கவிதைகள்

இதயமதில் கல்வெட்டாய்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

என்மகனை பள்ளிக்கனுப்பி
அவன் படித்துவரும் அழகை
பார்த்து மகிழ்ந்து பரவசித்தேன்

அந்த வயதில் நானிருந்தபோது
என் வயதுப் பிள்ளைகளெல்லாம்
அவர்கள் தந்தை கைபற்றி

நடந்த போகும்போதெல்லாம்
உங்கள் நினைவும் என் நெஞ்சில்
வந்து வாட்டி வதைக்கும் அப்பா

நீங்கள் இல்லாது போனாலும்
அந்த நினைவு மறையவில்லை
என் நெஞ்சும் அவ்வலி உணர
கண்கள் நீர் சொரிந்தனவே

என்ன படிக்கிறாய் என்றும்
என்ன படிக்க விரும்புகிறாய் என்றும்
என்ன ஆக விருப்பம் என்றும்
கேட்பதற்கு நீங்கள் இன்றி

காட்டாற்று வெள்ளமதில்
அடித்து வந்த மரக்கிளை போல்
கால ஓட்டமது இழுத்து செல்ல
வாழ்வை ஏற்று ஓடினேன் நான்

ஆரம்பக் கல்வி ஓர் இடத்தில்
உயர்நிலைக்கல்வி மற்றோரிடம்
உயர்கல்வி அடுத்த இடமென
படிப்புக்காக நான் பரிதவித்தேன்

நல்ல மலையை தேர்ந்தெடுத்து
நற்கல்லைப் பெயர்த்தெடுத்து
பேருளிகள் சிற்றுளிகள் என்றும்
பல உளிகள் கொண்டு கொத்தி
என்னை நானே செதுக்குதற்கு
நான்பட்ட துன்பங்கள் ஏராளம்

நீங்கள்  மட்டும் இருந்திருந்தால்
கோடைவெயிலில் நடப்பவன்
மர நிழலில் இளைப்பாறல் போல்
ஆறுதலால் மகிழ்ந்து இருப்பேன்

நீங்கள் இன்றிப் போனாலும்
உங்கள் நெஞ்சிருக்கும் அந்நினைவு
நான் வாழும் காலம்வரை
என்றும் நிலைத்தே வாழும
என் இதயமதில் கல்வெட்டாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *