கதைகள்

கல்…புல்…காகம்…..44…(நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.

விமலா அவ்வாறு சொல்லவே எல்லோரும் சிரித்தனர். உனக்கு இவர்தான் மாப்பிள்ளை என்று
தெரிந்து விட்டதால் இப்போது இந்த மாப்பிள்ளை உனக்கு அவ்வளவு எளிதாகப் போய்விட்டாரா?
என்று அவளைக் செல்லமாக கடிந்து கொண்ட அம்மா பலகாரங்களை செய்யப் போகிறவர்கள்
நாங்கள் நீ ஏன் வீணாக அலுத்துக் கொள்கிறாய் என்றாள். உடனே விமலா எப்படியோ போங்க
என்று சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

வந்திருந்த உறவினர் அனைவரும் பலகாரங்கள் செய்வதில் ஈடுபட்டனர். வீட்டில் அதிகம்பேர்
இருந்ததால் சீக்கிரமே செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தனர். அதன்பின் வீட்டை
அழகுபடுத்தி ஒழுங்கு படுத்தினர். நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்வது போலிருந்தது
விமலாவுக்கு. அவளது அறையிலிருந்து வெளிவருவதும் வாசலைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
அப்படி அவள் வாசலைப் பார்த்தபோது அங்கே கார் வந்து நிற்பது தெரியவே வீட்டினுள் திரும்பி,

“அம்மா, அவங்க வந்துட்டாங்க போலிருக்கு. வாசலில் கார் வந்து நிக்குது” என்றாள்.

“சரி, சரி நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம். நீ போய் உள்ள இரு. அத்தையை வந்து உன்னை
அலங்காரம் செய்வாங்க”

“என்னம்மா சொல்ற. அவர் ஒன்னும் புதியவரல்ல”

“மேல மேல பேசாதே. சீக்கிரம் உள்ளே போ” என்று அதட்டவும் விமலா உள்ளே சென்றாள்.

விமலா அவளது அறைக்குள் செல்லவும் காரிலிருந்து பெண்வீட்டார் காரிலிருந்து இறங்கி வீடு
நோக்கி நடந்தனர். அவர்கள் அவ்வாறு வரவும் விமலாவின் தாயார், அத்தை என்று உறவினர்
அனைவரும் எதிரே சென்று அவர்களை வரவேற்றனர். வீட்டினுள் வந்து பெண்வீட்டார் அமர்ந்ததும்
ஒருவருக்கொருவர் என எல்லோரும் நலன் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது அத்தை மெதுவாக
எழுந்து விமலாவின் அறைக்குள் சென்றாள். அதற்கு முன்பாகவே ஓரளவு அலங்காரத்தை
முடித்திருந்த விமலாவுக்கு உதவி செய்து கொண்டிருக்கையில்,

“அண்ணி, அண்ணி” என்று விமலாவின் தாய் அழைக்கவே,

“இதோ வந்து விட்டேன் அண்ணி” என்று சொன்னவள் விமலாவைப் பார்த்து,

“நீ உடனே சீக்கிரம் புடவையை கட்டு” கொஞ்ச நேரத்தில் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டாள்.

அத்தை சென்றதும் அத்தையிடம் என்ன விமலா தயாராகிவிட்டாளா என்று விமலாவின் தாயார்
கேட்டதும் இதோ இன்னும் கொஞ்ச நேரம்தான் ரெடியாகிடுவாள் என்றாள். மாப்பிள்ளை காதலித்தவர்
என்றாலும் இப்படி பெண்பார்க்கும் முறை அவருக்கு புதிது என்பதால் ஏதோ ஒரு டென்சனில்
இருப்பதை போல் இருந்தார். அவரைப் பார்த்த விமலாவின் உறவினர் மாப்பிள்ளையைப் பார்த்து
என்ன மாப்பிள்ளை பெண்ணைப் பார்க்க அவசரமா என்று கேட்டதும் அந்த இடத்தில் சற்று நேரம்
சிரிப்பலை ஆக்கிரமித்தது.  அப்போது விமலாவின் அம்மா,

“அண்ணி, நீங்க போய் விமலாவிடம் பலகாரங்களை கொடுத்து அனுப்புங்க” என்றாள்.

“சரி, அண்ணி இதோ அனுப்புறன்” என்று அங்கிருந்து அகன்றாள்.

சிறிது நேரத்தில் அங்கே விமலா கையில் பலகாரங்கள் நிறைந்த தட்டுடன் அங்கே வந்தாள். அவளை
இதற்கு முன் பார்த்ததற்கும் இப்போது அவள் செய்திருந்த ஒப்பணையுடன் அவளைப் பார்ப்பதற்கும்
எவ்வளவோ வித்தியாசம் இருந்தது. உலகப்பேரழகியோ என்று வியக்கும்படி இருந்ததால் அவளை
வைத்தகண் வாங்காமல் விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டேயியிருந்தான். ஆதலால் அவள்
அவனிடம் வெகுநேரமாய் பலகாரத் தட்டை நீட்டிக்கொண்டிருந்தும் அவளையே பார்த்துக்
கொண்டிருக்கையில்,

“மாப்பிள்ளை, விமலாவைப் பார்த்தது போதும். முதலில் அவளிடமிருந்து பலகாரங்களைப் பெற்றுக்
கொள்ளுங்கள். அவள் உங்களுக்குத்தான் எங்கும் ஓடிப்போக மாட்டாள்” என்றாள் உறவினரான
பாட்டி ஒருத்தி.

அப்போது சுதாரித்துக் கொண்ட மாப்பிள்ளை ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தபடி பலகாரத்தை அவளிடம்
இருந்து பெற்றுக்கொள்ள விமலா மற்ற அனைவருக்கும் பலகாரம் கொடுத்துவிட்டு உள்ளேசென்றவள்
சிறிது நேரத்தில் எல்லோருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *