திரும்பிப்பார்க்கின்றேன்!…. அங்கம்…. 06….. முருகபூபதி.

உள்ளார்ந்த ஆற்றலுக்கு முதுமை தடையில்லை !
முருகபூபதி.
உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன, கடல் கடந்து சென்று அந்நியநாடுகளில் புகலிடம் பெற்றால் என்ன, தங்களது ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்கள்.
அவர்களை ஆபிரிக்காவில் கொண்டுபோய்விட்டாலும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பினாலும் தமது இயல்புகளை மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.
தமிழ் இலக்கிய கலைத்துறையில் நடமாட முடியாத சூழ்நிலையிலும் கட்புலன், செவிப்புலன் மந்தமாகிய பின்னரும் தொடர்ந்து அயற்சியின்றி இயங்கியவர்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா…?![]()
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் வாழ்ந்த நடமாடும் நூல் நிலையம் என்ற பெயரைப்பெற்றவர் இரசிகமணி கனகசெந்திநாதன் ( 1916 – 1977 ) . இவர்தான் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலையும் எழுதியவர். ஆறு ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் வடபகுதியில் வெளியான ஈழகேசரி, ஈழநாடு முதலான இதழ்களிலும் எழுதியிருப்பவர்.
இவர் நீரிழிவு உபாதையினால், தனது கைகளிலும் கால்களிலும் சில விரல்களையும் இழந்திருந்தவர். நடமாட முடியாத நிலையிலிருந்தபோதும், தன்னைப்பார்க்க வருபவர்களிடம் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக இலக்கியம் பேசிக்கொண்டிருந்தவர். புதிய இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து, உற்சாகமூட்டி ஊக்கமூட்டியவர். இவருடைய ஆளுமைப்பண்புகளை கேள்விப்பட்ட தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் கூட
, யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதியால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு வருகை தந்திருந்த சமயம் குரும்பசிட்டிக்கு நேரில் சென்று பார்த்து வியந்தார்.
1977 இல் மரணிக்கும் வரையில் சோர்ந்துவிடாமல் இலக்கியம் பேசியவர் கனக செந்திநாதன். அவருக்கு இலக்கியம்தான் சுவாசம்!![]()
இலங்கையிலும் தமிழகத்திலும் புகழ்பெற்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி ( 1932 – 2011 ) அவர்களும் நீரிழிவு உபாதையினால் பின்னாட்களில் நடக்க முடியாமல் அவதியுற்றார். அவருக்கும் கண்பார்வை மங்கியது. அதனால் அவர் தம்மீது கழிவிரக்கம் கொள்ளாமல், முடிந்தவரையில் இயங்கினார்.
தனது அந்திம காலத்தில் கொழும்பில் வசித்தபோது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது உதவியுடன், தான் சொல்லச்சொல்ல ஆய்வுக்கட்டுரைகளை விமர்சனங்களை, நூல்களுக்கான முன்னுரைகளை எழுதவைத்து வழங்கினார்.
சொல்லிச்சொல்லி எழுதவைப்பதும், எழுதப்பட்டதை படிக்கவைத்து, திருத்தங்கள் மேற்கொள்வதும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்ட சிக்கலான பணி. எனினும் தளர்ச்சியின்றி அவர் எழுதியவற்றை இதழ்களிலும் நூல்களிலும் நாம் படித்தோம்.
கொழும்பில் குறிப்பாக தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை தவிர்க்காமல் கலந்து சிறப்பித்தவர். அவரால் மேடை ஏற முடியாது. ஒரு பெரிய ஆசனத்தில் அவரை அமரவைத்து தூக்கிக்கொண்டு அரங்கினுள் அழைத்துவந்தார்கள். தனது உரையை சபையோர் எவ்வாறு உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதையும் உணரமுடியாத நிலையில் அவரது கண்பார்வை மங்கியிருந்தது.![]()
இவரைப்போலத்தான் தமிழ்நாடு கோயம்புத்தூரில் வதியும் பிரபல இலக்கிய விமர்சகர் கோவை ஞானி. 1935 ஆம் ஆண்டு பிறந்தவர். 1970 களில் புதுக்கவிதை வீச்சோடு எழுந்தபோது, வானம்பாடி இலக்கிய அமைப்பையும் உருவாக்கியதுடன், அதே பெயரில் இதழும் நடத்தியவர்.
