கதைகள்

இரக்க நியமனம்… சிறுகதை…. மா.அன்பரசு

மா.அன்பரசு

“இந்த இரண்டு சாக்லேட்டையும் யாருக்காக வாங்கினாங்க?”
காவல் ஆய்வாளர் ராகவின் குரல் விசாரணை அறையின் அமைதியைக் கிழித்தது. சான்றுப் பொருட்கள் அடங்கிய வெளிப்படையான பையை அவர் மேசையின்மீது வைத்தார். உடைந்த கண்ணாடி வளையல்கள். இரத்தம் படிந்த கைப்பை.
அதற்குள்…

வெயிலில் உருகி வடிவம் கலைந்த இரண்டு டெய்ரி மில்க் சாக்லேட்டுகள்.
ஆயுஷி ஷர்மா அவற்றைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஒன்று… மோகித்துக்கு…”
“இன்னொன்று?”
“…எனக்கு.”
ஒரு கணம் ராகவ் எதுவும் பேசவில்லை.

பிறகு மெதுவாகக் கேட்டார்.
“சாகப்போகிறதுன்னு தெரியாம கூட… உன்னை நினைச்சு வாங்கிய சாக்லேட்.”
“நீ… அவங்களை ஒருத்தரமாவது நினைச்சியா?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
முதல் முறையாக அவளுடைய கண்ணில்கண்ணீர் நடிப்பில்லாமல் விழுந்தது.
*
அதே நேரத்தில்…
சிறைச்சாலையின் பார்வையாளர் அறையில் ஒரு இளைஞன் கம்பிகளுக்கு அப்பால் கையை நீட்டிக்கொண்டிருந்தான்.
அவன் கையில் ஒரு சாக்லேட்.
“அக்கா…”
“இது உனக்கு…”
மோகித்.
பத்தொன்பது வயது.
உடல் மட்டும் வளர்ந்திருந்தது.
மனம் இன்னும் ஐந்து வயதின் வாசலில் நின்றுகொண்டிருந்தது.
அவனுக்கு நீதிமன்றம் தெரியாது.
குற்றம் தெரியாது.
துரோகம் தெரியாது.
அக்காவுக்குப் பிடிக்கும் சாக்லேட் மட்டும் தெரியும்.
அந்தக் காட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் விடக் கொடூரமான சாட்சியாக இருந்தது.

**

எல்லாவற்றுக்கும் ஆரம்பம் மூன்று வாரங்களுக்கு முன்பு…
ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள் நீரஜ் ஷர்மா.
“மேடம், இன்னைக்கு சீக்கிரமா கிளம்புறீங்களா?” ம்
“மோகித்துக்கு சாக்லேட் வாங்கணும்.”
“ஆயுஷிக்குப் பனீர் பட்டர் மசாலா செய்யணும்.”
“அந்த மாலை வீட்டிற்காக அவள் திட்டமிட்ட இரண்டு சிறிய மகிழ்ச்சிகள்… அவளுடைய வாழ்க்கையின் கடைசி திட்டங்களாகிவிட்டன.”
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு…
மூளை ரத்தக்கசிவால் மகேஷ் ஷர்மா இறந்தபோது, இறப்பதற்கு முன் அவர் செய்த ஒரே முக்கியமான வேலை. வீடும்… மெயின் ரோட்டிலிருந்த பிளாட்டும்…
மனைவி நீரஜின் பெயருக்கு மாற்றிவைத்தது.
“நான் இல்லாத பிறகும்… யார்கிட்டயும் நீ கையேந்தாத.”
அந்தக் கையெழுத்து ஒரு குடும்பத்தைப் பாதுகாக்க எழுதப்பட்டது.
அதே கையெழுத்து…
ஒருநாள் ஒரு கொலையின் காரணமாக மாறும் என்று அவர் நினைத்திருக்கவில்லை.
மகேஷின் மறைவுக்குப் பிறகு, இரக்க அடிப்படையில் அதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக நீரஜ் ஷர்மா நியமிக்கப்பட்டாள். அந்த வேலை நீரஜுக்கு சம்பளம் மட்டுமல்ல. கணவன் இறந்த பிறகும் அவர் தன்னை காப்பாற்றி நிற்கிறார் என்ற உணர்வு.
மோகித்துக்கு அது அம்மாவின் சிரிப்பு.

