வாழ்வியல் அடையாளம் பதியும் தளம்!… ஜெயசக்தி பத்மநாதன்.

நூல் நயம்:
வாழ்வியல் அடையாளம் பதியும் தளம்
முருகபூபதியின் வெளிச்சம் சிறுகதைத் தொகுதி
ஜெயசக்தி பத்மநாதன் ![]()
வெளிச்சம் 12 சிறுகதைகளின் தொகுப்பு. இலக்கிய உலகம் நன்கறிந்த முருகபூபதி அவர்களால் பல்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டு, முகுந்தன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 159 பக்கங்களில் தெளிவான அச்சுப்பதிப்பிலும் தரமான தாளிலும் வெளியிடப்பட்டுள்ள அடக்கமான பதிப்பு இது.
ஒரு நூலைக் கண்டவுடன் வாசிக்கத்தூண்டுவது, மூன்று விடயங்கள். 01 – தலைப்பு 02- எழுத்தாளன் 03- அட்டைப்படம். இந்த மூன்று விடயங்களும் பார்த்த மாத்திரத்தில், நூலின் உள்ளடக்கம் பற்றிய செய்தியை வாசகனின் மூளைக்கு அனுப்பத்தக்க ஆற்றல் படைத்தன.
வெளிச்சம் அதற்கு விதிவிலக்கல்ல. அட்டைப்பட வடிவமைப்பு, வார்ப்பு, யாருடையது..? என்ற தகவல், தரப்படாதபோதும் அந்த முகப்பு அட்டை, எழுத்தாளரின் எழுத்துவப் பின்புலத்தினை வடிவமைப்புக்குள் – தூரிகைக்குள் கொண்டுவந்து உள்ளத்தில் வெற்றிபெற்றுள்ளதென்றே கூறவேண்டும்.
அந்த அட்டைப்பட அமைவாக்கம் கலைத்துவமாய் மிளிர்கின்றது என்பதைவிட, புத்தக உள்ளடகத்தைச் சிறப்பாக பிரதிபலிக்கிறது எனலாம்.
இந்த நூலிலுள்ள 12 சிறுகதைகளிலும் விரவி நிற்கின்ற விடயங்கள்: இரண்டக வாழ்வு, உள்ளக சோகம், புலம்பெயர் வாழ்வியல், விரைவில் மாற்றத்துக்குள்ளாகும் பெண்ணிய முரண்பாடுகள், பாரம்பரியத்தின் மேன்மை போன்றன. கதைகள் பல்வேறு கருத்துக்களைத் தாங்கி நின்றாலும், அவற்றுக்கப்பால் தனது வாழ்வியல் அடையாளத்தை ஒரு தளத்தில் நிறுவிவிட்டு, முற்றிலும் புதியதான ஒரு வாழ்வியல் தளத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும்போது, ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், நெருக்கடிகள், குமுறல்கள் எழுத்தாளரின் பெரும்பாலான கதைகளில் விரிவி நிற்பதைக்காணலாம்.
வெளிச்சம் என்ற அவரது முதலாவது சிறுகதை, அதற்கு நல்ல உதாரணம். அவுஸ்திரேலியாவில் குழந்தைகளின் T.V. உலகம், கார்ட்டுன் கலாசாரம், நாளாந்த வாழ்வியல் என்பன ஓர் ஈழத்து தந்தையை எவ்வாறு தாக்குகின்றன என்பதை, அந்தச்சிறுகதையில் ஆசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் இயல்பான கதையோட்டம் சிறப்பாக மேற்கோட் குறிக்குள் சில விடயங்களை சூட்சுமுமாக கூறும் திறன் ஆசிரியரின் தனித்துவம்.
ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததன் பின்னால், அவரே ஒரு சிறுகதையின் முடிவில் சொல்வது போல “ நோ எமோஷன் பிள்ளாய்…போயிட்டு வாரும் “ என்று எமக்கு நாமே சொல்லிக்கொண்டு, அடுத்த கதைக்கு பயணிக்கவேண்டியுள்ளது. அது இவ்வாசிரியரின் இன்னொரு எழுத்தாளுமை சார்ந்த வெற்றி எனலாம்.![]()
பாரம்பரிய மேன்மை என்ற மாயயை கடந்து வாழ்வியலின் உண்மைகளை எழுத்தாளன் தரிசிக்கவேண்டும் என்பது, என் கணிப்பு.
இந்த எழுத்தாளருடைய கதைகள் பல பாரம்பரிய சிந்தனையின் பரிமாணங்களாக உருப்பெற்றுள்ளன. விழுமியங்கள், மரபுகள், கலாசாரங்களுக்கு மதிப்பளிக்கும் போற்றும் நிறுவும் தன்மையை அவருடைய அநேக கதைகள் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக அவரது இரண்டாவது கதையான சிகிச்சை என்ற கதையின் கருவில், அந்த இயல்பைத் தெளிவாகக் காணலாம். ஆசிரியரே ஓரிடத்தில் “ ஒவ்வொரு கணவனும் மனைவியும் திருமணமாகி பிள்ளைகள் பெறுமட்டும், தங்களுக்காகவே, தங்கள் இருவருக்குமாகவே வாழவேணும். பிள்ளைகள் பிறந்திட்டால்… பிள்ளைகளுக்காக வாழவேணும். “ என்று கூறுகிறார்.
ஆனால், சிறுகதை தன் குடும்பத்தை உயர்த்திக்கொள்ளப் போராடும் ஒரு மனைவியோடு ஒத்துழைக்கமுடியாத கணவனைச் சித்திரிக்கின்றது. கதையின் இறுதிப்பகுதியில் “இதுதானப்பா உலகம் “ என்று சலித்துக்கொள்வதில், ஆசிரியர் எதைச்சொல்ல வருகிறார் என்பது தெளிவில்லாமல் போய்விடுகிறது.
