இலங்கை

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறந்த அறிகுறி

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் குறித்து அவதானம் செலுத்தியே அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் திருப்தியடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அதற்கான காரணமாக, அந்த மக்களின் தனியார் நிலங்களை இராணுவத்தினர் தொடர்ந்து தம்வசம் வைத்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வெளிப்படுத்தினார்.

இவ்வாறான காரணங்களால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளைப் போலவே நடத்துவதாகவும், அவர்களுக்குச் சம உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button