கவிதைகள்

கரம் தடுத்தும் என்னை மீட்டுகின்றாய்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

உடுக்கை இழந்தவன் கைபோல என்றான் வள்ளுவன்
இடுக்கை களைந்து நீ எனக்கு
வள்ளுவத்தை போதித்தாய்

திரைப்படம் கடற்கரை என்று என்னை அழைத்து சென்றாய்
கரைபடா மங்கையாய் என்னை
உன்சிந்தையில் பதித்திட்டாய்

என் ஏழ்மையை பாவித்து நீயும்
என்னை எதுவும் செய்யவில்லை

பாரி தேரினிலே முல்லையை படரவிட்டது போலன்றோ நீ
ஓரிருநாள் தவறிய மேலாடையை
என் தோள்மீது படரவிட்டாய்

கண்ணொடு கண்நோக்கும் உன்
களங்கமிலா பண்பு கண்டேன்

கரம் பிடித்து காதல் செய்ய பல வழிகள் வாய்த்திட்ட போதும்
சிரம் உன் தோள்மீது சாய்த்து
இடையை பற்ற நேர்ந்த போதும்

முகத்தோடு முகத்தைச் சேர்த்து
முத்தமழை பொழிந்திடாமல்
அகத்தில் நீயும் சிம்மாசனமிட்டு
அசைக்க முடியாது அமர்ந்தாய்

கல்லூரிப் படிப்பனைத்தும் கற்று
ஓதித் தேர்ந்தேன் உன்பண்பால்
வெல்ல நம் வாழ்க்கையினை வேலையில் அமர்ந்து விட்டோம்

இன்னும் நமக்கிடையே தடை ஏதும் இல்லை நாம் காதல்செய்ய
புன்னகை மட்டும் செய்தாய் நம்
பெற்றோரிடம் செல்வோமென்று

சாதி மத பொருளாதாரத் தடை
ஏதுமின்றி ஈன்றோரும் இணைய
ஆதிமனிதன் காதல் போல் நாம் அன்பினால் இணந்தோம் இங்கு

இதுவரை எதுவுமே செய்யாமல்
மறைத்து வைத்த மாயம் என்ன
உன்தோள் மீது என் சிரமும் சாய
என்கரம் தடுத்தும் மீட்டுகின்றாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *