இலங்கை

ஞானசார தேரரை விடுவிக்கும்வரை கொழும்பில் இருந்து நகரமாட்டோம்

“ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்வரை நாம் ஓயமாட்டோம். விகாரமஹாதேவி பூங்காவில் இருப்போம். அங்கிருந்து விரட்டினால் வேறு இடத்துக்கு செல்வோம்.” என்று பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்தார்.

எமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை கொழும்பில் எல்லா இடங்களிலும் இருப்போம் எனவும் அவர் கூறினார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தியும், அவரின் துறவற ஆடை அகற்றப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரத்துக்கான நடை பயணம் நேற்று முன்தினம் கொழும்பை வந்தடைந்தது.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்னால் குவிந்த பிக்குகள் அங்கு இரவு முழுதும் தங்கினர். கூடாரம் அமைப்பதற்கு பொலிஸார் எதிர்ப்பு; வெளியிட்டும், அதனை அமைத்து முகாமிட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் தங்கி இருப்பதற்கு பொலிஸாரின் கோரிக்கைக்கமைய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அங்கிருந்து பிக்குகள் வெளியேறினர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் கூறியவை வருமாறு,
“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாம் பல நாட்கள் நடந்து வந்தாலும் அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால்தான் ஜனாதிபதி செயலகம் வந்தோம்.

பொலிஸார் நீதிமன்றத்தை நாடிய பின்னர் அங்கிருந்து சென்றோம். பௌத்த சாசன அமைச்சுக்கு வந்தோம். அமைச்சின் செயலாளரை சந்தித்து முறையிட்டோம். அவரிடமும் பதில் இல்லை.

ஞானசார தேரரை விடுதலை செய்யும்வரை விகாரமஹாதேவி பூங்காவில் தங்கி இருப்போம். வேறு வழியில்லை. இங்கு இருந்து விரட்டினால் கொழும்பில் ஆங்காங்கே தங்கி இருப்போம்.

எங்களை வேதனைக்குட்படுத்துவது ஏன்? ஞானசார தேரருக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்க முடியாது?” – என்றார் தேரர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *