இலங்கை

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் நாமல் ராஜபக்ஷவிடம் மேலதிக விசாரணை; மடிகணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் உள்ளிட்ட 41 உபகரணங்கள் சி.ஐ.டி.யினால் பறிமுதல்

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தில் அமைந்துள்ள 4.3 ஏக்கர் காணியை இந்தியாவின் நிறுவனமொன்றுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியமைக்கு அமைய இடம்பெற்ற பாரிய நிதி மோசடி (கிரிஷ் கொடுக்கல் வாங்கல்) தொடர்பான விசாரணைகளில், நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனையிடுவதுக்கான உத்தரவுக்கமைய மடிகணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் உள்ளிட்ட 41 தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குத் தொடர்பாக, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் பணப்பரிமாற்றத்துடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்த நபர்கள் மற்றும் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களுக்குச் சொந்தமான மேற்படி உபகரணங்களை அரச இரசாயனப் பகுப்பாய்வு பிரிவில் சமர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிவான் அசங்க எஸ். போதரகமவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

குறித்த கொடுக்கல் வாங்கலின் போது ஜேர்மனிய வங்கியொன்றிலிருந்து 1,200,000 யூரோக்களும், அவுஸ்திரேலிய வங்கியொன்றிலிருந்து 1,497,446 யூரோக்களும் உள்நாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றப்பட்டுள்ளமை இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு அறிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இந்த கொடுக்கல் வாங்கலின் போது அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வைத்தியசாலைத் திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு பரிமாற்றப்பட்ட பணத்திலிருந்து 188 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி உள்நாட்டில் சொத்துக்களைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கலின் போது 70 மில்லியன் ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய பறிமுதல் செய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளரான டி.ஏ.ஜி. சில்வா என்ற நபர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குறித்த கையடக்கத்தொலைபேசியின் கடவுச்சொல்லை திறந்த நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். எனது செவை பெறுநர் விசாரணைகளுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவார் என சட்டத்தரணிகளான சஞ்சய மாரம்பே, பசந்த கருணாரத்ன மற்றும் கீத் கருணாரத்ன ஆகிய சட்டத்தரணிகள் குழுவுடன், கையடக்கத்தொலைபேசி உரிமையாளர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், விசாரணைகளின் முன்னனேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிவிப்பதோடு, மேற்படி வழக்கு தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்மாறும் நீதிவான் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button