இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு முன்னர் தலதா மாளிகையைத் தாக்கியது ஜே.வி.பி.யே

1989 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மீதான தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்றக் குழுவினர், மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர்,

1989 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜே.வி.பியினர் ஸ்ரீ தலதா மாளிகை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மகாநாயக்க தேரர் பொறுப்புடன் தெரிவித்துள்ளார். அவ்வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட சிலர் உயிரிழந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும், பாதுகாவலர்களிடம் இருந்த துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது எல்.ரி.ரி.ஈ. அமைப்பாக இருந்தபோதிலும், அதற்கு முன்னர் அந்தப் புனித பூமியின் மீது தாக்குதல் நடத்தி இரத்தத்தை சிந்திய முதல் பயங்கரவாதக் குழு ஜே.வி.பியே என்பதை மகாநாயக்க தேரரின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது.

தலதா மாளிகை மீது குண்டுவீசவில்லை என்பதால் ஜே.வி.பி குற்றமற்றவர்களாகி விட முடியாது. குண்டுத் தாக்குதலிலோ அல்லது துப்பாக்கிச் சூட்டிலோ மனிதர்களை கொல்வது சமமான குற்றமாகும். அக்காலத்தில் வடக்கில் எல்.ரி.ரி.ஈ. அமைப்பு பயங்கரவாதத்தைப் பரப்பிய அதேவேளை, தெற்கில் அதே செயலையே ஜே.வி.பி செய்தது.

எவ்வாறாயினும் கொலைக்க குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் காலாவதியாகியதில்லை என்பதால், மல்வத்து மகாநாயக்க தேரரின் இந்த அறிக்கையை வலுவான சான்றாகப் பயன்படுத்தி, குறித்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இன்னமும் தாமதமாகிவிடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *