மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் எஞ்சிய காலத்தை சிறையில் கழிக்கும் நிலை; ஊழல்வாதிகள் இனி தப்பிக்கவே முடியாது

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தமது எஞ்சிய வாழ்க்கையில் அதிக காலத்தை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமையில் இருக்கின்றனர். அவர்கள் இப்போது இறுதிப் போராட்டத்தின் தற்கொலை தாக்குதல் கட்டத்தை நெருங்கி சிறைக் கதவுகளுக்கு அருகில் வந்துள்ளனர் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் அநுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திகிலியவில் நடத்திய பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு நாட்டை கட்டியெழுப்பும் போது மக்களுக்கும் இதில் பெரும் பங்களிப்பு உள்ளது. இதன்படி இன்று இங்கு கூடியுள்ள மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப தயார் என்ற செய்தியையே கூறுகின்றனர். அரசியலுக்கு அடிப்பணிந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலையும் மாற்ற வேண்டும். அப்பா ஜனாதிபதியென்றால் மகன் ஜனாதிபதியாவது, அப்பா பிரதமர் என்பதால் மகன் பிரதமராகுவது பழைய அரசியல் முறையாகும். அதனை 2024 செப்டம்பரில் மக்கள் மாற்றியுள்ளனர். நாங்களும் அரசியல் முறைமையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்துள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்புகளை நீக்கியுள்ளோம். அந்த பாதுகாப்புகள் மக்களுக்கானது. அதனால் மாற்றங்களை செய்துள்ளோம்.
ஒருகாலத்தில் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க மக்களுக்கு முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அந்த முறைமை மாறியுள்ளது. எவருக்கும் கேள்வியெழுப்பலாம். நாங்கள் புதிய பாதையில் செல்கின்றோம். சிலர் இன்னும் பழைய பாதையில் செல்கின்றனர். அரசியலில் மட்டுமன்றி மக்களிடமும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். நல்லொழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புகின்றோம். மக்கள் சொத்தை திருடியிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற சிந்தனை மக்களிடம் ஏற்பட வேண்டும். திருடினால் பரவாயில்லை என்று கூறும் சிறிய குழுவே அநுராதபுரத்தில் கூடியது. அவ்வாறான சிறிய குழு நாட்டில் இருக்கின்றது. நாங்கள் குற்றவாளிகள், ஊழல் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களுக்கு வசதிகளை வழங்கி அதனை பலப்படுத்தியுள்ளோம். மேலும் தேவையென்றால் சட்டத்தை அமைத்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
நான் கண்களை கட்டிக்கொண்டே ஜனாதிபதியாக இருக்கின்றேன். எந்த திருடன், எந்த ஊழல்வாதியாக இருந்தாலும் எனக்கு தெரியாது. அவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை. கண்களை கட்டிக்கொண்டு அந்தந்த நிறுவனங்களுக்கு வசதிகளையும் அதிகாரங்களையும் கொடுத்துள்ளோம். சகல ஊழல், மோசடிக் காரர்களுக்கும் தண்டனை கொடுக்கும் சமூகத்தை அமைத்துள்ளோம்.
சில மாதங்களுக்கு முன்னர் எங்கே திருடர்களை பிடிக்கவில்லை. எங்கே வாகனத்தில் இருந்த பைல்கள் என்றெல்லாம் கேட்டனர். இப்போது திருடர்களை பிடிப்பதிலும் எல்லைகள் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு வரையறைகள் கிடையாது. எல்லா திட்டங்களையும் தயாரித்து இப்போதே விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு அதன்மூலம் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் பணத்தை மோசடி செய்யும் போது தமது எஞ்சிய வாழ்க்கையில் அதிக காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் இப்போது இறுதிப் போராட்டத்தின் தற்கொலை தாக்குதல் கட்டத்தை நெருங்கி சிறைக் கதவுகளுக்கு அருகில் வந்துள்ளனர் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்த வழக்குகள் பல உள்ளன. தீர்ப்புகள் வழங்கப்படவுள்ள வழக்குகள் பல உள்ளன. புதிதாக தொடரப்பட்ட வழக்குகள் பல உள்ளன.
70 வருடங்களாக ஊழல்வாதிகள் ஒவ்வொரு அரசாங்கமாக மாறி மாறி தப்பித்துக்கொண்டிருந்தனர். இப்போது அவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த அரசாங்கத்தை துரத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அவ்வாறு கூறுபவர்கள் திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள குழுக்களுடன் தொடர்புடையவர்களே ஆகும். இதுவே அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளாகும். மக்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றனர். இனி திருடர்களுக்கு பாராளுமன்றத்தில் இடமில்லாத, அரசியலில் இல்லா முறைமைகளை உருவாக்க வேண்டும். ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லாத சமூகத்தை உருவாக்க மக்கள் முன்வர வேண்டும். இனவாதம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பயணிக்க விரும்பும் மக்களே இருக்கின்றனர்.
![]()