இலங்கை

பணத் தூயதாக்கல் சட்டமூலத்தில் பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரம் !

பணத் தூயதாக்கல் புதிய சட்டமூலத்தில் பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஊழல் மோசடிகள் தீவிரமடையும். இந்த சட்டமூலம் சட்டமானால் எதுவும் நடக்கலாம்.இந்த சட்டமூலத்திலுள்ள அதிகாரங்களை பயன்படுத்த நீதிமன்றத்தின் அனுமதி கூடத்தேவையில்லை என்பது ஆபத்தானது. எனவே இதனை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கறுப்புப் பண சுத்திகரிப்பை தடுக்க வேண்டும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை பலப்படுத்த வேண்டும் நிதிசார் கொடுக்கல் வாங்கலை அறிக்கையிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.அதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.கடந்த காலங்களிலும் சிறந்த பல விடயங்களுக்கு எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான வெளிப்படுத்தலை பொது கட்டமைப்பின் கீழ் கட்டாயப்படுத்தி அவற்றை வெளிப்படுத்துவதற்கு முன்னரே நாங்கள் எமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சுய விருப்பின் அடிப்படையில் வெளிப்படுத்தினோம்.

பணத் தூயதாக்கல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். இந்த புதிய சட்டமூலத்தில் பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. பொலிஸ் சேவையில் 80000 உத்தியோகத்தர்கள் உள்ளார்கள்.அவர்கள் அனைவருக்கும் தன்னால் நற்சான்றிதழ் வழங்க முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் இயற்றப்பட்டால் பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரம் வழங்கப்படும்.இதனால் ஊழல் மோசடிகள் தீவிரமடையும். இந்த அதிகாரம் மற்றும் பொறுப்பை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள் என்றே நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பணத்தூயதாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவரேனும் ஒருவரின் சொத்தை முதல் கட்டமாக 14 நாட்களுக்கும், அதன் பின்னர் 21 நாட்களுகளுக்கும் முடக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதியை கூட பெற வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டு வந்த போதும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்குங்கள் ,புதிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதற்கு அதிகாரங்களை வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டோம்.இதற்கு தற்போதைய ஜனாதிபதியும்,தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஆதரவளித்தார்கள்.

நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டமூலத்தில் 24 ஆம் பிரிவுக்கமைய குழு ஒன்று நியமிக்கப்படும். இந்த குழு பாராளுமன்றத்துக்கு கூட பொறுப்புக்கூற கடமைப்படவில்லை. அமைச்சரவைக்கு மாத்திரம் அறிக்கையிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இது முறையற்றது.எதிர்மறையான விளைவுகள் இதனால் ஏற்படும்.

அதேபோல் நிதி புலனாய்வு பிரிவுக்கும் எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்துக்கும் எதுவும் அறிவிக்க ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை.புதிதாக உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்படும் போது நாட்டில் கறுப்புச் சந்தை முறைமையே உருவாகும்.

வடக்கு ,கிழக்கு மாகாண மக்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.எமது மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொரு வாரமும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்.

எமது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள்.தமது உறவுகள் பணம் அனுப்பினாலும் விசாரணைக்கு அழைக்கும் தன்மையே காணப்படுகிறது. இந்த சட்டமூலம் சட்டமானால் எதுவும் நடக்கலாம்.பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சொத்துக்கள் மாத கணக்கில் முடக்கப்படலாம்.

வடக்கு ,கிழக்கில் எமது மக்கள் பொலிஸ், இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் நெருக்கடியில் வாழ்கிறார்கள்.பொலிஸாரின் சந்தேகங்களால் பலர் பாதிக்கப்படலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்காது.அப்போது ஆட்சிக்கு வருபவர்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button