அந்தப்பெண், தனித்து தனது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொண்டாள் என்பதனால் வந்த சலிப்பா..? அல்லது தனக்குப் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் வராததால் வந்த சலிப்பா என்பது தெளிவில்லாததால், ஆசிரியர் சாதுரியமாக தப்பித்துக்கொள்கிறாரோ..? என்று தோன்றுகிறது.
அவரது ஏனைய சிறுகதைகளில், குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகள் யதார்த்தத்தோடு ஒட்டிப்போகின்ற தன்மையை அவரது எதிரொலி என்ற சிறுகதையில் காணலாம்.
விருந்து என்ற கதை ஈழத்து அரசியல் பேசும் “ பலூன் ஆண்களை “ யும் ஒன்றுமே பேசாமல், மனிதாபிமானத்திற்குப் பங்களிப்புச் செய்யும் தற்காலக் குருத்துக்களையும் தராசில் போட்டு, நிறுத்துக்காட்டுகிறது.
அவுஸ்திரேலிய வாழ்வியலின் செல்வாக்கு, கதைகளிடையே வருவது, அதன் உண்மைத்தன்மைக்கு மேலும் மெருகூட்டுகிறது. உதாரணமாக மக்டொனால்ட்ஸ், நோவொறீஸ், குயில்ட், வாக்யூம் கிளீனர், ஹீ ட்டர், டேக் எவே, கோக், வைன், ஒஸ்டடி, போன்ற சொற்பிரயோகங்கள் அவுஸ்திரேலியப் பின்னணிச்சூழலை விளங்கப்படுத்துவதில் பெருமளவு துணைபுரிகின்றன.
காலமும் கணங்களும் என்ற அவரது இன்னுமொரு சிறுகதை, இலங்கையிலிருந்து முதன் முதலாக அவுஸ்திரேலியா மண்ணில் கால் எடுத்துவைக்கும் ஓர் இளைஞனின் மன எண்ண ஓட்டங்களை அழகுறப் பிரதிபலிக்கின்றது. முகத்தில் அடிக்கும் யதார்த்தங்களை மிக அழகாக அந்தச்சிறுகதை எடுத்துக்காட்டுகின்றது.
ஒவ்வொரு இளைஞரதும் அந்தரங்க சோகம் ஒன்று அக்கதைக்குள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. மனதை நெருடும் மிருதுவான சோகங்களும் பெரிய மனிதர்களின் ஈகோ பிரச்சினையும் அவுஸ்திரேலியக் கலாசாரமும் அவரது ஏனைய சிறுகதைகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
கிருமி என்ற சிறுகதை மனிதக்கிருமி ஒன்றை மக்களுக்கு இனம் காட்டுகின்றது. மழை என்ற அவரது 11 ஆவது சிறுகதை, நம் விழுமிய மேன்மையில் பெருமை கொள்கிறது.
இந்தச்சிறுகதைத் தொகுதியை வாசிக்கின்ற எவரும் தம் வாழ்வின் பெரும்பகுதியைத் தாயக மண்ணில் கழித்துவிட்டுப் புதிய தலைமுறையின் வளர்ச்சியை, புலம்பெயர் மண்ணில் எதிர்கொள்கின்றவராக இருந்தால், உங்களை நீங்கள் இந்த நூலில் இனம் கண்டு கொள்ளலாம்.
“பெண்கள் விரைவில் மாறிவிடுவார்கள், அல்லது மாறிவிடுகிறார்கள் “ என்ற செய்தியை அவரது பல கதைகள் ஒருவித பதட்டத்தோடு சொல்ல விழைகின்றது. மாற்றங்கள் இயல்பானவை. தவிர்க்கமுடியாதவை. ஆரோக்கியமான மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியனவுமாகும். அவற்றை எதிர்கொள்வதில் இருக்கின்ற ஒரு
பதட்டத்தன்மை இந்த எழுத்தாளரின் குரலாக சிறுகதைகள் மூலமாக வெளிப்படுகிறது.
கொம்பியூட்டர் யுகம், இயந்திர வாழ்வியல், புதுக்கவிதை, நவீன ஓவியம், பெண் சமத்துவம் போன்ற மேம்பட்டுவரும் இப்புதிய – வல்லது வாழும் வாழ்வியலில் ஒரு மெலனிய நூற்றாண்டில், மென்மையான பெண்மை, மரபுகள், சத்தியம், நேர்மை, பாரம்பரிய வாழ்வியல், இக்கோட்பாடுகள் எவ்வளவு தூரம் இந்நவீன உலகில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது கேள்விக்குறியே!?
இருந்தபோதும், ஒரு புதிய யுகத்திற்குப் பாரம்பரிய சிந்தனைகளின் இயல்பு, அழகு அதிலிருக்கும் சத்தியம், நேர்மை, சுகானுபவம், அமைதி ,சாந்தி போன்றவற்றை ஆற்றாமையோடு சுட்டிக்காட்டி, ஓர் உரத்த குரலாக இந்த நூற்றாண்டில் ஒலித்து, தனது இருப்பைக்காட்டிக்கொண்டதில், வெற்றிபெற்றுள்ளது இச்சிறுகதைத் தொகுதி.
வெளிச்சம் கடந்த காலத்து அழகியலை, நிகழ்கால யதார்த்தத்தில் நின்றவாறு நேசிக்கிறது, சோகிக்கிறது.
( நன்றி: சிட்னி – கலப்பை இதழ் )
( சிட்னி – கலப்பை இதழில் வெளிவந்த ஆக்கத்தின் மீள்பதிவு )
![]()