கொறோனாவுடன் பேசினேன்!…. சு.இராசரத்தினம். கனடா.

நுண்ணறிவு கொண்ட, நுண் உயிரே
மன்னுயிரை மதி – என்றேன்.
மானிடத்தின் மாண்பு மறந்து
மண்ணுலகின் மகிமை புரியா
மானிடனே!
உனக்கேன் இந்தாசை.
நுண்ணுயிரின் பரிகாசம் இது.
மண்ணுலகின் வாழ்வு மலர,
வளம் பெருக, வற்றாத செல்வம் செழிக்க,
பரமார்த்தம் கொண்டு
பாங்குடனே பணிசெய்யும் – எம்மை
படையறுதல் சரிதானா – என்றேன்.
பதிலுரைத்த என் பதிலை ,
பரிகாசம் செய்தது,
படைத்தலின் பாங்கறியா பறவாதி – உந்தன்
பாழ்படுத்தல் தாங்காது
பாரிடம் வந்தேன் நான்.
எப்போது நீ போவாய் என்றெனக்குப்
பகிர்வாயோ?
இயற்கை படைத்த,
இவ்வுலக உயிர்கள் எல்லாம்
இணைந்து வாழ,
அர்ப்பணம் கொண்டரசர்
அரசளிக்கும் காலமதில்,
இயற்கையின் மயக்கத்தைப்
போற்றிசைத்துப் போகபூமி ஆக்குகையில்
பாழ்வெளிக்குப் பறந்திடுவேன்,
பாங்குடனே வாழ்வீர் அந்நாள்.
வேள்பாரி போன்ற வேந்தர் ஆள்வதெப்போ?
ஆணவச் செருக்கற்ற ஆட்சியாளர்,
அதிகாரக் குறிக்கோளற்ற, அரசதுறை,
ஒன்றே குலம் ஒருவனே தேவன் – என
உலகம் உணர்வதெப்போ?
மானிடனே…!! கேள்…!!!
ஆக்கலும், அருளலும் என் செயல் – அதைக்
காப்பதும் வளர்ப்பதும் உங்கள் பணி.
இதை உள்ளுதல் உங்கள் கையில்
என் பணி எதுவும் இல்லை.
வேள்பாரி போன்றோரை வேரறுத்து
வரோதயரை வழிகெடுத்து
வீணே அலைகின்றீர் ,
இது புரியா மானிடர்க்கு
வாழ்வெதற்கு? உலகெதற்கு?
உணர்ந்து கொண்டேன்.
மானிடத்தை எண்ணி மனம் நொந்தேன்.
வேதனையில் தலை குனிந்தேன்
நிமிர்வ தெப்போ… ……?
சு.இராசரத்தினம். கனடா.
![]()