கதைகள்

காதலர் விமானம்!… 26 …. ( நாவல் )…. ஏலையா க.முருகதாசன்.

சாந்தினிக்கு அரேபியக் குதிரை என்று தான் பட்டப்பெயர் வைத்ததை,தனது தமையனே அவளுக்குச் சொல்லியதாக சாவகச்சேரி கல்யாண வீட்டிலை வைத்துச் சாந்தினி சொல்லியதை நினைத்து நினைத்து கோபத்தை அதிகமாக்கிய சிவகாமி,காரில் வீடு நோக்கி வந்த போது வீட்டுக்குப் போய் தமையனிடம் கேட்டுவிட வேண்டுமென்ற துடிப்பில் இருந்தாள்.

எந்தப் பெண்பிள்ளைகளுடனும் அதிகம் கதைக்காதவனாக இருந்தவன் தங்களுக்குத் தெரியாமல் யாழ்ப்பாணம் முழுவதும் சாந்தினியுடன் சுற்றித் திரிந்ததுடன் அவளுடன் படம் பார்த்தும் கோப்பிக் கடைகளில் கோப்பி குடித்து அவளின் அழகில் மயங்கிப் போய் தங்கச்சியைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற பாசமே இல்லாமல் தான் சாந்தினிக்கு வைத்த பட்டப்பெயரை சொல்லிவிட்டானே என்ற கோபத்தில் காருக்குள் சந்திரன் தன்னை மறந்து வாயை திறந்து நித்திரை கொண்ட வேளையிலும்கூட அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள் சிவகாமி.

அந்தக் கடும் கோபத்தில் இறங்கிய சிவகாமி அர்ச்சனா அவளின் வீட்டு விறாந்தையில் நிற்பதைக் கண்டதும் அவளைக் கேற்றடிக்கு அழைத்து சாந்தினிக்கு தான் வைத்த பட்டப் பெயரை யாரோ சொல்லிப் போட்டினம் என்று சொல்லிவிட்டு வீட்டுப்படிகளில் இரண்டு இரண்டாக எட்டிக் காலடி வைத்து தமையனின் கதவைப் பலமாகத் தட்டினாள்.

அவள் தட்டியதில் அவளின் கோபம் தெரிந்தது.சந்திரன் திறக்கத் தாமதித்ததும்’டேய் அண்ணை வெளியே வாடா’ என்றவுடன் படாரென்று கதவைத் திறந்த சந்திரன் ‘இப்ப எதுக்கு சத்தம் போடுறாய்’ என்றவுடன், ‘நல்ல பிள்ளை மாதிரி நடிக்காதே அவள் அரேபியக் குதிiரையிடம், நான் அரேபியக் குதிரை என்று பெயர் வைத்ததை நீ சொன்னனியா’ என்றவுடன், ‘நான் எந்த அரேபியக் குதிரையையும் பார்க்கவில்லையே, என்னெண்டு குதிரையுடன் கதைக்க முடியும் ‘ என்றவுடன் ‘ஓகோ கோ…பெரிய பகிடி விடுகிறன் என்று நினைப்போ அதுதான் உன்ரை கைலேஞ்சிக்காரி சாந்தினிக்கு சொன்னியா இல்லையா’ ‘இல்லவே இல்லை…நான் அவளை எங்கையுமே சந்திக்கவுமில்லை ஒன்றுமே சொல்லவுமில்லை…இப்ப என்னை நித்திரை கொள்ள விடு நாளைக்கு கதைக்கலாம் போ’ என்றவுடன்’ இப்ப பதில் சொல்லு சொன்னியா இல்லையா’

‘உனக்கென்னடி விசரே இல்லை இல்லை என்கிறன் நீ அதை நம்பாமல் சொல் சொல் என்கிறாய்’ என்று சத்தமாக சந்திரன் சொல்ல, பிள்ளைகள் இரண்டு பேரும் சத்தமாக சண்டை பிடிப்பதைக் கவனித்த தாயும் தகப்பனும் அவர்களுக்கு கிட்ட வந்து ‘இரவு ஒன்பது மணியாகுது ஏன் சத்தம் போட்டு கொண்டு நிற்கிறியள்’ என்று தகப்பன் கேட்க’ அவனைக் கேளுங்கள் உங்கடை செல்லப்பிள்ளையைக் கேளுங்கள் என்ன செய்தவன் என்று’ சொன்னதும்;, சிவகாமி தமையனை அவன் இவன் என்று கோபத்திலும்.