***

ஆனால் ஆயுஷிக்கு மட்டும் அது ஒரு தாயின் வாழ்க்கையல்ல. ஒருநாள் தனக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலையும், சொத்தும். “அப்பா இறந்த நாளிலிருந்து, வீட்டில் எல்லா முடிவுகளும் மோகித்தைச் சுற்றித்தான் நடந்தன என்று அவள் நம்ப ஆரம்பித்தாள். அந்த நம்பிக்கையே மெதுவாக வெறுப்பாக வளர்ந்தது.”
“வீடு யாருக்கு?”
” உனக்கும் மோகித்தும்.”
“சமமா?”
“ஆமாம்.”
“அவனுக்கெதுக்கு?”

சிறிது நேரம் யாரும் பேசவில்லை. தட்டில் இருந்த சப்பாத்தியை மெதுவாகப் பிய்த்துக்கொண்டே ஆயுஷி கேட்டாள்.
“அம்மா… இந்த வேலை நீ எனக்குக் கொடுத்திருக்கலாம் இல்ல?”
நீரஜ் சிரித்தாள். “இது நான் கொடுக்கிற வேலை இல்லம்மா… உன் அப்பா உயிரைக் கொடுத்து வாங்கிக்கொடுத்த வேலை.”
“ஆனா, நான் படிச்சிருக்கேன். நீயும் வக்கீலுக்கு படிக்கிற.”
“உன்னால உன் கால்ல நிக்க முடியும். ஆனா மோகித்தால முடியாது.”
ஆயுஷி எரிச்சலுடன், “எப்பவுமே அவன்தான் உனக்கு முக்கியம்.”
நீரஜ் அவள் கையைப் பிடித்தாள்.

“இல்லம்மா… நீ என் பெருமை. அவன் என் பொறுப்பு. பெருமையை உலகம் பார்த்துக்கும். பொறுப்பை குடும்பம்தான் பார்த்துக்கணும்.”
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு அவள் மெதுவாகச் சொன்னாள்.
“நான் இல்லாத நாளில், இந்த வீட்டை விட மோகித்துக்கு நீதான் பெரிய சொத்து என்று நினைச்சுக்கிட்டுதான் நான் தினமும் வேலைக்குப் போறேன்.”
அந்த வார்த்தைகள் ஆயுஷியின் மனதை மாற்றவில்லை. ஆனால் பின்னர் அவளுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தீர்ப்பாக மாறின.

****

பல்ராம் நேராகச் சொன்னான்.
“இது கொலை.”
“இல்ல.” ஆயுஷி அமைதியாகப் பதிலளித்தாள்.
“அப்பா இறந்தப்போ வந்த வேலை… எனக்குத்தான் கிடைச்சிருக்கணும்.”
சிறிது நேரம் அமைதியாக இருந்து அவள் தொடர்ந்தாள்.
“வீடும்… பிளாட்டும்… எல்லாமே எனக்குத்தான் வரணும்.”
பல்ராம் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
“அதுக்காக உன் அம்மாவைக் கொல்லணுமா?”
ஆயுஷியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
“அவங்க உயிரோட இருக்கிற வரைக்கும்… எனக்கு எதுவும் முழுசா கிடைக்காது.”
அந்தக் குரலில் மகள் பேசவில்லை. பேராசை மட்டும் பேசிக்கொண்டிருந்தது. காதலின் மயக்கமும் இல்லை.
பல ஆண்டுகளாக உள்ளுக்குள் வளர்த்த பேராசை மட்டுமே பேசிக்கொண்டிருந்தது.
மொபைலில் ஆயுஷியின் பெயர் ஒளிர்ந்துகொண்டே இருந்தது. அழைக்கத் துணியவில்லை. தூங்கவும் முடியவில்லை.
காதலுக்கும்…குற்றத்துக்கும்…. நடுவே மனிதன் எவ்வளவு நேரம் நிற்க முடியும் என்று அந்த இரவு அவனுக்கே தெரியவில்லை. “ஆயுஷியை இழந்துவிடக் கூடாது என்ற பயம்தான், பல்ராமை மனிதனிலிருந்து குற்றவாளியாக மாற்றியது.”

*****

காலை எழுந்ததும் பல்ராம் ஹேமந்துக்கு அழைத்தான். அதுவே முதல் தவறு. அடுத்த சில நாட்கள் நீரஜின் அலுவலக நேரம், வீட்டிற்குச் செல்லும் வழி, சிக்னலில் அவர் நிற்கும் நேரமென எல்லாவற்றையும் அவர்கள் கவனித்தனர். ஒரு விபத்தைப் போலத் தோன்றும் கொலையை திட்டமிட்டனர்.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு முன் வழக்கம்போல ஆயுஷிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். நீரஜ் சாலையைக் கடக்க காத்திருந்தாள்.

