இலங்கை

ரணில் ஆட்சியில் விடுவிக்க இணங்கிய காணிகளைக் கூட இந்த அரசு விடவில்லை;  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் விசனம்

கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை நாம் அரசாங்கத்துடன் பேசி விடுவித்திருந்தோம்.

கடந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்திலும் பெருமளவான காணிகளை விடுத்திருந்தோம். மேலும் காணிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த வேளை தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , அவற்றை விடுவிக்க முடியாமல் போய்விட்டது.

ரணிலின் ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்த காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை.

அதுபோன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சனைகளை நாமே முதலில் தீர்க்க முயற்சித்தோம். எனது தம்பி காணாமல் ஆக்கப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகள் எனக்கும் தெரியும்.

யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் 1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அவ்வேளை காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில் விபரங்களை சேர்த்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இணைத்து சங்கம் ஒன்றினை உருவாக்கி போராட்டங்களை முன்னெடுத்தோம். அக்காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் சுமார் 600 பேரின் பெயர் விபரங்களை அப்போதைய சந்திரிக்கா அரசாங்கத்திடம் கையளித்தோம்.

மிருசுவில் படுகொலை , கிருஷாந்தி படுகொலை சாரதாம்பாள் படுகொலை தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தினோம். சாட்சியங்களை பாதுகாப்பாக கொழும்பு அழைத்து சென்று சாட்சியம் அளிக்க வைத்தோம்.

இவ்வாறான செயற்பாடுகளை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலைப்புலிகள் பின்னாட்களில் காணாமல் ஆக்கப்படுவதற்கு ஈ.பி.டி.பி யே காரணம் என மக்கள் மத்தியில் பொய்களை பரப்ப தொடங்கினர்.

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக ஈ.பி.டி.பி இருந்தால் , அதற்கான சான்றுகள் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றங்களை நாடி நீதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஈ.பி.டி.பி முயற்சித்த காலத்தில் கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போன்று சில தரப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை தமது அரசியல் நோக்கத்திற்காக கையாண்டு அதனை இன்னமும் தீர்க்க முடியாத பிரச்சனையாக வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button