Featureகட்டுரைகள்

வள்ளுவன் நீதியும் மனு நீதியும்!… சங்கர சுப்பிரமணியன்.

மக்களை மாண்புடையவர்களாக
மாற்றவே நீதியும் நெறிமுறைகளும் வகுக்கப்பட்டன. தமிழில் வள்ளுவன் வகுத்த மறை வையகத்தினர் போற்றும் வண்ணம் வகையுடையதாக வளம் கொழித்து நிற்கிறது. அப்படியிருக்க தமிழ் மன்னர்கள் வள்ளுவன் வகுத்த நெறி இருக்க அதை புறக்கணிக்க காரணம் என்ன? அதை உற்று ஆராயும்போது சில உண்மைகள் வெளிவருகின்றன.

மனுநீதிச் சோழன் என்ற பெயர்பெற்ற எல்லாளன் மனு நீதியை பின்பற்றியதால் அப்பெயர் பெற்றான். கி. மு. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  பாபிலோனியப் பேரரசன் ஹமுராபி காலத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க ஒரு சட்டம் இருந்ததாம். அதாவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற பழிக்குப்பழி வாங்கும் சட்டமே அது. அதே மாதிரியான நீதியை  கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மன்னனாகிய எல்லாளன் ஏன் பின்பற்றினான் என்பது வியப்பாயுள்ளது.

ஒருவேளை திருவள்ளுவப் பெருமகனார் கி. மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே தோன்றி திருக்குறள் மறையைத் தந்திருந்தால் எல்லாள மன்னன் மனுநீயை கையில் எடுத்திருக்கமாட்டானல்லவா?
அந்த அளவுக்கு பொருந்தாத நீதி அது. அதனால்தான் அந்த அநீதியை நிறைவேற்ற அமைச்சருக்கு இடப்பட்டிருந்த கட்டளையை நிறைவேற்ற மனமின்றி அமைச்சர் தன்னையே மாய்த்துக் கொண்டான். எனவே
பெற்ற குழந்தையை தானே தேரில் ஏற்றிக் கொன்றான் எல்லாளன். காரணம் ஆராய்ச்சி
மணி. மக்கள் குறைகேட்க
கட்டியிருந்த மணியை பசு அடித்தது அதன் கன்றை அரசகுமாரன் தேரேற்றிக் கொன்றுவிட்டதால்.

இது ஒரு விபத்து. பசுவின் சொந்தக்காரன் கன்றை தொழுவத்தில் கட்டிவைத்து பாதுகாத்திருக்கவேண்டும். அது அவன் தவறு. அக்காலத்தில்
யாருமே பிராணிகளைக் கொன்று இறைச்சி உண்ணாதவர்களா? பூனை, நாய், ஆடு கோழி போன்றவை தேர் போன்று மற்ற
வாகனங்களில் அடிபட்டு சாகவில்லையா? அந்த மாதிரி குற்றம் புரிந்தோர்க்கு அரசன் தண்டனை கொடுத்தானா என்பது தெரியவில்லை. உயிர் என்றால் எல்லா உயிர்களும் ஒன்றல்லவா? ஆராய்ச்சி மணியை இறக்கமாகக் கட்டியிருந்தால் ஆடு, நாய், பூனை போன்றவைகளெல்லாம்
ஆராய்ச்சி மணியை அடித்திருக்கும் அவற்றிற்கும் நீதி கிடைத்திருக்கும் அல்லவா? பசு மட்டும் புத்திசாலித்தனம் கொண்டதல்ல. ஆடு, நாய் போன்றவைகளும் புத்திசாலித்தனம் மிகுந்தவைகளென்பதை அவை திரைப்படங்களில் நடித்திருப்பதை வைத்தே சொல்லலாம்.

இப்போது நீதிக்கு வருவோம். உயிருக்கு உயிர் என்பது உயர்ந்த நீதி அல்ல. உயிருக்கு உயிர் என்ற நீதியைப் பின்பற்றியதாலேயே மனுநீதிச் சோழன் என்றழைக்கப்பட்டான்.
வள்ளுவன் நீதி உயிருக்கு உயிரல்ல. அந்நீதி,
“தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.” என்று சொல்கிறது.

உயிருக்கு உயிர் என்று மனுநீதி
சொல்கிறது. ஆனால் தன்  உயிர் போனாலும் பரவாயில்லை அதற்காக இன்னொரு உயிரை போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது என்று வள்ளுவனின் நீதி சொல்கிறது. இதனால்தான் வள்ளுவனின் மறை  உலகமே போற்றும் பொதுமறையாக நின்று நிலைத்து நிற்கிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button