மார்க்ஸீயப்பார்வையில் இலக்கியத்தை அணுகியவர். இவருக்கும் நீண்டகாலமாக கண்பார்வை இல்லை. அதனால் அவர் சோர்ந்துவிடவில்லை. மாலை வேளைகளில் தன்னைப்பார்க்க வரும் இலக்கிய நண்பர்களுடன் வெளியே நடைப்பயிற்சியும் மேற்கொண்டு உற்சாகமாக இலக்கியம் பேசியவர். முன்னாள் திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான சிவகுமாரும், கோவைக்கு வரும் வேளைகளில் இவரைச்சென்று பார்த்து இலக்கியம் பேசி வருபவர்.
கோவை ஞானியும் தான் சொல்லச்சொல்ல மற்றவர்களைக்கொண்டு எழுதிக்கொண்டே இருந்தவர்தான்.
கனடாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற முன்னாள் தெல்லிப்பழை மகா ஜனா கல்லூரியின் அதிபர் பொ. கனகசபாபதி ( 1935 – 2014 ) அவர்களும் இறுதிவரையில் இலக்கியம் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருந்தவர். இளைய தலைமுறையினரது
படைப்புகளை படித்து ஊக்கமூட்டியவர். இவரது விஞ்ஞான ரீதியான நூல்கள் சமூகப்பயன்பாடு மிக்கவை.
கனடாவில் தற்போதும் வதியும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. கதிர். பாலசுந்தரம் அவர்களும் தற்போது 90 வயதை கடந்திருப்பவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல்கள் எழுதியிருப்பவர். தனது முதிய வயதிலும் அவர் எழுதித் தொகுத்து வெளியிட்ட அரிய மலர்தான் தங்கத்தாரகை – ஆண்டுகள் 200 யூனியன் கல்லூரி வரலாறு.
இதன் வெளியீட்டு அறிமுக அரங்கு ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் நடைபெற்றது. அந்த மலர் ஆவணமாகவே திகழ்கிறது.
அண்மையில் அவுஸ்திரேலியா சிட்னியில் மறைந்தவர் மூத்த கலைஞரும் எழுத்தாளருமான கலைவளன் சிசு. நாகேந்திரன் (1921 – 2020)![]()
இவர் தனது முதுமைக்காலத்தில் அந்தக்காலத்து யாழ்ப்பாணம், பிறந்த மண்ணும் புகலிடமும், தமிழ்ச் சொற்களின் மொழிமாற்று அகராதி முதலான நூல்களை எழுதியவர். கட்டிடக் கலைஞர் வி. எஸ். துரைராஜாவின் குத்துவிளக்கு ஏ. ரகுநாதனின் நிர்மலா முதலான திரைப்படங்களிலும் நடித்திருப்பவர்.
1960 களில் இலங்கையில் மாநகரம் முதல் கிராமங்கள் வரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவை மேடையேறிய சக்கடத்தார் நாடகத்திலும் தோன்றியவர்.
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், அந்திமகாலம் வரையில் இயங்கியவர். சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவர். ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை விளக்கும் காணொளிக்காட்சியாக இறுவட்டும் வெளியிட்டார். அவர் இந்த அரியபணிகளை மேற்கொண்டது தனது 85 வயதின் பின்னர்தான் என்பது ஆச்சரியமானது. ஆனால், அதுதான் உண்மை!
முதியோர் காப்பகத்தில் தஞ்சமடைந்திருந்த அந்திம காலத்திலும் முன்னர் தாம் எழுதிய அகராதியின் இரண்டாம் பாகத்தை எழுதிக்கொண்டிருந்தவர்.
இன்னும் ஒன்றைரை ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் நூறுவயதையும் கொண்டாடியிருப்பார். இறுதி வரையில் நடமாடிக்கொண்டிருந்தவாறு கலை – இலக்கியம் பேசியவர்!