பாசத்திலும் கதைப்பதும் டேய் என்று கூப்பிடுவதும்,அதைப் போல சந்திரனும் வாடி போடி என்று தங்கச்சியாரை பாசத்திலும் கோபத்திலும் கதைப்பது அப்பப்ப நடைபெறுவதால் தகப்பன் அதைப் பொருட்படுத்தவில்லை.ஆனால் இப்படி இருவரும் வாக்குவாதப்பட என்ன காரணம் என்பதுதான் அவருக்குப் புரியவில்லை.

‘பிள்ளை என்ன பிரச்சினை ‘ சொல் என்கிறார் தகப்பன்.

‘அப்பா அந்தச் சாந்தினிக்கு அரேபியக் குதிரை என்று வாயில வந்தது என்று ஒரு பட்டப் பெயரை வைச்சன், அந்தப் பட்டப்பெயர் அம்மாவுக்கும் தெரியும் இவன் அண்ணைக்கும் தெரியும், இன்றைக்கு கல்யாண வீட்டிலை வைச்சு சாந்தினி சொன்னவள் அந்தப் பட்டப்பெயரை அண்ணைதான் சொன்னவன் என்று’

‘எப்ப கொண்ணை சொன்னவனாம்’

‘அப்பா அம்மா இரண்டு பேரும் ஒரு உண்மையை இண்றைக்கு அறிய வேணும், அண்ணை கண்டபடி பொம்பிளைப் பிள்ளையளோடை கதைக்காதவன் என்றுதான் நினைச்சுக் கொண்டிருக்கிறியள்,இவன் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிற பூனை.உங்களுக்குத் தெரியாமல் சாந்தினியோடை படம் பார்த்திருக்கிறான், யாழ்ப்பாணம் முழுக்கச் சுத்தித் திரிந்து கோப்பிக் கடையிலையெல்லாம் கோப்பி குடிச்சிருக்கான்,அப்பத்தான் அவளுக்குச் சொல்லியிருக்கிறான்’ என்றவுடன் அடக்கமுடியாத கோபத்தில் கண்கலங்கியபடியே சந்திரன் தங்கச்சியாருக்கு அடிக்க கையை ஓங்க, அதைத் தடுத்த தகப்பன்,மகளுக்கும் சாந்தினிக்கும் இடையில் ஏதோ நடந்து கொண்டிருக்கு என்று ஊகித்துக் கொண்டவர்’ சரி…… சரி விடு பிள்ளை இது பெரிய பிரச்சினையே…..சின்னப் பிள்ளையள் மாதிரி இரண்டு பேரும் ஒரு சதத்துக்கும் பிரயோசனம் இல்லாத விசயத்துக்கு சண்டை பிடிக்கிறியள்.நாங்களும் உங்கடை வயதிலை எதுக்கெடுத்தாலும் வெடிவலவன் கொட்டை மாதிரி படபடத்தனாங்கள்தான்….இரண்டு பேரும் போய்ப் படுங்கோ’ என்று தகப்பன் சொல்ல’ சாந்தினியின்ரை கதையை நம்பி இவள் சண்டை பிடிக்கிறாள், அப்பா அம்மா உங்களிலை சத்தியம் பண்ணிச் சொல்கிறன் சாந்தினியை எங்கடை மாச்சிலை கண்டதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அவளைக் கண்டனான்.சாந்தினியோடை ஒரு வார்த்தைகூட கதைக்கவில்லை.நான் தங்கச்சியோடை இல்லாட்டி பிரண்ட்ஸ்சோடைதான் படம் பார்க்கப் போறனான்’என்று சொல்லி நெகிழ்ந்தான்.

சாந்தினி வேண்டுமென்றே இவளைச் சீண்ட வேணுமெண்டுகூடச் சொல்லியிருக்கலாம்.ஆனால் இவள் வைச்ச பட்டப்பெயர் அவளுக்கு எப்படித் தெரியுமெண்டுதான் தெரியவில்லை’ என்ற சந்திரன் ‘நான் அதைக் கண்டு பிடிக்கிறன்’ என்றவன், சுவரோடு சாய்ந்து நின்ற தங்கச்சியாரின் தலையில் செல்லமாக நோகாதவாறு குட்டிவிட்டு,தலையை தடவிவிட அவள் விறுக்கென்று தலையை திருப்பிக் கொண்டு அறைக்குள் போய்விடுகிறாள்.

