பலதும் பத்தும்

ஐவரில் ஒருவர் பட்டினியில் வாடுகிறார்

இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஜியோர்கே சர்கீசியன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதலும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் அன்றாடம் உணர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருமான மட்டம் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும், குறிப்பாகப் பெண்கள் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருந்தாலும், பொருளாதாரத்தை முழுமையாக மீளக்கட்டியெழுப்புவதற்கான பயணம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார். ‘திறன்மிக்க பொருளாதார சீர்திருத்தங்கள்’ தடையின்றித் தொடர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்றவை இலங்கையின் பொருளாதார மீட்புப் பயணத்தைச் சவாலானதாக மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனவே, பொருளாதார மீட்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய தொழில் வாய்ப்புகளைத் துரிதமாக உருவாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button