இழிவான செயல்களில் ஈடுபடுவதால் அர்ச்சுனாவை விட்டு விலகிய கஜேந்திரகுமார்!

பாராளுமன்ற ஆசன வரிசையில் தனது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்க்கட்சிப் பக்கத்தில் நான்காவது நிரையில் முதல் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த கஜேந்திரகுமார் எம்.பி.யின் ஆசனம் அந்த வரிசையில் முதலாவது இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுவரை காலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு அடுத்ததாக யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் அமைந்திருந்தது.
ஆனால் அர்ச்சுனா இராமநாதனுக்கு அருகில் உள்ள தனது ஆசனத்தை அரசியல் கட்சி மற்றும் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் வேறு இடத்திற்கு மாற்றுமாறு கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், பொது வெளியிலும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும் என்னைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்து, இழிவான சொற்களைப் பயன்படுத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அண்மைக் காலத்தில் அவரது இந்த நடத்தை மிகவும் மோசமடைந்துள்ளதால், பாராளுமன்ற சபைக்குள் அவர் எனக்கு அருகில் அமர்ந்திருப்பது எனது கவனத்தைச் சிதறடிப்பதுடன், அவ்வாறு அமர்ந்திருப்பது சாத்தியமற்றதொன்றாக மாறியுள்ளது.
குறித்த உறுப்பினர் ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பொதுவாக, இத்தகைய உறுப்பினர்களுக்கு, சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்குப் பின்னரே ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். இருப்பினும், வழமையான நடைமுறைக்கு மாறாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அமருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு, சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னால் அமரவைக்கும் வழமையான நடைமுறையின்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினரை எனக்கு அருகிலிருந்து மாற்றி, இடதுபுறமாக நகர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கஜேந்திரகுமார் எம்.பி எழுத்துமூலம் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கமைய எதிர்க்கட்சிப் பக்கத்தில் நான்காவது நிரையில் முதல் வரிசையில் முதலாவது இடத்திற்கு அவரின் ஆசனம் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் கஜேந்திரகுமார் எம்.பிக்கு அடுத்ததாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஆசனமும் அடுத்ததாக தொழில் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஆசனமும் மாற்றப்பட்டுள்ளது. எனினும் அர்ச்சுனா இராமநாதனின் ஆசனம் ஏற்கனவே இருந்த இடத்திலேயே உள்ளது.
![]()