தகப்பனும் தாயும் தமது அறைக்குள் போய்விடுகிறார்கள்.ஆனால் சிவகாமி ‘அப்பா நான் என்னு சொல்லியும் சமாளிக்கிறாரே என்ன காரணமாகவிருக்கும்’ என்று

யோசித்தவள் பெற்றோரின் கதவைத் தட்டி ‘நான் தேத்தண்ணி போடப் போறன் உங்கள் இரண்டு பேருக்கும் வேணுமா என்று கேட்க’ எங்களுக்கு வேண்டாம்,கொண்ணையைக் கேட்டுப் பார்’ என்று சொல்ல’ அவனுக்கு விருப்பமென்டால் அவன் போட்டுக் குடிக்கட்டும் ‘ என்றவள் அடுப்படிக்குள் போய் தேத்தண்ணி போடத் தொடங்கினாள்.

தகப்பனும் தாயும் நித்திரை கொள்ளாமல் அன்று நடந்த கல்யாண வீட்டு விசயங்களைப் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.கல்யாண வீட்டிலை சிவகாமியும் சாந்தினியும் முறைத்தக் கொண்டதைப் பற்றியும் கதைத்தார்கள்.

அப்பொழுது சந்திரனின் கதவைத் தட்டும் கேட்க,சந்திரன் கதவைத் திறக்க ‘இந்தா பிடி தேத்தண்ணி ‘அவள் தமையனுக்குத் தேத்தண்ணியைக் கொடுக்க,அவனுக்கு வநத சிரிப்பை அடக்கியபடி வாங்குகிறான்.

கதவைத்தட்டி தேத்தண்ணி குடுத்த அசிகையை உணர்ந்த தாயும் தகப்பனும் சிரித்துக் கொள்கிறார்கள்.’இவள் யாரைப் போலையப்பா’ என்று கணவன் கேட்க, ‘வைச்சு உரிச்சு மாமியாரைப் போல’ என்று எந்த மாமியார்’ என்று கணவன் கேட்க, தங்கம்மா பாதி மற்ற ஆள் பாதி என்கிறாள் மகேஸ்வரி.

மற்ற ஆள் என்ற மைத்துனியின் பெயரை மகேஸ்வரி உச்சரிக்க விரும்பியதே இல்லை.

சனிக்கிழமையும் வந்தது.கல்யாண வீட்டில் வைத்து சாந்தினியையும் குருவையையும் சாகித்தியனையும் சாப்பிட வரச் சொன்னதால் மகேஸ்வரி நேரத்தோடு நித்திரை விட்டெழுந்தவிட்டாள்.நேரம் ஒன்பது மணியிருககும்’மாமி ‘என்று பாசத்தோடு அழைத்தபடி அழகான மஞ்சள் வண்ணத்தில் அரைத்தாவணியும குங்கும வண்ணத்தில் பாவாடையும் தலையில் சிவப்பு ரோஜாவைச் செருகியபடி அழகிய கோலத்தில் கம்பீரமாக வீட்டு விறாந்தையில் காலடி எடுத்து வைக்க,அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்த மகேஸ்வரிக்குப் பூரிப்பில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

சாந்தினிக்குப் பின்னால் வந்த அவளின் தமையன்களில் ஒருவனான குரு ‘கோபிக்காதையுங்கோ அன்ரி நேரத்தோடு வந்ததற்கு,விடியப்புறம் ஐஞ்சு மணிக்கு எழும்பி நி;ண்டு கொண்டு , எழும்புங்கோ எழும்புங்கோ எண்டு கரைச்சல் பண்ணிக் கொண்டேயிருந்தாள், இப்ப அவை எழும்பியிருக்க மாட்டினம் என்று அப்பா அம்மா சொல்லியும் தங்கச்சி கேட்கவே இல்லை…’ அவன் சொல்லி முடிக்க முந்தி ‘அது ஒரு பிரச்சினையே இல்லை எங்களுக்குச் சரியான சநதோசம் நேரத்தோட வந்ததற்கு ‘ என்று மகேஸ்வரி சொல்ல ‘ இல்லை அன்ரி…’என்று குரு ஏதோ சொல்ல வர , இடைமறித்த சாந்தி ‘அது என்ன இங்கிலீசிலை அன்ரி, மாமி என்று தமிழில் சொல் பெரியண்ணா ‘ என்று சாந்தினி சொல்ல ‘சரி மாமி நாங்கள் பிறகு வாறம், எங்களுக்கு ஒரு அலுவல் இருக்கு’ எனறவனை ‘தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போங்கள்’ எனறு சொல்லியவாறு அடுப்படியை நோக்கிப் போகிறாள் சாந்தினி தேத்தண்ணி போடுவதற்காக.

