இலங்கை

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை செப்டம்பர் 7 க்கு ஒத்திவைப்பு; சுமந்திரன் விரிவான வாதம்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு வழக்கு நேற்று புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் இரு மனுக்களும் அதே அமர்வில் நீதிமன்றத்தின் முன் எடுத்துக்கொள்ளப்பட்டன.

வழக்கு விசாரணையின் போது, தவராசா கலையரசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி, கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக அம்சங்களை விளக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான சட்ட வாதங்களை முன்வைத்தார்.

அதேவேளை, இடையீட்டு எதிர்மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீல் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழு ஆஜரானர்.

மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் ஏ.எம்.நசீர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள தொடர்புடைய வழக்குகளும் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இடையீட்டு மனுதாரர்களின் சட்ட வாதங்களும், ஏனைய தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் பின்னர் தொடரப்படவுள்ள நிலையில், வழக்கை 2026 செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினம் இடையீட்டு மனுதாரர்கள் சார்பிலான சட்ட வாதங்களும், தொடர்புடைய வழக்குகளின் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button