இஸ்ரேலிடம் மேற்குகரை குடியேற்ற ஒப்பந்தத்தை மீளப் பெற வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சுமார் 1,200 குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த திட்டங்களுக்கு முக்கிய மேற்கத்திய நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என விமர்சித்துள்ளன.
எனவே குறித்த குடியேற்ற திட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இஸ்ரேலை அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து குடியேற்றங்களும் சட்டவிரோதமானவையாகும்.
பொதுமக்களுக்கு எதிராக குடியேற்றவாசிகளால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வன்முறைகள் மற்றும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மேற்குக் கரையில் உறுதியற்ற தன்மை நிலவும் இத்தருணத்தில், இந்த முடிவு இன்னும் அதிக கவலையளிப்பதாகவும் குறித்த நாடுகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.
குறித்த திட்டங்கள் நம்மை அமைதியிலிருந்து மேலும் தூர விலகச் செய்வதோடு மட்டுமின்றி, இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டையும் மேலும் பலவீனப்படுத்தும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஜெருசலேமின் கிழக்கே உள்ள E1 திட்டமானது தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு பாலஸ்தீன அரசின் இருப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()