்தவறியும் சாப்பிட்டாள்.
சாப்பாட்டுக் கடையில் சமையல்காரியாக வேலை செய்ததால்,நெருப்பு வெக்கையும் அவளின் இளமைக்கு எதிரியாகி கமலாவின் ஆசையை நிறைவேற்றியது.அவள் உடல் மெல்ல மெல்ல தனது ஆரோக்கியத்தை இழக்க அவளின் அழகும், இளமையும் ,வாளிப்பான உடலும் அவளை விட்டுப் போகத் தொடங்கின.
முப்பது வயதான கமலா உடலால் ஐம்பது வயதுப் பெண்ணாக மாறினாள்.தலைமயிர்களும் ஆங்காங்கே நரைக்கத் தொடங்கின.தனது உடலையும் அங்கொன்றும் இங்கொங்கொன்றுமாக நரைத்த தலைமயிர்களைப் பார்த்து அவள் மகிழ்ந்தாள்.
சமையல்காரியாக வேலை செய்து கொண்டிருந்த நாட்களிலும் அவள் காணாமல் போனோரின் போராட்டத்தில் கலந்து கொண்டேயிருந்தாள்.சிவானிக்குப் பதிமூன்று வயது இருக்கும் போது, கிளிநொச்சி பஸ்தரிப்பு நிலையத்துக்கருகில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.கமலாவும் சிவானியும் கலந்து கொண்டிருந்தனர்
அப்பொழுது சிவானி ‘அம்மா வயிற்றுக்குள்ளை என்னவோ செய்யுது, கக்கூசுக்கு வரும் போலையிருக்குது அம்மா வயிறும் வலிக்கிற மாதிரி இருக்குது அம்மா’ என்றவுடன் கமலா அவளை அந்த இடத்திலிருநது அழைத்துக் கொண்டு பஸ்தரிப்பு நியைத்துக்கருகில் இருந்த தேநீர்க்கடைக்கு அழைத்துப் போய்,கடை முதலாளியிடம் அனுமதி பெற்று அங்கிருந்த மலசலகூடத்திறகுள் சிவானியை அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தவளை ‘அம்மா’ என்று சிவானி தாயை வேதனையுடன் அழைக்க,கதவைத் திறந்து உள்ளே போன கமலா சிவானியை எழுந்து நிற்கச் சொல்லி பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள்.சிவானியின் உள்ளாடையில் இரத்தக் கசிவைக் கண்டதும் ‘கடவுளே நான் இப்ப என்ன செய்வேன்’ எனத் தடுமாறினாள்.
சிவானி பூப்பெய்திவிட்டாள் என்பதை அறிந்த கமலா செய்வதறியாது, திகைத்த போது மலசலகூடத்தை நோக்கி வந்த ஒரு பெண்ணிடம் தனது நிலையைச் சொல்ல,அவள் வேகமாகப் போய் கடை முதலாளியிடம் சொல்ல, அவர் ஓடாத குறையாக ஓடிவந்து ‘ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் நாங்கள் இருக்கிறம் ‘ என்று பரிவோடு சொல்லிவிட்டு’என்ரை தங்கச்சி கடையிலைதான் நிற்கிறாள்,அவளை அனுப்பிறன் என்று அவர் சொல்வதற்கிடையில்,போராட்டத்தில் ஈடுபட வந்த ஒரு பிள்ளை பூப்பெய்திவிட்டது என்பதை அறிந்த கடை முதலாளியின் தங்கை கமலாவிடம் வந்து ஆறுதல்படுத்தினாள்.சிவானிக்கு அளவான புதிய சட்டையை வாங்கி வந்து அவளுக்குப் போட்டு தாயையும் மகளையும் தனது வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போன கடை முதலாளியின் தங்கை,தங்களிடம் ஒரு சிறிய வீடு பாவிக்காமல் இருக்கின்றது
நீங்கள் இரண்டு பேரும் அங்கேயே இருக்கலாம் ‘என்கிறாள்.
‘நான் மாங்குளத்தில் ஒரு கடையில் சமையல்காரியாக வேலை செய்தனான்,அதுதான் யோசிக்கிறன்…..’ என்று கமலா சொல்ல.’ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், அண்ணையின்ரை கடையிலை அதே வேலையைச் செய்யலாம்,பிறகு அதை யோசிப்பம் இப்ப பிள்ளையின்ரை விசயத்தை முடிப்பம் என்று’கதைத்தவாறே வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனவள்,கணவருக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் நடந்த விசயத்தைச சொல்ல எல்லோருமே கமலாவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
கமலாவும் சிவானியும் கிளிநொச்சியில் இருப்பது உறுதியாகவிட பாவிக்காமல் இருந்த, அவர்களின் வீட்டிலிருந்து ஐந்து வீடு தள்ளியிருந்த அந்தச் சிறிய வீட்டை துப்பரவாக்கும் வேலையை எல்லாரும் செய்யத் தொடங்கினார்கள்.
காணாமல் போன தனது கணவனைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கான உதவி என்றவுடன் ஏதோ ஒரு உணர்வு அவ்வூர் இளைஞர்களைக் கட்டிப் போட,ஒருவர் மாறி ஒருவர் கேள்விப்பட்டு பலர் அந்த வீட்டையும் வளவையும் துப்பரவாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.
