இலங்கை

எனக்கு தமிழீழம் வேண்டாம் சிங்கள மக்களே வேண்டும்; மகிந்த தரப்பு கூட்டத்தில் அருச்சுனா கூவல்

வடக்கில் எனக்கு வாக்குகள் இல்லாமல் போகலாம். அது எனக்கு பிரச்சினையில்லை. இந்த அரசியல் எனக்கு தேவையில்லை. தமிழீழமும் தேவையில்லை. எனக்கு சிங்கள மக்களே வேண்டும் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அநுராதபுரத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்தக்கூட்டத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் சிங்கள மக்களுடன் இருப்போம் என்று கூறுமாறு எனது மக்கள் என்னிடம் கூறினர். சிங்கள மக்கள் என்று கூறும் போது மகிந்த ராஜபக்‌ஷ மட்டுமே நினைவுக்கு வருகின்றார். ஒரு காட்டில் சிங்கம் இருக்கலாம், புலி இருக்கலாம். ஆனால் நீங்கள் நரியொன்றை நியமித்துள்ளீர்கள்.

நான் பாராளுமன்றத்திற்கு முதன்முறையாகச் சென்றபோது, என்னைப் பற்றி ‘புலி புலி’ என்று கூறினார்கள். அப்போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த நாமால் ராஜபக்ஷ என்னை வெளியே அழைத்துச் சென்று பேசினார். ‘மச்சான், நீ எங்களுக்கு எதிரா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்று கூறினேன். நான் இப்போது குறிப்பிடும் விடயத்தை கூறினால் வடக்கில் எனக்கு வாக்குகள் இல்லாமல் போகலாம். எனக்கு இந்த அரசியல் தேவையில்லை.

என்னிடம் நாமல் பேசும் போது மச்சான் நீ 2029இல் ஜனாதிபதியாகுவாய் என்று கூறினேன். இங்குள்ள சிங்கள மக்களையும், வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்தால், உங்களுக்கு கார் சாரதியாவதற்கும் நான் தயார் என்று கூறினேன்.

நான் மருத்துவராக இருந்தபோது என் மீது எந்த ஒரு வழக்கும் இருந்ததில்லை. ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு என் மீது 29 வழக்குகள் போடப்பட்டன.

அனுராதபுரம் என்பது வரலாற்று சிறப்புமிக்க பூமி. எல்லாள மன்னன் வீழ்ந்தபோது, துட்டகைமுனு மன்னன் ‘அவர் வீழ்ந்த இடத்தில் யாரும் சத்தம் போடக்கூடாது, அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்’ என்று கூறினார். அவ்வளவு அன்பான சிங்கள மக்களின் முன்னிலையில்தான் நான் பேசுகிறேன்.

இப்போது வடக்கில் மீண்டும் தமிழீழம் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை தமிழீழம் வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. எனக்கு சிங்கள மக்களே வேண்டும். எமது மக்களை உங்களுடன் இணைத்துவிட்டே நான் போவேன். என்ன நடந்தாலும் 2029இல் நாமால் ராஜபக்ஷ தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினையை தீர்ப்பார் என்று நம்புகின்றோம். எங்கள் மக்கள் கொத்தமல்லி ஜனாதிபதியை நம்பி பில்லியன் கணக்கில் பணத்தை கொடுத்தனர்.

இப்போது நாமல் ராஜபக்‌ஷவை உள்ளே போட்டுள்ளனர் என்று சிலர் உற்சாமடைந்துள்ளனர். ஆனால் அவர் 18ஆம் திகதி வெளியில் வருவார். எங்களிடம் வாங்கிய பணத்திற்கு உற்சாகம் கொடுக்க வேண்டாம் என்று அநுர குமாரவை கேட்கின்றோம். இவ்வாறு உற்சாமடைய நாங்கள் பணம் கொடுக்கவில்லை. எமது டஸஸ்போராக்கள் பெருமளவில் இந்த அரசாங்கத்திற்கு பணம் கொடுத்துள்ளர். இவ்வாறு பணம் கொடுத்து நாங்கள் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாந்துள்ளோம். எவ்வாறாயினும் சிறையில் போட்டாலும் இல்லாவிட்டாலும் 2029இல் நாமல் ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவது உறுதியானது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *