இலங்கை

வடக்கு ,கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைகளுக்கும் அநுர அரசிடம் தீர்வு இல்லை

அநுரகுமார அரசாங்கத்திடம் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் இல்லை. அநுரகுமார அரசாங்கத்தின் கடந்த 2 ஆண்டுகள் ஆட்சி என்பது வடக்கு, கிழக்கு மற்றும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்த ஆண்டுகளாகவே உள்ளன.இந்த ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் அரசாங்கத்தினால் பொய்ப் பிரசாரப் பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

எம்.பி. தாஹிர் சுட்டிக்காட்டியபடி, மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் கல்வி சீர்குலைந்துள்ளது. பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. கோடீஸ்வரன் எம்.பி.சுட்டிக்காட்டியபடி ஒலுவில் துறைமுகம், திருக்கோவில், கதிரவெளி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு கடல் அரிப்பு ஏற்படுகின்றது. இதற்கெல்லாம் அரசாங்கத்திடம் எந்தத் தீர்வும் இல்லை.

ஸ்ரீநாத் எம்.பி. சுட்டிக்காட்டுவது போல், மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை குறித்து நீண்டகாலமாக மாவட்ட குழுக்கள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்திடமிருந்து பதிலில்லை. திருக்கோவில் வைத்தியசாலை, பனங்காடு வைத்தியசாலை, நாவிதன்வெளி வைத்தியசாலை ஆகியவற்றில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதற்கும் அரசாங்கத்திடம் தீர்வு இல்லை .

ஸ்ரீநாத் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியபடி, கித்துல் உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் 26,000 ஏக்கர் நிலத்தை செயற்கை நீர்ப்பாசனம் மூலம் விவசாய நிலமாக மாற்ற முடியும். இத்திட்டத்திற்கு வெளிநாட்டு உதவிகளை வழங்கத் தயாராக இருந்தபோதிலும் இத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.

ஸ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, வாழைச்சேனை காகித ஆலையில் 4,000 பேர் பணியாற்றிய நிலையில் தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். தேர்தல் காலத்தில் இவற்றை அபிவிருத்தி செய்வதாக அளித்த வாக்குறுதிகளை இன்று அரசாங்கம் மீறியுள்ளது.
கனிம மணல் அகழ்வு போன்றவற்றை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடல் அரிப்புக்குள்ளாகும் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு நடைபெறுகின்றது. இது தவிர நிலங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன.

சத்தியலிங்கம் எம்.பி. சுட்டிக்காட்டியபடி, மல்வத்து ஓயா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். நிலங்களை வழங்குதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றுடன் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு முறைமையைச் செயல்படுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற அரசாங்கம், செய்வதாக  கூறியவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *