வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர் வாக்களிக்கலாம்; தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

தேர்தல் தொடர்பில் தற்போது சட்டத் திருத்தங்கள் சிலவற்றை செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் விசேட வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் விசேட வாக்களிப்பு வசதிக்கான திருத்தங்களை செய்யும் பணிகள் நடக்கின்றன. இதில் ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்வாங்கப்படவுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
இதன்போது ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
இந்த வருடத்தின் தேருநர் இடாப்பு திருத்தத்திற்கமைய இந்த வருடத்தில் 17,534,397 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகளும் நடக்கின்றன. இந்த வருடத்தில் 41 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன. அவற்றுக்கான நேர்முகத் தேர்வுகள் அண்மையில் நடந்ததுடன், அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
இதேவேளை தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தங்கள் சிலவற்றுக்கான பணிகளும் நடக்கின்றன. விசேட வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் விசேட வாக்களிப்புக்கான திருத்தங்களை செய்யும் பணிகள் நடக்கின்றன. இந்த சட்டத் திருத்தங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக விசேட வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் விசேட வாக்களிப்புகள் தொடர்பான திருத்தங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஊடகவியலாளர்களையும் இந்த விசேட வாக்களிப்பு முறைக்குள் உள்வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகளை வழங்கும் போது வெளிநாடுகள் பின்பற்றும் முறைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடக்கின்றன.அத்துடன் தேர்தல் செலவுனளை கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
அதேபோன்று இலத்திரனியல் இயந்திர வாக்களிப்பு முறைகள் தொடர்பில் ஆராயப்படுகின்றன. ஆனால் அந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக செலவுகள் அதிகம் என்பதுடன் தொழில்நுட்பம் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. ரஷ்யா போன்ற நாடுகளில் நாங்கள் அவதானித்துள்ளோம். அங்கு நகரங்களில் அந்த முறையை செயற்படுத்த முடியுமாக உள்ள போதும் கிராமிய பிரதேசங்களில் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படுகின்றன. இதனால் வெளிநாடுகள் இந்த விடயத்தில் பின்பற்றும் முன்மாதிரிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
![]()