இலங்கை

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரியங்கரவிற்கு எதிராக மாற்றொரு வழக்கு

  1. ஆர்ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிற்காக  (11) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சட்டவிரோதமான முறையில் வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 128,520 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியாளராக விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவரை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரினார்.

அக்கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, இவ்வழக்கின் விசாரணை இறுதி நிலையை எட்டியுள்ள தருணத்தில், புதிதாக சாட்சியாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி கோருவதற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறினார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான தனது உத்தரவை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல, குறித்த விசாரணை அதிகாரியை இவ்வழக்கின் சாட்சியாளராக இணைத்துக்கொள்ள அனுமதி அளிப்பதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த சாட்சியாளரின் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பின், அவற்றை இன்றைய தினத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் பிரதிவாதித் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதிக்கும் ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றி போது, சட்டவிரோதமான முறையில் 3,000 வெசாக் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 128,520/- ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தி “ஊழல்” எனும் குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *