கவிதைகள்
தேநீர் தயாரிக்க முனைகிறாள்…. கவிதை…. முல்லைஅமுதன்

விடியவில்லை.
கண்விழித்து
உற்றுப்பார்க்கமுடியாதபடி
கண்களில் தூக்கம் கலைந்திருக்கவில்லை.
வேலிக்கப்பாலிருந்து
மாணிக்காச்சி
தன் பேரனுக்காக சமையல்
செய்துகொண்டிருந்த
வாசம் மூக்குள் நுழைந்து.
பசியெடுப்பது போல உணர்வு என்னுள்.
வல்லிபுர மாமா சந்தைக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்
அவரின்
மிதிவண்டியின் ‘க்ரீச்’ ஒலி அருகில் கேட்டது.
அப்பா
வயலுக்குப் புறப்பட ஆயத்தமாகிறார்.
அம்மா
அடுப்பை மூட்டி
தேநீர் தயாரிக்க முனைகிறாள்..
வீடும்
பரபரப்பாக ஆயத்தமாகிறது.
இன்னும் விடியவில்லை
தூக்கம் இன்னமும்
கலையாத அசதியுடன்
வேலி அருகில் சிறுநீர்
கழித்துக்கொண்டிருக்கிறேன்.
![]()