கைப்பையில் இரண்டு சாக்லேட்.
ஒரு பனீர் பாக்கெட்.
அப்போது ஆயுஷியின் செய்தி வந்தது.
“அம்மா கிளம்பிட்டாங்க.”
அந்த ஒரு வரி…
மூன்று செல்போன்களைக் கடந்து…
ஒரு கணம் சாலை முழுவதும் அமைதியாக இருந்தது.
அடுத்த கணம் வெள்ளை எஸ்யூவி காற்றைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தது.
பிரேக் அழுத்தப்படவில்லை. ஹார்ன் ஒலிக்கவில்லை.
ஒரு மோதல் மட்டும்…சாக்லேட்டுகள் மட்டும் சாலையில் உருண்டு நின்றன.
“அக்கா…”
“போன்…”
“கார்…”
“அம்மா…”
மூன்றாம் நாள் முதல் மோகித் இதைத் தவிர வேறு வார்த்தையே பேசவில்லை.
அவன் கைப்பேசி பேசுவது போல நடித்தான்.
பிறகு கார் ஓட்டுவது போலச் சைகை செய்தான்.
எல்லோருக்கும் அது அர்த்தமில்லாத செயலாகத் தோன்றியது.
ஒரே ஒருவரைத் தவிர.
அது சுரேஷ்.
அடுத்த நாள் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அன்றுவரை அது விபத்து.
அதற்குப் பிறகு…
கொலை.

******

சிசிடிவி.
செல்போன் இருப்பிடங்கள்.
வங்கி பரிவர்த்தனைகள்.
கிளவுட்டில் மீட்கப்பட்ட குறுஞ்செய்திகள்.
ஒவ்வொரு ஆதாரமும் ஆயுஷி கட்டிய பொய்களை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்தது.
ராகவ் மேசையின் மீது இருந்த கோப்பை மூடினார்.
“கொலை செய்றவங்க இரண்டு தப்புதான் செய்வாங்க.”
ஆயுஷி அமைதியாக அவரைப் பார்த்தாள்.
“ஒண்ணு… ஆதாரத்தை விட்டுட்டுப் போவாங்க.”
“இன்னொண்ணு… மனசாட்சியை வீட்டிலேயே விட்டுட்டுப் போவாங்க.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
பிறகு அந்த உருகிய சாக்லேட்டுகளை மீண்டும் அவள் முன்னால் நகர்த்தினார்.
“ஆனா நீ…” “இரண்டையும் விட்டுட்டுப் போயிருக்க.” ஆயுஷியின் விரல்கள் நடுங்கின.
ராகவ் தொடர்ந்தார்.
“இந்த வழக்கை உடைச்சது சிசிடிவியோ… செல்போனோ இல்லை.”
“உன் அம்மா வாங்கிய இரண்டு சாக்லேட்டும்…” “எதையும் புரிஞ்சுக்காத உன் தம்பியும்.” அந்த வார்த்தைகள் ஆயுஷியின் உள்ளத்தை கிழித்தன.
அதே நேரத்தில்…
பல்ராம் நான்காவது நாள் உடைந்தான்.
“திட்டம்…”
அவன் தலையைக் குனிந்தான்.
“அவளோடதுதா சார்.”
நீதிமன்றம் ஆயுஷிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆனால்…
அவளுடைய உண்மையான தண்டனை நீதிமன்றத்தில் தொடங்கவில்லை.
சிறைச்சாலையில் தொடங்கியது.
மோகித் மீண்டும் வந்தான்.
காவலரிடம் கேட்டுப் பெற்ற ஒரு சாக்லேட்டை கம்பிகளுக்குள் நீட்டினான்.
“அக்கா…”
“இது உனக்கு…”
அவனுடைய உலகத்தில் இன்னும் அம்மாவும் இருந்தாள். அக்காவும் நல்லவளாகவே இருந்தாள். ஆனால் அக்காவுக்கோ.
உலகமே மாறியிருந்தது.
மாறாதது தம்பியின் அன்பு மட்டும்.
அந்த அன்பைத் தாங்க முடியாமல் ஆயுஷி கதறி அழுதாள்.
“இரக்கம்” என்ற ஒரு சொல்லுக்குள் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன.
ஆனால்…
“இரக்க நியமனம்” என்ற இரண்டு சொற்களுக்காக, ஒரு தாய் உயிரை இழந்தாள்.
ஒரு காதலன் மனிதத்தன்மையை இழந்தான்.
ஒரு மகள் தனது வாழ்நாளை இழந்தாள்.

எதையும் புரிந்துகொள்ளாத ஒரு தம்பி மட்டும்… தன் அன்பை இழக்கவில்லை.
சிறைக் கதவு மெதுவாக மூடியது. அது இரும்புக் கதவு மூடியது சத்தமல்ல. ஒரு தாய் தனது மகளை நம்பிய கடைசி கணம் உடைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button