பழிதாகிப் போவதொன்றே உண்மை!…. சங்கர சுப்பிரமணியன்.

இருப்பதோ ஒரே உயிர்
போகப்போவதோ உறுதியிலும் உறுதி
அதை யாருக்கும் எழுதி வைக்க முடியாது
எடுத்துச் சென்றிடவும் முடியாது
கையிலே காசிருந்தால் அவ்வுயிர்
இங்கே எல்லோருக்கும் சொந்தம்
பணம் ஒன்றும் இல்லையென்றால்
பாவி என்றபெயர் ஒன்றே மிஞ்சும்
ஊர் என்ன உறவென்ன
நாடென்ன மொழியென்ன
மதம் என்ன இனம்தான் என்ன
ஆசையான பெயரும்
அதன் கூட வரும் அடையாளமும்
பட்டமும் படிப்பும்
சுடும்போது இருந்திடுமோ
மண்ணில் இடும்போது உடனிருக்குமோ
வாழுகின்ற நாளில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
கருப்பென்றும் வெள்ளையென்றும்
உயர்வென்றும் தாழ்வன்றும்
ஏழையென்றும் செல்வந்தன் என்றும்
மூடனென்றும் அறிவாளியென்றும்
பல வழிகளிலே பகுத்து பிரித்து வைத்து
ஒட்டாது உறவுகளை தள்ளியே நிற்கவைத்து
பகுத்தறிவுக்கொவ்வா செயல் யாவும்
பதைத்திடாமல் செய்துவிட்டு
பாழும் உயிர் போனபின்னே கண்டதென்ன
பாடையிலே போகும்போது பெற்றதென்ன
பிறந்து வளர்ந்து பெற்ற பேறெல்லாம்
பிணம் என்ற சொல்லாலே பழுதாகிப் போவதொன்றே உண்மை!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()