இவரைப்போன்று மற்றும் ஒருவர்தான் ஈழத்தின் மூத்த கவிஞர் அம்பி. 1929 ஆம் ஆண்டு வடக்கில் நாவற்குழியில் பிறந்தவர், விஞ்ஞான –
கணித ஆசிரியராகவும் பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ் பாடநூலாசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்று, பாப்புவா நியுகினியிலும் சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வசிக்கிறார்.![]()
தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல்களை வரவாக்கிய இவர், அறிஞர் அண்ணாத்துரை தமிழக முதல்வராக இருந்த காலப்பகுதியில் சென்னையில் நடந்த உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் அனைத்துலக கவிதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பரிசு வென்றவர். இதனை அவ்வேளையில் தி. மு.கழகத்தின் பொருளாளராக இருந்த மக்கள் திலகம் எம். ஜி. ஆர். இவருக்கு அணிவித்தார். ஈழத்தின் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை என்று தமிழக கோமல் சாமிநாதனின் சுபமங்களா இதழினால் புகழப்பட்டவர்.
கவிஞர் அம்பிக்கு தற்போது 92 வயது. ஏறினால், கட்டில், இறங்கினால் சக்கர நாற்காலி என்று தனது வாழ்நாளை கடப்பவர். எனினும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்பவர்.
தற்போது இந்த 92 வயதில், அவர் தனது கடந்த காலத்தை நினைவூட்டும் நனவிடை தோய்தல் பாணியில் சொல்லாத கதைகள் என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார்.
எப்படி..?
அவர் சொல்லச்சொல்ல மற்றவர்கள் எழுதி, பதிவுசெய்து இதழ்களில் வரவாக்குகின்றனர்.
பிரான்ஸில் வதியும் ஈழத்தின் மூத்த கலைஞர் ஏ. ரகுநாதன் பற்றி அறிந்திருப்பீர்கள்.
தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை முதலான புகழ்பெற்ற நாடகங்களிலும் கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு, நெஞ்சுக்கு நீதி முதலான ஈழத்து திரைப்படங்கள் உட்பட சில குறும் படங்களிலும் நடித்திருப்பவர்.
தற்போது சிறுநீரக உபாதையினால் பாதிப்புற்றிருந்தாலும், தனது 80 வயது கடந்த பின்னரும் வீட்டிலிருந்தவாறு, தன்னை சந்திக்க வரும் அன்பர்களுடன் வெகு உற்சாகமாக பாடியும் பேசியும் வருகிறார். அவ்வப்போது இவர் சொல்லச்சொல்ல இவரது மனைவி எழுதிக்கொடுக்கிறார். இவருக்கும் ஊக்கமாத்திரையாக இருப்பது கலை இலக்கியம்தான்.
வட இலங்கையில் தொண்டமனாறில் வதியும் குந்தவை என்ற புனைபெயரில் 1960 ஆம் ஆண்டு முதல் எழுதிவரும் சடாட்சரதேவி என்ற இயற்பெயரைக்கொண்டிருப்பவர், தமிழக, இலங்கை
இதழ்களில் எழுதியவர். தற்பொழுதும் இவரது சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. கட்புலன், செவிப்புலனில் குறைபாடுகள் இருந்தபோதிலும், தொடர்ந்தும் எழுதிவருகிறார்.![]()
அவரது வாழ்க்கை பெரும்பாலும் தனிமையிலேயே கரைகிறது. இவரது சிறுகதையொன்றை லண்டனில் வதியும் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியரின் அவைக்காற்றுக்கழகம் மேடையேற்றியிருக்கிறது. ஈழத்து இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தினைப்பெற்றுள்ள குந்தவை, தனது முதியவயதிலும் இலக்கியப்பிரதிகளை வாசிக்கிறார், எழுதுகிறார்.
இங்கு குறிப்பிடப்பட்டவர்களைப்போன்று மேலும் பலர் எமது தமிழ் சமூகத்தில் முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்றே நம்புகின்றோம்.
இயங்காமல் போலிக்காரணங்களை சொல்லிக்கொண்டிருக்கும் பலருக்கும் இந்த ஆளுமைகள் முன்மாதிரியாகவும் வழிகாட்டிகளாகவும் திகழுவார்கள் என்பது மாத்திரம் நிச்சயம்!
—0—
![]()