சிவாஜியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகலில் தீயுடன் சங்கமமானது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டிலுள்ள இல்லத்தில் கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் வல்வெட்டித்துறை சத்தியில் விசேடமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
விசேடமாக தென்னிந்தியாவிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.
அதேவேளை சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வல்வெட்டித்துறை நகர் பகுதி வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை மூடி கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு இருந்தனர்.
அத்துடன் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, நூறுக்கணக்கான அஞ்சலி பதாகைகளும் கட்டப்பட்டு இருந்தன. அதேவேளை வல்வெட்டித்துறை நகர சபையில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்ததுடன் , நகர சபை கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தன.
மேலும் அமரர் சிவாஜிலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஈ.பீ.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஐக்கிய சோசலிச கட்சியின் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட புகழுடல் வல்வெட்டித்துறை நகரில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பந்தலில் புகழுடல் வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி உரைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெற்றது.
அவ்வேளையில்,’எங்களை கைவிட்டு எங்கே ஐயா சென்றீர்கள் இஎனி எங்களுக் காக பேசுவதற்கு யார் ஐயா இருக்கினம்’ என காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஓலமிட்டு கதறினார்.
இதனையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் சிவாஜிலிங்கத்தின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.
![]()