ஞானசாரரை விடுதலை செய்யுமாறு பிக்குகள் கோருவதை நிறைவேற்ற முடியாது ஜனாதிபதியோ அல்லது அரசோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்படப் போவதில்லை

ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்படப் போவதில்லை. இதனால் நடைபயணத்தில் வந்த பிக்குகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. அவ்வாறு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் ஆணைக்கு எதிராகச் செயல்பட்டதாகிவிடும் என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு நடைப்பயணம் நடத்தி பிக்குகள் விடுக்கும் கோரிக்ககள் தொடர்பில், நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது பிக்குகளுக்கும், பொதுமக்களுக்கும், அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக உறுதியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். அதாவது எங்களுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பாருங்கள். அந்த மக்கள் ஆணையின் அடிப்படையில் தான் ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்கிறார். அதேபோல் அரசாங்கமும் மக்கள் ஆணையுடனேயே தீர்மானம் எடுக்கிறது. இந்த மக்கள் ஆணையில் சட்டத்தின் ஆட்சியே கேட்கப்பட்டுள்ளது. அந்த திசையிலேயே நாடு திருப்பப்பட்டுள்ளது. அதை அனைவரும் அறிவர்.
எனவே, நடைபயணத்தில் வந்த பிக்குகளின் கோரிக்கையை உண்மையில் நிறைவேற்றப்படக்கூடியது அல்ல. அவ்வாறு அதனை நிறைவேற்ற முடியாது. அதை நிறைவேற்றினால் ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்கள் ஆணைக்கு எதிராகச் செயல்பட்டதாகிவிடும். அதனால் மக்கள் ஆணைக்கு எதிராகச் செல்லவே முடியாது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றக்கூடிய கோரிக்கை அல்ல. இதை எமது பிக்குகளால் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
![]()