இலங்கை

செம்மணிப் புதைகுழி தொடர்பில் சந்திரிகாவிடம் உடன் விசாரணை நடத்தவும்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக் கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடமும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைஇடம் பெற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில்,

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினால் சிறைச்சாலை அதிகாரி ஒருவர்மூலம் கடிதம் ஒன்று தமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் , அந்தக் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அனுப்பி வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் எதனையும் கூறவேண்டாமெனவும், பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சோமரத்ன ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடமும் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று,நானும் செம்மணியோடு சார்ந்த மக்கள் எல்லோரும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்த உயரிய சபையின் ஊடாகக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button