ஒரே நாளிலேயே துப்பரவாக்கும் பணி முடிந்துவிட, அடுத்த நாள் வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பணியும் முடிந்தது. வீட்டுக்கு தேவையான பொருட்களை சில குடும்பங்களே வாங்கிக்கொடுத்தனர்.இரண்டு நாட்கள் பொறுத்து கடை முதலாளி அவரின் மனைவி,கடை முதலாளியின் தங்கை,அவளின் கணவன் என எல்லோரும் கமலாவின் வீட்டுக்கு வந்து , ‘பிள்ளைக்குச் சின்னதாய் ஒரு சடங்கைச் செய்வம் என்று யோசிக்கிறம், தங்கச்சி உன்ரை விருப்பம்’ என்ன என்று கடை முதலாளி கேட்டவுடன்,நெகிழ்ந்து போன கமலா அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாது தடுமாறி நிற்க’செலவுக்கு யோசிக்க வேண்டாம்,நாங்களிருக்கிறோம்’ என்று கடை முதலாளியின் தங்கையின் கணவன் சொல்ல மௌனமாக சம்மதம் எனத் தலையை ஆட்டினாள் கமலா.
ஒரு பெண்ணை காம நோக்குடன் பார்க்கும் மனிதர்களுக்கு மத்தியில் தங்கையாக, அக்காவாக, அம்மாவாக பார்க்கின்ற உயரிய மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக கிளிநொச்சியில் உதவி புரிய வந்தவர்களை நினைத்துப் பார்த்தாள்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது இதுதானோ என நினைத்தாள்.
சில நாட்கள் கழிந்தன பூப்புனித நீராட்டு விழாவுக்கு முதல் நாள் இளைஞர்கள் பந்தல் போடுவதற்கு,பந்தல் கால்கள் நடுவதற்காக பாரையாலும் அலவாங்காலும் கிண்டிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு இளைஞன் கிண்டிக் கொண்டிருக்கையில் மண்ணோடு சேர்ந்து எழும்புத்துண்டுகள் வரவே’டேய் இஞ்சை வாருங்கோடா ‘ என்று அவன் பலமாக
குழறி கூப்பிட பந்தல் கால்களுக்காக கிடங்கு கிண்டிக் கொண்டிருந்தவர்கள் மட்டுமல்ல அங்கு நின்ற எல்லோருமே அந்த இடத்தில் கூடிவிட்டனர்.
எலும்புத் துண்டுகளைப் பார்த்து எல்லோரும் திகைத்து நிற்க கமலாவும் சிவானியும் அந்த இடத்திற்கு வந்துவிடுகின்றனர்.சில இளைஞர்கள் ஓடிச் சென்று மண்வெட்டிகளை எடுத்து வந்து அந்த இடத்து மண்ணை வெட்டி எடுக்க எடுக்க எலும்புகளும் மண்டை ஓடும் உக்கிய நிலையில் மண்ணோடு மண்ணாக வரத் தொடங்கின.
மண்ணை மண்வெட்டியால் அள்ளிப் போட அந்த மண்ணோடு சேர்ந்து ஒரு கைமணிக்கூடு கறள்பிடித்த நிலையில் கமலாவின காலடியில் வந்து விழ திகைப்புடனும் பயத்துடன் எடுத்துப் பார்த்த கமலா’இது…’ என்று பயம் கலந்த முகத்துடன் மணிக்கூட்டை திருப்பிப் பார்க்கிறாள்.பின்புற மணிக்கூட்டைப் பார்த்ததும் கமலா ஓவென்று அலறுகிறாள். அதில் ‘கமலா’என்று எழுதப்பட்ட பெயர் தெரிகிறது.
தனது கணவனை காதலனாக அவள் காதலித்த போது அவனின் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த மணிக்கூடு அது.அவளின் கணவனான வசந்தபாலன் அந்த மணிக்கூட்டுக்குப் பின்பக்கத்தில் தனது காதலியின் பெயரை வெட்டி வைத்திருந்தான்.இராணுவத்தினரிடம் சரணடைந்த போதும் வசந்தபாலன் கமலா கொடுத்த மணிக்கூட்டையே கட்டியிருந்தான்
கமலா ஓவென்று அழறியபடி மண்ணோடு கலந்து உக்கிப் போயிருந்த எழும்புத் துண்டுகளை எடுத்து மார்போடு அனைத்து இப்படியா உங்களைப் பார்க்கு வேணும்’ என்று குளறிக் குளறி அழுதாள்.’அம்மா….என சிவானி அழ ‘இதுதானம்மா உன்னுடைய அப்பா’ என இரு கைகளாலும் எலும்புகள் கலந்த மண்ணை அள்ளி அவள் கைகளில் கொடுத்தாள்.
அப்பா உயிரோடு வருவார் என்று நம்பியிருந்தவளின் கைகளில் அவளின் அப்பா மண்கலந்த உக்கிய எலும்புத் துண்டுகளாகி நின்றார்.செய்தியறிந்து ஊர் கூடி நின்றது அந்த இடத்தில்.காவல்துறை வாகனங்கள் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன.கண்ணீர்களும் கோபாக்கினியுமாக அந்த இடம் மாறியிருந்தது.
சிவானிக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்?
![]()