யாரோ ஒருவரின் வீட்டின் அடுப்படிக்குள் தங்களுடைய தங்கச்சியார் உரிமையோடு போவதை ஒருவரையொருவர், இவள் ஏன் இப்படி நடக்கிறாள் என அர்த்தத்துடன் பார்க்கிறாள்.

விறாந்தையில் குரல் அரவம் கேட்டு நித்திரையிலிருந்த சந்திரன்; கதவைத் திறக்கிறான்;.விறாந்தையில் குருவும் சாகித்தியனும் இருப்பதைக் கண்ட ‘கலோ எப்ப வந்தனீங்கள்’ என்று சம்பிராதயமாகக் கேட்டுவிட்டு,இருங்கள் குளித்துவிட்டு வருகிறன்’ என்றவன் ‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு அடுப்படியை எட்டிப் பார்த்தவன் அங்கே சாந்தினி அழகு தேவதையாக தாய்க்குப் பக்கத்தில் நிற்பதைப் பார்த்து அவள் அழகில் நிலைகுலைந்து போகிறான்.

இரவு உடுப்பான நைற்றியுடன் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த சிவகாமி குருவும்,சாகித்தியனும் விறாந்தையில் இருப்பதைக் கண்டதும் ,அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு,கண்களால் சாந்தினியைத் தேடியவள் கதவை மூடிக் கொண்டு; வழமையாக வீட்டிலை போடும் சட்டைகளில் ஒன்றைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தவள்,அடுப்படிக்குள்ளிருந்து தட்டில் தேத்தண்ணிக் கோப்பைகளை வைத்தபடி வந்தவளைக் கண்டு இவள் என்ன செய்கிறாள் இங்கை என்று நினைக்க ம்’ என்று சந்திரனுக்கு நீட்ட,அவன் எடுக்க,சிவகாமிக்கு தட்டை நீட்டியபடி அர்த்தமான புன்னகையுடன் கண்களால் தேத்தண்ணியை எடுக்கும்படி சொன்னவள் யாருக்கும் கேளாதவாறு ‘சாந்தினியின் சபதம் ஆரம்பித்துவிட்டது ‘ என்று சாந்தினி சொல்ல,வாய்க்கு கிட்ட தேத்தண்ணிக் கோப்பையைக் கொண்டு போனவள்,தட்டில் கோப்பையை வைத்துவிட்டு ‘வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு நாங்கள்தான் கொடுக்க வேண்டும் ‘ என்றவள் ‘சாந்தினிக்கு மட்டுமே கேட்கத் தக்கதாக ‘இப்பவிருந்து சிவகாமியின் சபதமும் ஆரம்பிக்கிறது ‘என்று தட்டை பிடுங்கி வாங்கியவள் ‘சாகித்தியனுக்கு முன்னாள் தட்டை நீட்டியபடியே,சாகித்தியனின் கண்களை ஊடுருவிப் பார்த்தவள், தலையைத் திருப்பி அடுப்படி வாசலில் நின்ற சாந்தினியை அலட்சியமாக என் கண்களிலிருந்து சபதம் ஆரம்பிக்கிறது என்பது போலபார்த்துவிட்டு குருவுக்கு முன்னாள் தட்டை நீட்டுகிறாள்.

குரு எல்லாவற்றையும் கவனித்தவாறு மௌனமாக தேத்தண்ணிக் கோப்பையை எடுக்கிறான்.

இரண்டு அழகிய வாயாடிகளின் சபதத்தால் இனி அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் வீசப் போவது புயலா தென்றலா?.அர்ச்சனா என்ற இன்னொருத்தியும் இன்னொரு புயலைக் கிளப்புவாளா?

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *