குருக்கள்மடம் புதைகுழியில் மனித எச்சங்கள், மண்டை ஓடு,என்புகள் உட்பட்டவை மீட்பு

குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின்போது மனித எச்சங்கள் நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள் மண்டை ஓடு உள்ளடங்களாக என்புத் தொகுதிகள் உள்ளடங்களாக பல்வேறுபட்ட பொருட்கள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தில் ஊடாக மேற்கொள்ள முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.
குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் இறுத்திநாள் நடவடிக்கைகள் புதன்கிழமை(14) நடைபெற்று முடிந்துள்ளது.
இதன் பின்னர் புதன்கிழமை இரவு அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கைகள் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 6 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கடந்த 9 நாட்களாக இடம்பெற்றன.இதன்போது மனித எச்சங்கள் என நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள், மண்டை ஓடு, என்புகள் உள்ளடங்களாக பல்வேறு பொருட்கள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை நீதிமன்றிலே சான்று பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
எதிர்வரும் காலங்களிலே இந்த அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவுடைய அறிக்கை மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளுடைய அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இதுதொடர்பான முழுமையான விவரங்களை எமக்கு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க முடியும்.
எனினும் தொல்லியல் பேராசிரியர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளினால் எமக்கு பகிரப்பட்ட சில விடயங்களின் அடிப்படையில் குறித்த இந்தப் பிரதேசமானது ஒரு குற்றப்பிரதேசமாக காணப்படுவதற்குரிய பல்வேறுபட்ட காரணிகள் இங்கு காணப்படுகின்றன.
இந்த நிலப் பகுதியானது செயற்கையான கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த இந்த பிரதேசம் அதிலே அமையப்பெற்றதாக நம்பப்படுகின்ற என்புகள், மனித எச்சங்களை நாங்கள் கண்டடைந்த அந்தப் பகுதியானது குப்பை கூழங்கள் இட்டு செயற்கையான முறையிலே மறைக்கப்பட்டிருந்த ஒரு காட்சியையும் எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அகழ அகழ குப்பை வந்தது குப்பைக்கு கீழிருந்துதான் என்புப் பகுதிகளை நாங்கள் கண்டோம் எனவே இந்த மனித புதைகுழியானது திட்டமிட்ட அடிப்படையிலேயே மறைக்கப்பட்டிருக்கின்றது என்ற அந்த கண்டடைவையும் எங்களால் அறிந்து கொள்ள முடியுமாக இருந்தது.
எனவே இந்த விவகாரம் அனைத்தையும் உள்ளடக்கியதான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தில் ஊடாக மேற்கொள்ள முடியும். அதன் பின்னர்தான் இதுபற்றி எம்மால்கூற முடியும். மிகப் பெரும்பாலும் இந்த அறிக்கைகள் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
![]()