நீர்கொழும்பு சிறைக்கலவரம்; தமிழ் கைதிகளை படுகொலைசெய்வதற்கென்றே அரசின் துணையோடு இடம்பெற்ற சிறைக் கலவரங்களிலிருந்து வேறுபடுகிறது

கடந்தகாலங்களில் தமிழ் அரசியல் கைதிகளை படுகொலைசெய்வதற்காக அரசே முன்னின்று அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி, அரசே துணைநின்று அரங்கேற்றிய வெலிக்கடைச் சிறைக்கலவரம், பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் கலவரம், களுத்துறைக் கலவரம் என்பவற்றிலிருந்து அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைக் கலவரம் வேறுபடுவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்தோடு வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும் களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் எனவுந் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 5,6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றுமொருமுறை அரசின் காவல் கட்டமைப்பின் தரநிலையை உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்னரும் இலங்கையின் சிறைகளில் கலவரங்கள் நடந்திருக்கின்றன. அரசே முன்னின்று அரசே திட்டமிட்டு முன்னகர்த்தி, அரசே துணைநின்று அரங்கேற்றிய சிறைக்கலவரங்களில் இருந்து மேற்படி 2026-யூலை நீர்கொழும்பு சிறைக்கலவரம் வேறுபட்டு நிற்கிறது.
1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்.
வெவ்வேறான இரண்டு நாள்களில் 35பேர், 18பேர் என தமிழ் அரசியல் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை தமிழர் மீது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புத்தாக்குதலாகவே கருதப்படுகிறது.
நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்படும் போது, தனது இறுதி ஆசையை குட்டிமணி இவ்வாறு விபரித்தார்.இலங்கை செய்திகள்
“எனது மரண தண்டனையை நிறைவேற்ற முன் என் கண்களை எடுத்து பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்கமுடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்”
சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தப்பிப்பிழைத்தவர்களின் வாக்குமூலங்கள் சான்றுப்படுத்தின.
அப்போதைய அரசின் கட்டமைப்புகள் சிறைக்கலவரங்களையும் சிறைகளில் படுகொலைகளையும் முன்னின்று நடாத்தியதற்கு காலவெளியில் எண்ணற்ற சான்றுகள் காணப்படுகின்றன.
பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் இதற்கு மற்றொரு சான்று. அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் 27 பேர் 2000.10.25 அன்று கொல்லப்பட்டனர். 14 இளைஞர்கள் காயமுற்றனர். சம்பவ தினத்திற்கு முதல் நாள் “புலிக்குட்டிகளின் சதைகளை எங்கள் நாய்களுக்குப் போடுவோம்” என சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகள் முகாமைச்சுற்றி பல இடங்களில் காணப்பட்டதாகவும் குறித்த தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் எனவும் பிந்தினுவேவா படுகொலைகளுக்கு பொலிசாரே பதில் கூறவேண்டும் எனவும் சிலுமின என்ற சிங்களப் பத்திரிகையே செய்தியை வெளிக்கொணர்ந்திருந்தது.
முன்னைய காலங்களில் அரச கட்டமைப்புகளால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இத்தகைய சிறைக்கலவரங்கள் இன்று அதே அரச கட்டமைப்பின் மனித நேயமற்ற, வினைத்திறனற்ற காவல் கட்டமைப்பை உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.
வெலிக்கடையிலும் பிந்துனுவேவாவிலும் களுத்துறையிலும் தமிழர்கள் என்ற நிலையில், கிட்டாத நீதி நீர்கொழும்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிட்டட்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
![]()